செவ்வாய், 29 செப்டம்பர், 2009

பதிவுலக நாற்றம்!!!

திருவிளையாடல் புராணம் சினிமாவில் பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் என்னவென்றால் ‘’பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நாற்றம் உண்டா’’ என்பதுதான். இங்கு நாற்றம் என்பதின் பொருள் நல்ல மணம் என்பதாகும். ஆனால் தலைப்பில் கொடுத்துள்ள நாற்றம் வேறு. இது ‘’கூவத்தின் நாற்றம்’’.
நான் பதிவுலகத்தில் நுழைந்து ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

என்னுடைய அனுமானம் என்னவாக இருந்த்தென்றால் பதிவுலகம் என்பது மெத்தப்படித்த மேதைகளால் செய்யப்படும் ஒரு காரியம். இங்கு எல்லோரும் நாகரிகம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இங்கு எழுதப்படும் செய்திகளும் எழுத்து நடையும் மிகவும் கண்ணியமாயிருக்கும். இப்படித்தான் நினைத்துக்கொண்டு பதிவுலகத்திற்குள் நுழைந்தேன்.
எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. கொஞ்ச நாள் கழித்து திடீரென்று ஒரு சலசலப்பு. ஓர் நாற்றம் (?). என்னவென்று புரிவதற்கே நான்கு நாட்கள் ஆகிவிட்டது.

பிறகு பல பதிவுகளைப் படித்து நிலைமையை ஒருவாறாக புரிந்து கொண்டேன். என்ன புரிந்தது என்றால் ‘’நிறைய பதிவர்களுக்கும் டாஸ்மாக் ஆதரவாளர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை’’ என்பதுதான். இப்படி எழுத என் மனம் கூசுகின்றது. பதிவர்கள் என்னை மன்னிக்கமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தெருக்குழாய் சண்டை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்த்தில்லை. அங்கு பெண்கள் பேசுவதைக்கேட்டால் பிறகு தண்ணீரையே குடிக்கமுடியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வலையுலக சண்டை குழாய்ச்சண்டையையும் மீறினதாக இருக்கிறது. இப்போது என்னுடைய கவலையெல்லாம் இந்த வலையுலகில் தொடர்ந்து இருக்கலாமா அல்லது மூட்டை கட்டி வைத்துவிட்டு ஓடிவிடலாமா என்பதுதான்!

இருந்தாலும் ஒரு தமிழனாகப்பிறந்துவிட்டு இப்படி பயந்து ஓடுவது தமிழ் இனத்தையே (முறத்தினால் புலியை விரட்டிய வீரத்தமிழிச்சி பரம்பரையல்லவா) அவமதிப்பது போல் ஆகுமே என்று மனதைத்தேற்றிக்கொண்டு பதிவைதைதொடரலாமென்று இருக்கிறேன்.

நான் படித்த பதிவுகளிலிருந்து எனக்கு புரிந்தது என்னவென்றால் இது ஒரு பங்காளிச்சண்டை மாதிரி படுகின்றது. சொத்து பிரிப்பதில் பங்காளிகளுக்குள் எப்போதும் சண்டை வரும். ஆனால் சண்டையின் ஆரம்ப கட்டத்தில் அது பங்காளிச்சண்டைமாதிரியே தெரியாது. சம்பந்தமில்லாத விஷயங்களில் ஆரம்பிக்கும். இங்கும் அப்படித்தான் நடக்கிறது. இப்போது இந்த பங்காளிச்சண்டை சிறிது ஓய்ந்திருக்கிறது. என்னால் இந்த அமைதி கெடவேண்டாம் என்று இத்துடன் முடிக்கிறேன்.

தொடரும....