செவ்வாய், 20 அக்டோபர், 2015

திங்கள், 19 அக்டோபர், 2015

பதிவர் திருவிழாவில் நான் சந்தித்த பதிவர்கள்

                                                Image result for brain diagram

மனித மூளையை கணினிக்கு ஒப்பாகச் சொல்வார்கள். அதாவது மூளையும் கணினியும் செய்திகளைச் சேகரித்து தன் நினைவில் வைத்துக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது கொடுப்பவை. ஆனால் கணினியை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளலாம். ஆண்டுதோறும் புதுப்புது மாடல் கணினிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

என்னுடைய மூளையும் அதைத் தயார் செய்து அனுப்பியபோது நன்றாக வேலை செய்தது. நாளாக நாளாக அதன் செயல் திறன் குறைந்து இப்போது ஏறக்குறைய அதல பாதாளத்திற்குப் போய் விட்டது. சில விஷயங்களில் அது முன்பிருந்தே மெத்தனமாகத்தான் வேலை செய்து வந்து கொண்டிருந்தது. நானும் போன இடங்களிளெல்லாம் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்குமா என்று விசாரித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் இதற்கு மட்டும் உதிரி பாகங்கள் கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.

எனக்கு வெகு காலமாகவே மனிதர்களின் முகங்களையும் பெயர்களையும் சேர்த்து நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. பழைய மாணவர்களையோ அல்லது அறிமுகமானவர்களையோ வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று தோன்றுமே தவிர, அவர் யார் என்று சரியாகப் புரிபடாது. முன்பெல்லாம் ஒரு மாதிரியாகப் பேசி சமாளித்து அவர்களிடமிருந்து விடுதலை பெற்று விடுவேன். இப்போது வயதாகி விட்டபடியால் எனக்கு மனிதர்களை மறப்பதற்கு லைசென்ஸ் வந்து விட்டது.

அதனால் யாரையாவது பார்க்கும்போது அவரைச் சரியாக அடையாளம் தெரியாவிட்டால் தயக்கமில்லாமல் உங்கள் பெயர் மறந்து விட்டதே என்று சொல்லி அவர் பெயரைக் கேட்டு விடுவேன். அவர்கள் பெயரைச் சொல்லும்போதே தாங்கள் இன்னார் என்றும் சொல்லி விடுவார்கள். ஆகவே இப்போது இந்த "பெயர்-முகம்" குழப்பத்தினால் சிக்கல் ஏதும் இல்லை.

ஆனால் இன்னொரு குழப்பம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. யாரையாவது புதிதாகச் சந்தித்தால் அவர்கள் பெயர் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்கள் சொல்லுகிறார்கள். நானும் அதை தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அவர் பெயர் என்ன சொன்னார் என்று யோசித்தால் அவர் பெயர் நினைவிற்கு வருவதில்லை. முன்பெல்லாம் இந்த மாதிரி ஏதாவது நிகழ்வு நடந்தால் அதைப் பற்றி மிகவும் விசனப்படுவேன். இப்போது நான் முதிர்ச்சி அடைந்து விட்டதினால் இந்த மாதிரி நிகழ்வுகளைக் கண்டு கொள்வதில்லை. "போனால் போகட்டும் போடா" என்று விட்டு விடுகிறேன்.

போனால் போகட்டும் போடா பாடலை மறந்து விட்டவர்களுக்காக-


                        

இவைகளை எல்லாம் நான் ஏன் இப்போது விலாவாரியாகச்சொல்லுகிறேன் என்றால் என் புதுக்கோட்டை பதிவர் திருவிழா அனுபவம்தான்.

பதிவுலகத்திற்கு வந்த புதிதில் ஒரு டைரி போட்டு அதில் பதிவர்கள் பெயர், பதிவின் பெயர், இணையவிலாசம் எல்லாம் குறித்து வைத்தேன். பிறகு புரட்டிப்பார்த்தால் எல்லாம் டூப்ளிகேட் பெயர்கள். ஒருவரின் போட்டோவும் உண்மையாக இல்லை. நார் எந்த ஊரில் அல்லது எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனது சிற்றறிவிற்கு எட்டிய வரை முயன்று பார்த்துவிட்டு அந்த டைரியைக் கிழித்துப் போட்டேன்.

பிறகு பதிவர் சந்திப்புகள் வந்தன. நான்கைந்து சந்திப்புகளில் கலந்து கொண்டேன். அப்போது பதிவர்களை நிஜ உருவில் கண்டேன். ஆனாலும் அங்கேயும் இந்த பெயர்-முகம்-தளம் குழப்பம் தொடர்ந்தது. உதாரணத்திற்கு நெல்லைப் பதிவர் சந்திப்பில் ஒருவரைச் சந்தித்தேன். பெயர் என்னவென்று கேட்டேன். பெயர் சொல்ல விருப்பமில்லை என்றார். இது என்னடா வம்பாகிப்போச்சே என்று நகர்ந்து விட்டேன்.

பிறகுதான் தெரிந்தது. அவர் மத்திய அரசில் ஒரு முக்கியமான துறையில் ஒரு பொறுப்பான அதிகாரியாக இருக்கிறார் என்று. அவர் தன் துறைக் கட்டுப்பாட்டுகளுக்குப் பயந்து கொண்டு அந்த மாதிரி பெயர் வைத்திருக்கிறார். ஸ்கூல் பையன், வால் பையன், வெளங்காதவன், காட்டான், இப்படியெல்லாம் பதிவர்களின் பெயர்கள் இருக்கின்றன. என்னால் இவைகளை நினைவில் இருத்திக்கொள்ள முடியவில்லை. ஆகவே இந்தப் பெயர்களை நினைவில் இருத்தி அவைகளை பின் நினைவிற்கு கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டேன்.

சில பதிவர்களை நேரில் தனியாக கண்டு பேசியிருக்கிறேன்.  புலவர் திரு. ராமானுசம் ஐயா, தருமி அவர்கள், திரு. சீனா, ஜிஎம்பி, வை.கோபாலகிருஷ்ணன், இப்படி சிலர் மட்டுமே நினைவில் அழியாமலிருக்கிறார்கள்.

புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவில் நான் அதிகம் புது பதிவர்களைக் கண்டு கொள்வதில் ஆர்வமாக இல்லை. அப்படியும் சில பதிவர்களை புதிதாக அடையாளம் கண்டேன்.

விழா அன்று காலை மூன்று மணிக்கே வழக்கம்போல் எழுந்து விட்டேன். அந்நேரத்தில் மன்றத்திற்குப்போனால் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதால் சும்மா வெளியில் வந்தேன். அந்தத் தெரு முனையில் இரண்டு டீக்கடைக்காரர்கள் அப்போதுதான் பாய்லர் அடுப்பைப் பற்ற வைத்து டீ தயார் செய்வதற்கான ஆரம்ப வேலைகளில் இருந்தார்கள். என்னைப்போல் இன்னும் இரண்டு மூன்று பேர் டீ குடிப்பதற்காக அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள். பதினைந்து நிமிடங்களில் டீ தயார் ஆகியது. டீயைக் குடித்து விட்டு ரூமிற்குத் திரும்பி வந்தேன்.

மணி மூன்றரை. அப்படியும் இப்படியும் திரும்பித் திரும்பிப் படுத்து எப்படியோ ஐந்தரை மணி வரை நேரத்தைப் போக்கினேன். பிறகு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளித்தேன். ஆடைகள் அணிந்த பிறகு மணியைப் பார்த்தால் ஆறரைதான் ஆகியிருந்தது. சரி என்ன ஆனாலும் ஆகட்டும் என்று ரூமை விட்டுப் புறப்பட்டு விழா மண்டபத்திற்கு சரியாக ஏழு மணிக்கு வந்து சேர்ந்தேன். மண்டபத்தில் ஈ, காக்கை இல்லை. அதாவது மண்டபம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. இரண்டு பெண்கள் தரையைக் கூட்டிக் கொண்டிருந்தார்கள்.

மீதி நாளைக்கு.


ஞாயிறு, 18 அக்டோபர், 2015

புதுக்கோட்டை பதிவர் மகாநாடு


இப்பதிவில்தான் புதுக்கோட்டை பதிவர் மகாநாட்டு நிகழ்வுகளைப் பற்றிக் கூறப்போகிறேன்.

ஒரு விழா நடத்துவதென்றால் அதற்கு எவ்வளவு முன்னேற்பாடுகளும் திட்டமிடுதலும் தேவை என்பதை இம்மாதிரி விழாக்கள் நடத்தியவர்கள் அறிவார்கள். அந்த முறையில் திரு. முத்து நிலவன் தலைமையில் ஒரு பெரிய பட்டாளமே இந்த விழாவிற்காகப் பாடுபட்டிருக்கிறது. அந்தக் குழு மிக ஒற்றுமையாகப் பணியில் ஈடுபட்டதை நான் கண்டேன்.

                             

அனைத்து நிகழ்ச்சிகளும் சீரிய முறையில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. விழா சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்ணின் குரல் மிகவும் இனிமையாஆக இருந்தது. அந்தப் பெண் ஒரு பதிவரின் மகள் என்று அறிந்து மகிழ்ந்தேன்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் கம்பீரமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். அவரின் கணீர் குரலும் சரளமான தீந்தமிழும் என்னை மிகவும் கவர்ந்தன. அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் அமர்ந்த பிறகு திரு.முத்து நிலவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அந்த உரையில் அவர் இந்த விழாவை எவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறார் என்பது வெளிப்பட்டது.

முதலில் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய தமிழ் மன் கட்டுரைப் போட்டிகளுக்கான பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. அதன் பிறகு வேறு சில விருதுகளும் பல பதிவர்களுக்கு வழங்கப்பட்டன. பின்பு சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராகப் பேசினார்கள்.

தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர் திரு.ரவிசங்கர் புதுக்கோட்டைக்காரர். அவர் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவத்தை அருமையாக எடுத்துரைத்தார்.

அடுத்துப்பேசிய தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் துணை இயக்குனர் திரு.தமிழ்ப் பரிதி, இணையக் கல்விக்கழகம் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி விரிவாக எடுத்தரைத்தார்.

அடுத்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சுப்பையா அவர்கள் பதிவர் திருவிழாவைப் புகழ்ந்து சில வார்த்தைகள் பேசிய பின்பு அடுத்த பதிவர் மகாநாட்டில் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து செயலாற்றும் என்ற வாக்குறுதி கொடுத்தார்.

சென்ற பதிவர் சந்திப்புகளிலெல்லாம் வந்திருக்கும் பதிவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக வரிசையாக மேடையில் ஏற்றி சுய அறிமுகம் செய்வித்தார்கள். இதற்கு பல மணி நேரம் ஆனதோடு அல்லாமல் கூட்டத்தில் அமைதி காக்க முடியவில்லை. திரு முத்து நலவன் இந்த சந்திப்பில் நூதனமான முறை ஒன்றைக் கடைப்பிடித்தார். நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒரு ஐந்து முதல் பத்துப் பதிவர்களை மேடையில் ஏற்றி சுய அறிமுகம் செய்யவைத்தார்.

இந்த முறையில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் சோர்வு தருவதைத் தவிர்க்க முடிந்தது. இது ஒரு அருமையான திட்டமாக அமைந்தது. பதிவுலகப் பிதாமகர் என்று சொல்லக்கூடிய புலவர் திரு.ராமானுசம் ஐயா அவர்கள் தன்னுடைய உடல் நிலையைக் கருதாது விழாவிற்கு வந்திருந்தது ஒரு தனிச்சிறப்பு. என் பேரில் அவருக்கு ஒரு தனிப் பாசம் உள்ளது. என்னை அவர் பக்கத்திலேயே அமர்த்திக்கொண்டார்.


அவரை மேடைக்கு வரவழைத்து பொன்னாடை போர்த்தி, நினைவுக்கேடயம் தந்து சிறப்பாகப் பெருமைப் படுத்தினார்கள். அதே போல் வலைச்சர ஆசிரியர் திரு சீனா ஐயா அவர்களுக்கும் போன்னாடை போர்த்தி நினைவுக் கேடயம் தந்து கௌரவம் செய்தார்கள். இந்த இரண்டு பேருக்கும் சிறப்புச் செய்தது அனைத்துப் பதிவர்களுக்கும் சிறப்பு செய்ததற்கு ஒப்பாகும்.

பிறகு மதிய உணவு இடைவேளை வந்தது. நானும் புலவர் இராமனுசம் அய்யாவும் சாப்பிடப்போனோம். சாப்பிட்டு முடித்தவுடன் எனக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. இந்திர சபையில் ரம்பையும் மேனகையும் நடனமாடுவதைப் பார்க்க வருமாறு இந்திரன் அழைத்தான். இது என் தினசரி மாமூல் வாடிக்கைதான். ஆதலால் விழாக்குழு பொருளாளரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு லாட்ஜுக்குப் போய்விட்டேன்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பதிவர் திருவிழாவில் புத்தகங்கள் வெளியீடும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சும் மற்ற பதிவர்களின் அறிமுகங்களும் நன்றியுரையும் நடந்தேறியதாகப் பதிவுகளில் படித்துத் தெரிந்து கொண்டேன். தேசீய கீதம் பாடி விழா இனிதே நிறைவேறியது. ஆக மொத்தம் ஒரு அரசு விழா எப்படி நடத்தப்பட வேண்டுமென்று நடைமுறை இலக்கணங்கள் இருக்கிறதோ அதில் இம்மியளவும் மாறாமல் விழா சிறப்பாக நடைபெற்றது. 

சனி, 17 அக்டோபர், 2015

கரும்பு தின்னக் கூலி


                            Image result for கரும்பு

இந்த மாதிரி கரும்பு தின்னக்கூலி கொடுப்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கரும்பையே காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டும். அதை சும்மா கொடுத்து அதைத் தின்பதற்குக் கூலியும் கொடுக்கிறார்கள் என்றால் கசக்கவா செய்யும்?

இப்படி ஒருவர் இந்தக் கலிகாலத்தில் செய்கிறார். அவர்தான் தமிழ் வலைப் பதிவர்களின் ஜாம்பவான், திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


                                    My Photo

அவர் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவைகளில் 40 சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதியவர்கள் சுமார் 255 பேர்களுக்குப்  பரிசு வழங்கியது தமிழ் பதிவுலக சரித்திரத்திலேயே ஒரு மகத்தான சாதனை. அத்தனை பரிசுப்பணமும் அவருடைய சொந்தப் பணம். இதற்காக அவர் யாரிடமும் எந்தவிதமான நன்கொடையும் வாங்கவில்லை.

இந்தப் போட்டியின் முடிவில் அவர் கடந்த மார்ச் மாதம் அவர் பதிவில் வெளியிட்ட இன்னொரு போட்டியின் அறிவிப்பைப் பாருங்கள்.

மீண்டும் ஓர் மிகச்சுலபமான பரிசுப்போட்டி அறிவிப்பு

02.01.2011 முதல் 31.03.2015 வரை நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும் [மீள் பதிவுகள் உள்பட சுமார் 750] ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு + இனி புதிதாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஓர் சிறப்புப்பரிசு அளிக்கப்பட உள்ளது.

மேற்படி போட்டிக்கான ஒருசில எளிய நிபந்தனைகள்:

என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் தங்களுடைய சற்றே மாறுபட்ட பின்னூட்டம் 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் இடம் பெற வேண்டும். 

’அட’ ’ஆஹா’ ‘அருமை’ ’அசத்தல்’ ’பாராட்டுக்கள்’ ‘வாழ்த்துகள்’ ’படித்தேன்’ ‘ரசித்தேன்’ என்ற ஓரிரு வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லாமல், அந்தந்த பதிவுகளுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே சுவையான, மாறுபட்ட, வித்யாசமான கருத்துக்கள் கொண்ட பின்னூட்டமாகவும் அவை அமைந்தால் போதுமானது. 

பிறர் கொடுத்துள்ள பின்னூட்டங்களையே COPY and PASTE செய்து தங்களின் பின்னூட்டமாக அளித்தல் கூடவே கூடாது.

என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் 
தங்களின் பின்னூட்டங்கள்
இடம்பெற வேண்டிய 
இறுதி நாள்: 31.12.2015 



இந்தப் போட்டியில் எந்தக் கஷ்டமும் இல்லை. அவருடைய பதிவுகள் படிப்பதற்கு மிகவும் சுவையானவை. அதை ஏற்கெனவே நான் படித்து பின்னூட்டங்களும் போட்டிருக்கிறேன். அப்படி பின்னூட்டங்கள் போடாமல் விட்டுப்போன பதிவுகளுக்கு இப்போது பின்னூட்டம் போட்டேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னூட்டங்கள் போட்டு அவருடைய போட்டியை முடித்து விட்டேன்.

இந்தப் போட்டியை முழுவதும் முடித்த முதல் பதிவர் நான்தான். அதனால் எனக்கு ஸ்பெஷலாக போட்டியின் கடைசி நாள் வராவிட்டாலும் கூட போட்டிக்கான பரிசை திரு. வைகோ அவர்கள் எனக்காக தயார் செய்து வைத்திருந்தார். நான் புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிற்குப் போகும்போது திருச்சியில் அவர் வீட்டிற்குப் போனதைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

அப்போது அவர் அந்தப் பரிசை, முழுசாக ஆயிரம் ரூபாய், புது ஐம்பது ரூபாய் நோட்டுகளாகத் தேர்ந்தெடுத்து அவைகளை அழகாக கலை நுட்பத்துடன் ஒரு அட்டையில் அடுக்கி, வாழ்த்துச் செய்தியுடன் எனக்குக் கொடுத்தார்.




முன்பக்கம்


பின்பக்கம்

இவைகளை நான் பெரும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவேன்.

இவ்வளவு அலங்காரமாக நம் கோபு சார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு எனக்கு வழங்கப்பட்டுள்ள பரிசு, என் ஒருவனே ஒருவனுக்கு மட்டுமே அல்ல. 

வேறு சில வெற்றியாளர்களுக்கும், இந்தப்போட்டியில் இறுதி வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களுக்குமாக, திரு. கோபு சார், அழகாக வடிவமைத்து தன்னிடம் இப்போதே ரெடியாக வைத்துள்ளார். 

அவற்றையும் என் கண்களால் அவரின் வீட்டில் நான் இருந்தபோது கண்டு மகிழ முடிந்தது.  

தலா ரூபாய் ஆயிரம் வீதம் அவர் இவ்வாறு அழகாக அலங்கரித்து வடிவமைத்து வைத்துள்ள வெற்றியாளர்களில் என் நினைவில் நிற்கும் ஒருசிலர்:

1) ’பூந்தளிர்’ வலைப்பதிவர் திருமதி. சிவகாமி அவர்கள்.

2) ’மனம் (மணம்) வீசும்’ வலைப்பதிவர் திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்

3) ‘மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

இவர்கள் இன்னும் சில பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் போடவேண்டியிருக்கிறது. அதை அவர்கள் போட்டி முடிவு தேதிக்குள் முடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்.

இவர்கள் அனைவரும் இறுதியில் வெற்றிபெறவும், ரூ. 1000 வீதம் நம் அன்புக்குரிய திரு. கோபு சாரிடமிருந்து பரிசினைப்பெறவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வளவு பரந்த உள்ளம் கொண்ட வைகோ அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பதிவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமாய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அப்படியே நான் சுலபமாக வெல்லக்கூடிய இதே மாதிரி போட்டிகளையும் அவ்வப்போது அறிவிக்க அவருக்கு கிருபை செய்ய வேண்டுமாய் கூடுதல் பிரார்த்தனையும் இறைவனுக்கு வைக்கிறேன்.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

புதுக்கோட்டைத் திருவிழா - என் பிரவேசம்



10-10-2015 சனியன்று  (அதாவது பதிவர் திருவிழாவிற்கு முன்தினம்) நான் புதுக்கோட்டை போய்ச்சேர்ந்தபோது மணி மாலை 6. எனக்கு எங்கு ரூம் போட்டிருக்கிறார்கள் என்று சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரி ஏன் வீணாக அலைவானேன், பதிவர் விழா நடக்கும் மன்றத்திற்கே போய் விட்டால் அங்கு விவரம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு ஆரோக்யமாதா மக்கள் மன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தேன்.

இதற்கு முன் நடந்தவைகளைப் பற்றி ஒரு flashback. கமலஹாசன் தெனாலியில் ஒரு  flashback சொல்வாரே< நினைவிருக்கிறதா? அந்த மாதிரி ஒரு
Image result for சுழல்போட்டுக்கொள்ளுங்கள்.

நான் புதுக்கோட்டை போவதென்று முடிவு செய்தவுடனேயே, அங்கு போனால் எங்கு தங்குவதென்று யோசனை செய்தேன். விழாக்குழுவினருக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பினேன். ஒரு பதிலும் வரவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு பல கமிட்டிகள் போட்டிருப்பதாகவும் அதல் வ,வேற்புக் கமிட்டி என்று ஒன்று இருப்பதாகவும் ஒரு பதிவு வெளி வந்தது. அதில் மூன்று பேர்களின் பெயர் கொடுத்து அதில் யாரைத் தொடர்பு கொண்டாலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் என்று போட்டிருந்தது.

நான் திருமதி கீதா அவர்களுக்குப் போன் போட்டுப் பேசினேன். நான் என் தேவையைச் சொன்னதும் ஆஹா, பேஷச் செஞ்சுடறேன் அப்படீன்னாங்க. நான் நூன்று நாள் காத்திருந்தேன். ஒரு செய்தியும் வரவில்லை. இதற்கு நடுவில் நான் எங்கள் ஓய்வு பெற்றோர் சங்க ஆண்டு விழாவிற்காக கிருஷ்ணகிரி சென்றிருந்தேன். அப்போது நினைவிற்கு வந்தது. என்ன புதுக்கோட்டையில் இருந்து ஒரு தகவலும் காணோமே, சரி ஒரு குறுஞ்செய்தி கொடுத்து வைப்போமே என்று செல்போனிலிருந்து திருமதி கீதா அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

இந்த செய்தி அனுப்பிய நேரம் காலை 4.45 மணி. நான் என் வாழ்வில் சந்தித்திராத ஒரு அனுபவம் அப்போது நடந்தது. நான் குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த நொடியில் எதிர் பக்கத்தில் இருந்து பதில் செய்தி. ஐயா, உங்கள் பெயரும் ஊரும் செல்லுங்கள் என்று செய்தி. நான் இந்த இரண்டையும் முதலில் கொடுக்க மறந்து விட்டேன். அந்த இரண்டு தகவல்களையும் கொடுத்தவுடன், ஐயா, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், இப்போதே ஆவன செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு பதினைந்து நிமிடத்தில் அறை முன்பதிவு செய்த ஓட்டலின் பெயர், அறைக்கட்டணம் ஆகிய விவரங்கள் வந்து விட்டன.

இவ்வளவு சுறுசுறுப்பாக விழாக் குழுவினர் தூக்கமில்லாமல் வேலை செய்கிறார்கள் என்றால் விழா நன்றாகவே நடக்கும் என்று எண்ணிக்கொண்டேன். அந்த எண்ணத்தையும் குறுஞ்செய்தி மூலம் கீதாவிற்கு அனுப்பினேன்.

இப்போது flashback முடிந்தது. நிஜத்திற்கு வருவோம். நான் புதுக்கோட்டையில் இறங்கி விழா மன்றத்திற்கு ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு போனேன். சாதாரணமாக நான் சிறிய தூரத்திற்கெல்லாம் ஆட்டோ வைப்பதில்லை. ஆனால் அன்று கொஞ்சம் சோர்வாக இருந்ததினால் ஆட்டோ வைத்தேன்.

மன்றத்தின் வாசலில் இறங்கியதுமே திருமதி கீதா வாசலிலேயே ஏதோ வேலையாக நின்றிருந்தார்கள். என்னைப்பார்த்தவுடன் வரவேற்று மன்றத்திற்குள் அழைத்துச்சென்று திரு முத்துநிலவனிடம் அறிமுகப்படுத்தி விட்டு ஒரு சக தொண்டரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய் லாட்ஜில் விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவரும் அப்படியே என்னைக்கூட்டிக்கொண்டு போய் லாட்ஜில் அறிமுகப்படுத்தி விட்டார். உடனே ஒரு அறை (ரூம்) கொடுத்தார்கள். ரூம் நன்றாக இருந்தது.

                         

ரூமில் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு மணியைப் பார்த்தேன். மணி ஏழுதான் ஆகியிருந்தது. சரி. மன்றத்திற்குப் போய் விழாக்குழுவினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று பொடி நடையாக மன்றம் போனேன். விழாக்குழுவினர் பம்பரம்போல் பல வேலைகளையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பதிவர்களும் வந்திருந்தார்க்ள. திரு.ரமணி, திரு.செல்லப்பா, திரு.கவியாழி கண்ணதாசன் ஆகியாரைச் சந்தித்தேன்.


                 
பிறகு வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது. நல்லவர்கள் வந்தால் மழை வருமல்லவா? அந்த நல்லவர் யாரென்று சொல்ல தன்னடக்கம் தடுக்கிறது. மழை விட்டவுடன் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஓட்டலில் நான்கு இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு ஒரு ஆட்டோ பிடித்து ரூமுக்குப் போய் தூங்கினேன். இட்லிக்குத்தான அநியாய விலை. நான்கு இட்லிக்கும் சேர்த்து 16 ரூபாய் வாங்கினார்கள். சரி, என்ன செய்ய முடியும்? கொடுத்துவிட்டு வந்தேன். எங்கள் ஊரில் அன்னபூர்ணாவில் இட்லி விலை ரொம்பவும் சலீசு. நான்கு இட்லிக்கும் சேர்த்து ஐம்பத்திரெண்டு ரூபாய் மட்டுமே வாங்குவார்கள்.

அடுத்த நாள் சமாச்சாரங்கள் அடுத்த பதிவில்.

புதன், 14 அக்டோபர், 2015

இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு

                            Image result for திருச்ச மலைக்கோட்டை

புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிற்குச்  செல்வதென்று முடிவு செய்தவுடனேயே என்னுடைய பயணத்திட்டத்தில் திரு வை.கோபால கிருஷ்ணன் இடம் பிடித்து விட்டார். திருச்சியில் அவரை சந்தித்துவிட்டுப் பிறகு புதுக்கோட்டை செல்வதென்று முடிவு செய்து அவருக்கும் செய்தி அனுப்பினேன்.

உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதிலைப் பார்த்தவுடன்  "வாங்கோ, வாங்கோ, பேஷா வாங்கோ" என்கிற அழைப்புச் சத்தம் நேரில் கேட்கிற மாதிரியே இருந்தது. அவர் ஒரு பின்னூட்டப்போட்டி வைத்திருந்தது பதிவர்களுக்கு நினைவு இருக்கலாம். அந்தப் போட்டியை நான் நிறைவு செய்ததற்காக அவர் எனக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினார். ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடலாமே என்று திட்டமிட்டேன். அதற்குத் தகுந்த மாதிரி ரயில் டிக்கெட்டுகள் வாங்கினேன்.

திருச்சி ஜங்ஷனில் இறங்கியதுமே அவருக்குப் போன் செய்தேன். ஒன்றாம் நெம்பர் பஸ்சில் ஏறி மெயின்கார்டு கேட் வந்து இறங்குங்கள். நான் வந்து உங்களை "பிக்அப்" செய்துகொள்கிறேன் என்றார். அதே மாதிரி மெயின்கார்டு கேட்டில் இறங்கி ரோடை தாண்டியதுமே அங்கு காத்துக் கொண்டு இருந்தார். என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி நேராக அவர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் "மதுரா கபே" க்கு அழைத்துச் சென்றார்.




திரு வைகோவும் மதுரா கபே 
ஓட்டல் முதலாளி திரு ஸ்வாமிநாத அய்யரும்

அந்த ஓட்டலின் முதலாளி திரு.ஸ்வாமிநாதய்யர் தஞ்சாவூரிலிருந்து வெகு நாட்களுக்கு முன் இங்கு வந்து இந்த ஓட்டலை நடத்திக்கொண்டு இருக்கிறார், அவர் குடும்பம் முழுவதும் அங்கேயே குடியிருக்கிறார்கள். அனைத்து ஐட்டங்களையும் வீட்டில் செய்வது போலவே அவ்வளவு சுவையாகவும் சுத்தமாகவும் செய்கிறார்கள். தலை வாழை இலை போட்டு ஒவ்வொரு பதார்த்தத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுபவர்கள் திருப்தி அடையும் அளவிற்கு பரிமாறுகிறார்கள். சாப்பாடு "அன்லிமிடட்".

நான் சாப்பிட்ட அன்று பீட்ரூட் பொரியல், புடலங்காய் கூட்டு, கடாரங்காய் ஊறுகாய், அப்பளம், வடை,பாயசம், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம், தயிர், மோர் ஆகியவை பரிமாறப்பட்டன. அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தன. நான் வழக்கமாக சாப்பிடுவதைப்போல் இரண்டு மடங்கு சாப்பிட்டேன்.

சாப்பிட்ட பிறகு வைகோ அவர்களின் வீட்டிற்குப் போனோம். அங்கு அவர்கள் எனக்கு மாலை மரியாதைகள் செய்து திக்கு முக்காடச் செய்துவிட்டார். அத்தோடு அவர் வைத்திருந்த போட்டிக்கான பரிசையும் கொடுத்தார்.



இந்தப் பரிசைப் பற்றின தகவல்கள் தனிப்பதிவாக வரும்.


நான் வைகோ அவர்களுக்குச் செய்த பதில் மரியாதை

இவ்வறு பரிசு மழையில் மூச்சு முட்டிப்போன நிலையில் அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறீர்களா என்று கேட்டவுடன் அவர் அறையில் படுத்துவிட்டேன். ஏசி அறை. பயணக் களைப்பு. பிறகு சொல்லா வேண்டும். ஒரு மணி நேரம் சோர்க்கத்திற்குப் போய்த் திரும்பினேன்.

எழுந்து முகம் கழுவி வந்து உட்கார்ந்ததும் சூடாக பஜ்ஜி, இன்னும் பல பலகாரங்கள் வந்து விட்டன. முடிந்தவரை அவைகளைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு வந்த டிகிரி காப்பியைக் குடித்தேன். மணி மூன்றரை ஆகிவிட்டது. உடனே புறப்பட்டால்தான் புதுக்கோட்டை மாலைக்குள் போய்ச்சேர முடியும். அதனால் அவர்களிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

வைகோ அவர்களின் வீட்டிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டேண்ட் இரண்டு பர்லாங்க் இருக்கும். என்னை ஆட்டோவில் ஏற்றி அங்கு கொண்டு விடுகிறேன் என்று வைகோ அடம் பிடித்தார். ஐயா, எனக்கு வழி நன்றாகத்தெரியும், நான் பத்திரமாக நடந்து போய்விடுவேன் என்று பல முறை வற்புறுத்திக் கூறியதால் அரை மனதாக என்னைத் தனியாகப் போக விட்டார். அப்போதும் லிப்டில் என்னுடன் கீழே இறங்கி வந்து "பார்த்துப்போங்கோ, பார்த்துப்போங்கோ," என்று பல முறை பத்திரம் சொல்லி என்னை வழியனுப்பினார்.

சில அடிகள் எடுத்து வைத்தவுடன் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே பின்னால் வந்து விட்டார். என்னவென்றால் அவர் வீடு இருக்கும் வீதி முனையில் ஒரு கருப்பராயன் கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். அந்த கருப்பராயனையும் தரிசனம் செய்து விட்டுப் போங்கோ என்று ஒரு வேண்டுகோள். அப்படியே செய்து விட்டு சத்திரம் பஸ் ஸ்டேண்ட் போய்ச்சேர்ந்தேன். உடனே ஒரு டவுன் பஸ் திருச்சி மத்திய பஸ் ஸ்டேண்ட் செல்லப் புறப்பட்டுக்கொண்டு இருந்தது. அதில் ஏறி எந்த விதமான சிரமமும் இல்லாமல் திருச்சி மத்திய பஸ் ஸ்டேண்ட் போய்ச் சேர்ந்தேன்.

உடன் பிறந்தவர்கள் கூட இவ்வளவு பரிவுடன் ஒருவரை கவனிக்க மாட்டார்கள். அவ்வளவு பரிவுடனும் பாசத்துடனும் என்னை உபசரித்த திரு வைகோ அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. அவருக்கு என் நன்றியை பல முறை சொல்லிக்கொள்கிறேன்.

திங்கள், 12 அக்டோபர், 2015

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு


வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி
இப்பொழுதுதான் புதுக்கோட்டையிலிருந்து திரும்பினேன். பதிவர் திருவிழா பற்றி அடுத்த பதிவர் திருவிழா வரை எழுதுவதற்கு சமாச்சாரங்கள் இருக்கின்றன. ஆனாலும் எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கொட்டி அவியல் பண்ணினால் தனித்தனி நிகழ்ச்சிகளின் சுவை தெரியாமல் போய்விடும் அல்லவா?

அதனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தருகிறேன். (எனக்கும் பதிவுகளின் எண்ணிக்கை கூடவேண்டும் அல்லவா?

முதலில் இந்த மாகாநாட்டின் மொத்த விளைவைக் கூறுகிறேன். விழா மகத்தான் வெற்றி. திரு கவிஞர் முத்து நிலவனுக்கும் அவருடன் பணியாற்றிய விழாக்குழுவினர் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போதைக்கு சில படங்கள் மட்டும் . மற்ற விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரும்.


விழா நாயகன் கவிஞர் முத்து நிலவன்


வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்


வருகைப் பதிவு மும்முரமாக நடைபெறுகிறது


இவங்கதான் விழாவின் வெற்றிக்கு முழுக் காரணம்
(உணவுக் குழுத் தலைவி)

சகோதரி ஜெயலட்சுமி

வியாழன், 8 அக்டோபர், 2015

பதிவர் திருவிழா அழைப்பிதழ்


எனக்கும் புதுக்கோட்டை பதிவர் திருவிழா அழைப்பிதழ் இன்று 8-10-2015 மாலை வந்து சேர்ந்தது. விழாக்குழுவினருக்கு நன்றி.






        


        

அழைப்பிதழ் உறை படம் மட்டுமே என் கேமராவில் எடுத்தது. மற்ற இரண்டு படங்களும் தமிழ் இளங்கோ அவர்களின் வலையிலிருந்து சுட்டது.

பிரயாண ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன.

தமிழ் பதிவர் அடையாளத்தைப் பதிவில் யாருடைய அனுமதியும் கேட்காமலேயே போட்டு விட்டேன். பார்ப்பதற்கு எப்படியிருக்கும் என்று பதிவர்கள் அனுமானிக்க உதவும் என்று நினைக்கிறேன். பதிவர் சந்திப்பில் இது அனுமதிக்கப்பட்டால் முறையான லோகோவின் நிரல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பதிவர் சங்கம் தேவையா?

புலவர் இராமாநுசம் அவர்கள் நீண்ட நாட்களாகவே பதிவர்களுக்கு ஒரு சங்கம் தேவை என்று வலியுறுத்திக்கொண்டு வருகிறார். நடக்கப்போகும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் இதைப்பற்றி விவாதிக்கலாமா? இது பற்றி நான் முன்பு ஒரு முறை பதிவிட்டதை மீள் பதிவு செய்கிறேன்.

பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது. கூகுளாண்டவர் புண்ணியத்தாலே நாம் எல்லோரும் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறோம். கூகுள் பஸ் புஸ் ஆனதைப்போல பதிவுகளும் நித்திய கண்டம் பூர்ணாயுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, புரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் நமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு தேவைப் பட்டதால் உருவான அமைப்புகள். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அவரவர்கள் பாதுகாப்பைக் கருதி சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கோவையில் நடைப் பயிற்சியாளர்களும் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பல விதமான பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால் கனவுலகப் பயணிகளான பதிவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு தேவைப்படுகிறது? பதிவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு உருவாக்குவது தேவை. இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஈரோடு பதிவர் சங்கமம் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறது. நெல்லையில் திரு. சங்கரலிங்கம் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னையில் பதிவர் சந்திப்பு அவ்வப்போது நடக்கிறது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது. அங்குதான் பதிவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னைப் பதிவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க முயன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது பல பதிவர்கள் அறிந்ததே.

பதிவர்கள் கலந்துரையாடல்களுக்காக மட்டும், எந்த வித சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத அமைப்புகள்தான் வெற்றிகரமாக செயல்படும்.

21 கருத்துகள்:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
    பதிலளிநீக்கு
  2. //நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, பிரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் தமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.//

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
    பதிலளிநீக்கு
  3. V.Radhakrishnan said...

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.

    சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.
    பதிலளிநீக்கு
  4. தான் தன் சுகம் தன்குடும்பம் என இல்லாது
    பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை
    எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்
    தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள்
    கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை
    தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது
    சரியெனத்தான் எனக்குப் படுகிறது
    த.ம 3
    பதிலளிநீக்கு
  5. ஏன் பதிவர்களுக்காக ஒரு சங்கம் முழுமையாக அமைக்கப் பெறக்கூடாது..?

    http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.html
    பதிலளிநீக்கு
  6. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  7. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  8. திருவாரூர் உள்ளிட்ட "தஞ்சை, நாகை மாவட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு" வைத்து மாதநதோறும் சந்திப்புகள் செய்தோம். பெரும் எழுத்தாளர்களை அழைத்து சில ஆண்டு விழாக்கள் நடத்தினோம். சுமார் 12, 13 ஆண்டுகளுக்குப் பின் அந்த அமைப்பே இல்லை.
    பதிலளிநீக்கு
  9. Palaniappan Kandaswamy

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?
    பதிலளிநீக்கு
  10. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...

    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,
    பதிலளிநீக்கு
  11. //ஜோதிஜி திருப்பூர் said...
    Palaniappan Kandaswamy

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//

    இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.

    தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய முந்தைய பதிவையும் பார்த்து விடுங்களேன்.
    பதிலளிநீக்கு
  12. //இராஜராஜேஸ்வரி said...
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//

    சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?
    பதிலளிநீக்கு
  13. அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    பதிலளிநீக்கு
  14. //cheena (சீனா) said...
    அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    பதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பதிவர்களில் பல சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுகளில் இதைப்பற்றி விழிப்புணர்வு பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக அமையும்.

    நீங்கள் வலைச்சரம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
    பதிலளிநீக்கு
  15. தவறு இல்லையென்றே நான் கருதுகிறேன்,பின்னாளில்
    பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!
    பதிலளிநீக்கு
  16. நாம் நன்றாகத் தானே போய்க் கொண்டுள்ளோம். இதில் சங்கம் ஏன்?.சங்கம் வந்து ஊர் இரண்டுபட வேண்டாம்.
    வேதா. இலங்காதிலகம்.
    பதிலளிநீக்கு
  17. நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை..


    உங்கள் கருத்துக்காக

    காதல் - காதல் - காதல்
    பதிலளிநீக்கு
  18. //எனக்கு பிடித்தவை said...
    நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை..
    உங்கள் கருத்துக்காக
    காதல் - காதல் - காதல்//

    புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.
    பதிலளிநீக்கு
  19. கைபுள்ள ரேஞ்ஜில் சங்கம் ஆகிவிட போகிறது.

    ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !
    பதிலளிநீக்கு