ஞாயிறு, 26 மே, 2013

நீங்கள் கோவைக்கு வருகிறீர்களா, ஜாக்கிரதை.


போக்குவரத்து சிக்னல்கள் நகர வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சந்தடி மிகுந்த சாலை சந்திப்புகளில் அவைகளின் பங்கு மகத்தானது. ஆனால் எந்த தொழில் நுட்பமும் அவைகளை உபயோகிப்போரின் பொறுப்பான செயல்களினால்தான் பயன் பெறும்.

சிக்னல்களில் மூன்று கலர் விளக்குகள் இருப்பதை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஒரு ஜோக்கில் ஒரு சிறுவன் சொன்னதை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். அவனுடைய டீச்சர் இந்த டிராபிக் விளக்குகளின் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார்.

அந்த சிறுவன் சென்ன பதில்: பச்சை விளக்கென்றால் நிற்காமல் போகவேண்டும். ஆரஞ்சு விளக்கென்றால் அதிக வேகத்தில் போகவேண்டும். சிகப்பு விளக்கு விழுந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு உச்சகட்ட வேகத்தில் போகவேண்டும் என்று சொன்னானாம்.

கோவையில் ஏறக்குறைய இது மாதிரிதான் நடக்கிறது. சட்டம் என்னவென்றால், ஆரஞ்சு விளக்கு விழும்போது நீங்கள் பாதி தூரம் வந்திருந்தால் போய் விடலாம். நிறுத்துக் கோட்டிற்கு இந்தப் புறம் இருந்தால் ஆரஞ்சு விளக்கு விழுந்தவுடன் வண்டியை நிறுத்திவிடவேண்டும்.

ஆனால் நடப்பது என்னவென்றால் அந்த பள்ளிச் சிறுவன் சொன்னது போல்தான். நீங்கள் சட்டப்பிரகாரம் ஆரஞ்சு விளக்கைப் பார்த்தவுடன் நிறுத்தினால் பின்னால் வருபவன் உங்கள் வண்டி மீது வந்து மோதுவான். கேட்டால் ஆரஞ்சு விளக்குதானே விழுந்திருக்குது. நீ போகவேண்டியதுதானே என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவான்.

சந்திப்புகளில் நிற்கும் போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. லாரிக்காரர்களை "கவனிப்பது" தான் அவர்களின் முக்கிய வேலை.

நாங்கள், அதாவது உள்ளூர்க்காரர்கள் இதற்கு பழகிப் போய்விட்டோம். வெளியூரிலிருந்து கோவைக்கு புதிதாய் வருபவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.