வெள்ளி, 31 ஜூலை, 2015

கஞ்சி வரதப்பா ! எங்கே வருதப்பா?

                               Image result for விண்டோஸ் 10
கஞ்சி வரதப்பா என்று ஒருத்தன் சாமி கும்பிட்டானாம். பக்கத்தில் பசியால் வாடிக்கிடந்த ஒருவனுக்கு "கஞ்சி வருதப்பா" என்று கேட்டதாம். உடனே அவன் எங்கே வருதப்பா என்றானாம்.

அது மாதிரி ஆகிப்போச்சு என் கதை. விண்டோஸ் 10 வருது வருது என்று இரண்டு நாட்களாக இரவும் பகலும் காத்திருந்து தூக்கம் போனதுதான் மிச்சம். ஒன்றையும் காணோம். வேற வேலை எதுவும் ஓட மாட்டேங்கிறது.

இப்ப லேடஸ்ட் செய்தி என்னவென்றால் அது வருவதற்கு வாரக்கணக்குல் அல்லது மாதக் கணக்கில் ஆகலாம் என்கிறார்கள். இதை வீண்டோஸ் 10 புரொக்கராமை தேனாம்பேட்டை காங்கிரஸ் கிரவுண்டில் கொடுப்பதாக மைக்ரோசாப்ட் காரன் சொல்லியிருந்தால் அப்துல் கலாம் இறுதிச்சடங்குக்கு ஒருவரும் போயிருக்கமாட்டார்கள்.

போகட்டும். யாராச்சும் இந்த விண்டோஸ் 10 புரொக்ராமை இன்ஸ்டால் பண்ணிட்டீங்களா? சொன்னீங்கன்னா நான் வயித்தெரிச்சல் பட தோதாயிருக்கும்.

புதன், 29 ஜூலை, 2015

புலி வருது புலி வருது வந்துட்டே இருக்கிறது.

                               Image result for windows 10
விண்டோஸ் 10 ஜூலை மாதம் 29ந் தேதி வருகிறது என்று உலகம் பூராவும் மைக்ரோ சாப்ட்காரன் தண்டோரா போட்டான். இண்ணைக்கு 29 ந் தேதி வந்துட்டுது. விண்டோஸ் 10 ஐத்தான் காணோம். நெறயப் பேருக்கு கொடுக்கோணுமாம். அதனால மெதுவாத்தான் கொடுப்பானாம்.

நான் பல் போன வாயை அகலமாகத் தொறந்து வச்சுட்டுக் காத்திருக்கேன். ஓசியில கொடுக்கான்னா காத்துத்தானே ஆகணும்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

நைனா கீதா?

                                  Image result for சென்னை
இந்த தலைப்பு என்னன்னு புரியுதா? புரிஞ்சா நீங்க நிச்சயம் வேலூர், கடலூர்க்காரரா இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக, "நைனா கீதா" அப்படீன்னா "அப்பா இருக்கிறாரா?" என்று அர்த்தம். கோயமுத்தூர்ல கிராமத்தில போய் இப்படிக் கேட்டா என்னமோ இந்தப் பய நம்மளைத் திட்டறான்னுதான் நினைப்பாங்க.

கோயமுத்தூர்ல இந்த வார்த்தை கிடையாது. இது ஒரு வட்டார வழக்கு. குறிப்பாக வேலூர் பக்கம் இது மிகவும் மரியாதை கலந்த வார்த்தை. ஆனால் அது கோயமுத்தூர்க்காரனுக்கு விளங்காது. அவனை இப்படிக் கூப்பிட்டால் அவனுக்கு எரிச்சல்தான் வரும். இங்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் ஏறக்குறைய காலேஜ் பசங்க ஒருத்தருக்கொருவர் "மச்சீ" அப்படீங்கறாங்களே அந்த மாதிரி.

இப்படியான வட்டார வழக்குகளுக்கு அந்தந்த வட்டாரங்களில்தான் மரியாதை. இப்படியான பல வட்டார வழக்குகளைக் கண்டு நான் குழம்பியிருக்கிறேன். சென்னையில் "இன்னா நாய்னா" என்பது ஒரு வகை மக்களின் அன்பான உரையாடல். "இன்னா சார்" என்றால் அது மிகப்பெரிய மரியாதை. கோயமுத்தூரில் இதற்கு சரியான வார்த்தை "என்னங்க ஐயா" என்பதாகும்.

நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது  சுற்றுலா போகும்போது கடலூர் பக்கம் ரயிலில் போய்க்கொண்டிருந்தோம். அப்போது அங்கு சில விவசாயிகள் சாக்கில் ஏதோ கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். சும்மா ஆர்வத்தில் சாக்கில் என்ன இருக்கிறது என்று கேட்டோம். அவர்கள் "மல்லாட்டெ" என்று பதில் சொன்னார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சாக்கைத் தொட்டுப் பார்த்தோம். அதற்குள் இருப்பது நிலக்கடலை என்று தெரிந்தது. ஆனால் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று எங்களுக்குள் விவாதித்தோம்.

அப்போது அந்த வட்டரத்தைச் சேர்ந்த எங்கள் வகுப்புத் தோழன் ஒருவன் சொன்னான். மல்லாக் கொட்டை என்பதைத்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்க்ள என்றான். அப்புறம் விவாதித்து அந்தப் பெயர் வந்த காரணத்தைக் கண்டு பிடித்தோம். நிலக்கடலை முதலில் "மணிலா" என்ற நாட்டிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்து இருக்கிறது. அதனால் மக்கள் அதை மணிலாக்கொட்டை என்று அழைத்தார்கள். அது நாளாவட்டத்தில் மருவி மல்லாக் கொட்டை என்று ஆகி பிறகு மல்லாட்டெ ஆகியது.

அப்புறம் அங்கு அடிக்கடி கேட்ட வார்த்தை "க்கீதா". இருக்கிறதா என்பதுதான் மருவி "க்கீதா" ஆகிற்று என்று வெகு நேரம் ஆராய்ச்சி செய்ததில் புரிந்தது.

மருதைக்கு மாற்றல் ஆகிப்போன புதிதில் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பையனைக் கூப்பிட்டு வீட்டுக்குப் போய் ஒரு பைய வாங்கிட்டு வா என்று அனுப்பினேன். நான் அலுவலகத்திலிருந்து அப்படியே கடைவீதிக்குப் போய் சில பொருட்கள் வாங்கவேண்டியிருந்தது. அதற்காக அவனை வீட்டிற்கு அனுப்பினேன்.  பையன் போனவன் போனவனே. அடுத்த நாள்தான் வந்தான்.

என்னடா விஷயம் என்று கேட்டால் "நீங்கதானே வீட்டிற்குப் போய்விட்டு "பைய" வரச்சொன்னீங்க என்கிறான். வெகு நேரம் பேசின பிறகுதான் எனக்கு விளங்கியது. மருதையில் "பைய" என்றால் மெதுவாக என்று அர்த்தமாம். நான் பையை வாங்கிக்கொண்டு வரச் சொன்னதை அவன் மெதுவாக வரச்சொன்னதாகப் புரிந்து கொண்டான். அப்புறம்தான் தெரிந்தது. நான் பைக்கட்டு வாங்கி வா என்று சொல்லியிருக்க வேண்டும்.கோயமுத்தூரில் அப்படிச்சொன்னால் அவன் ஒரு கட்டுப் பையைக் கொண்டு வருவான்.

அப்பறம் ஒரு நாள் ஒரு கடையில் உட்கார்ந்து கொண்டு இருந்த போது அந்தக் கடை முதலாளி அந்தக் கடையில் வேலை செய்யும் ஒரு ஆளைக் கூப்பிட்டு ஒரு வேலைக்காக வெளியில் அனுப்பினார். வேலை விவரம் சொல்லி விட்டு கடைசியாக எப்படியாவது இந்த வேலையைக் கோளாறா முடிச்சிட்டு வந்திரு என்று சொல்லி அனுப்பினார். எனக்கு ஒரே குழப்பம். வேலையை ஏன் கோளாறு பண்ணச்சொல்றாரு என்று புரியவில்லை. எங்க ஊர்ல கோளாறு என்றால் கெடுத்தல் அல்லது தகராறு என்று அர்த்தம்.

அப்புறம் விசாரித்ததில் மருதையில் கோளாறு என்றால் கெட்டிக்காரத்தனம் என்று பொருளாம். எப்படி இருக்கிறது பாருங்கள்.

கோயமுத்தூர் பாஷை என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். அது மற்ற மாவட்டங்களில் கேலிக்குரியதாகி விட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து கோயமுத்தூருக்கு வந்து வேலை செய்யும் நண்பர்கள் எங்களுக்கு கோயமுத்தூர் பாஷை நல்லாத் தெரியுமே. எதற்கெடுத்தாலும் ஒரு "ங்க" சேர்த்தால் அது  கோயமுத்தூர் பாஷை என்பார்கள்.

அவர்களுக்கு நான் ஒரு பரீட்சை வைப்பேன். நான் சொல்கிற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் சொல்லுங்க பார்ப்போம் என்று சொல்லி இந்த வார்த்தைகளைக் கூறுவேன்.

அம்மணி, அந்த அங்கராக்குச் சோப்பில தொரப்புக்காய் இருக்குது, எடுத்துட்டு வா அம்மணி.

எல்லோரும் திருத்திருவென முளிப்பார்கள்.  பார்க்கலாம் உங்களில் எவ்வளவு பேருக்கு இதன் அர்த்தம் தெரிகிறதென்று. கோயமுத்தூர்க்காரர்கள் சும்மா இருக்கோணும்.

சனி, 25 ஜூலை, 2015

பல்லெல்லாம் பல்லல்ல


                                          Image result for ஸ்னேகாவின் சிரிப்பு

"முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டறான் பாரு" என்று காக்கா பிடிப்பவர்களை இளக்காரமாகச் சொல்வது வழக்கம். ஸ்நேகா பல் போல் இருந்தால் முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டுவதில் தவறில்லை. ஆனால் கோபு சார் கதையில் வருகிற பஞ்சாமியின் பல் மாதிரி இருந்தால் என்ன செய்வது?

ஏன் இந்தப் பல் விசாரம் என்றால் எனக்கு இப்போது நேரம் சரியில்லை. என் பற்கள் தொந்தரவு செய்கின்றன. அவைகளை என் பற்கள் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. வெட்கப்பட்டு ஆகப்போவது என்ன? ஒன்றுமில்லை.

ஆகவே என் ஆஸ்தான பல் மருத்துவரிடம் சரண்டைந்தேன். அவர் என் பற்களைப் பார்த்துவிட்டு உங்கள் 32 பற்களில் இப்போது 14 பற்கள்தான் இருக்கின்றன. பேசாமல் அவைகளை எடுத்து விட்டு பல் செட் வைத்து விட்டால் நீங்களும் ஸ்நேகா மாதிரியே சிரிக்கலாம் என்றார். நானும் அவர் வார்த்தையில் மயங்கி அப்படியே செய்யுங்கள் என்றேன்.

கீழ்த்தாடையில் ஐந்து பற்கள் மட்டுமே இருந்தன. அவைகளில் மூன்று பற்கள் ஒழுங்காக விடுபட்டு விட்டன. இரண்டு பற்கள் மட்டும் தாடை எலும்புடன் இணைந்து, விடுபடமாட்டேன் என்று ரகளை செய்தன. இந்த மாதிரி எத்தனை பற்களை அந்த டாக்டர் பார்த்திருப்பார்? ஒரு மகாபாரத யுத்தம் நடத்தி அவைகளை ஒருவாறாக பெயர்த்து எடுத்தார். இப்போது என் கீழ்த் தாடை மகாபாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திரம் போல் ஆகிவிட்டது.

எங்கும் ரத்தக்களரி. கடைசியாக எடுத்த இரண்டு பற்களுக்குப் பக்கத்தில் இருந்த ஈறுகள் சரியாக சேர்வதற்காக தையல்கள் வேறு. இப்படியாக ஏறக்குறைய யமதர்ம ராஜாவின் அரசு எல்லை வரைக்கும் போய் மீண்டேன். சாப்பிடுவது, தூங்குவது, விழித்திருப்பது ஆகிய மூன்று மட்டுமே இப்போது பிரச்சினை. அது கொஞ்சம் சரியானதும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவைகளைச் சொல்கிறேன்.

வியாழன், 23 ஜூலை, 2015

பெங்களூர் விஜயம்.


ஒரு மனிதனின் பலம் அவன் தன்னை அறிந்து கொள்வதில்தான் இருக்கிறது. தன்னால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது, தன் வலிமை எது, வீக்னெஸ் எது என்று அறிந்து வைத்திருப்பவன்தான் அறிவு முதிர்ச்சி அடைந்தவன். அந்த வகையில் நான் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்று என் மனது சொல்கிறது.

என் பெரிய பேரன் மருத்துவ மேல் படிப்பிற்காக பெங்களூர் மெடிகல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனைப் பார்க்கும் சாக்கில் பெங்களூர் ஒரு முறை போய்வரலாம் என்று திட்டமிட்டேன். இதற்கு வீட்டில் எல்லோரும் ஒப்புதல் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதே சமயம் என் கார் ஓட்டும் திறனையும் பரிசோதித்து விடலாமே என்றும் நினைத்தேன்.

கார் நன்றாகவே ஓட்டுவேன். ஆனால் நான் விரும்பியது இப்போது போட்டு முடித்திருக்கும் கோயமுத்தூர்-பெங்களூர் நான்கு வழிச்சாலையில் என் புதுக்கார் எந்த வேகத்தில் போகும் என்று பார்த்துவிடலாம் என்றும், நான்கு வழிச்சாலையில் கார் ஓட்டும் சுகத்தை அனுபவிக்கலாம் என்றும் நினைத்தேன். கோவை-பெங்களூர்  தூரம் மொத்தம் 375 கிமீ. இதை ஒரே மூச்சில் கடக்க என்னால் முடியாதென்பது எனக்குத் தெரியும். அதனால் வழியில் சேலம், ஓசூர் ஆகிய இரண்டு இடங்களில் தங்கி விட்டு, ஓசூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டால் 7 மணிக்குள் பெங்களூர் சேர்ந்து விடலாம் என்பது என் திட்டம்.

இதற்கு என் மனைவி மற்றும் மகள்கள் பெரிதாக ஒன்றும் ஆட்சேபணை சொல்லவில்லை. நானும் கற்பனையில் ஹைவேயில் காரை 120 கிமீ வேகத்தில் ஓட்டுவதாக கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். இங்குதான் என் முதிர்ச்சியின்மை வெளிப்பட்டது. என் வீட்டினர் ஆட்சேபணை சொல்லாத தின் காரணம் "முதலிலேயே தடங்கல் சொன்னால் இந்தக் கிறுக்கு முரண்டு பிடிக்கும், அதனால் விட்டுப் பிடிப்போம்" என்ற கொள்கை என்று எனக்குத் தெரியாமல் போயிற்று.

பெங்களூர் செல்லும் நாள் நெருங்கும்போதுதான் என் குடும்பத்தினரின் திட்டமிட்ட சதி வெளியானது. "ஆமாம், நீங்கள் காரில் போகும்போது ஏதாவது நடந்தால் என்ன செய்வீர்கள்" என்று ஒரு நாள் கேட்டார்கள். இதில் ஏதாவது என்பதில் கார் விபத்து, டயர் பஞ்சர். எனக்கு வரக்கூடிய மாரடைப்பு, ரத்த த்தில் சர்க்கரை குறைந்து போய் வரும் மயக்கம் ஆகியவை அடக்கம். இதில் கார் விபத்து எப்படி ஏற்படும் என்று சொல்ல முடியாது. நான் எவ்வளவு ஜாக்கிரதையாக கார் ஓட்டினாலும் அடுத்தவர்களின் அஜாக்கிரதையினால் ஏற்படும் விபத்தைத் தடுக்க முடியாது அல்லவா?

இத்தகைய இடர்பாடுகள் கண்டிப்பாக வராது என்று என்னால் உறுதியுடன் கூற முடியவில்லை. ஆகவே அவர்களை கூறுவதை ஏற்றுக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அனைவரும், பேசாமல் பஸ்சில் போய் வாருங்கள் என்று ஏகமனதாகக் கூறி விட்டார்கள். ஹைவேயில் 120 கிமீ வேகத்தில் கார் ஓட்டும் கனவு சிதைந்து போனது.

சரியென்று மனதைத் தேற்றிக்கொண்டு எங்கள் ஊர் தனிப்பேருந்து நிலையத்திற்குப் போனேன். எனக்குத் தெரிந்த பழைய காலத்து தனிப்பேருந்து கம்பெனி KPN Travels தான். அதில் பெங்களூருக்குப் போகவர இரு டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு வந்தேன். இப்படி இந்தக் கம்பெனியில் டிக்கெட் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன் என் ஒரு மகள் அது பாடாவதி பஸ் கம்பெனி ஆயிற்றே, அதில் ஏன் டிக்கெட் எடுத்தீர்கள் என்றாள். வயதான பிறகு என்னென்ன பேச்சு கேட்கவேண்டியிருக்கிறது பாருங்கள்.

சரி டிக்கெட் வாங்கியாச்சு, இப்போ ஒண்ணும் மாற்ற முடியாது என்று சொல்லி அவள் வாயை அடைத்து விட்டேன். அப்போதுதான் நான் சிறு வயது முதல் பிரயாணம் செய்த பஸ் வகைகள் நினைவிற்கு வந்தன.

நான் அறியாச்சிறுவனாக இருந்தபோது எங்கள் வூட்டில் ஒரு பஸ்சின் போட்டோ மாட்டியிருக்கும். அந்த பஸ் ஏறக்குறைய இப்படியிருக்கும்.

                                    Image result for Old wooden buses

அதைப் பற்றிக் கேட்டபோது அது என் அத்தைமாமா அவர்களின் சொந்த பஸ். பொள்ளாச்சியிலிருந்து பழனிக்கு ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். அதைப்பற்றி மேலும் சில கதைகளை என் மாமா சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் பஸ் ஓட்டுவதில் வரைமுறைகள் ஒன்றும் இல்லை. பஸ் ஸ்டேண்ட் என்றும் ஒன்றும் இல்லை. தேர்முட்டியில் பஸ்சை நிறுத்தியிருப்பார்களாம். ஊரைச் சுற்றிச்சுற்றி வருவார்களாம். ஊரில் அப்போது தேர் ஓடும் நான்கு வீதிகள்தான் பிரதான சாலைகள். ஒரளவு ஆட்கள் ஏறினவுடன் பழனிக்குப் பொறப்படுவார்கள். போகுத் வழியில் யாரெல்லாம் கையைக் காட்டுகிறார்களோ அவர்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு ஊர் போய்ச்சேருவார்களாம்.

அப்போது பொள்ளாச்சியில் உள்ள பெரிய கவர்ன்மென்ட் ஆபீசர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். ஏதாதோரு சமயத்தில் அவர் பழனிக்குப் பொக நேரிடும். அப்போது அவர் முந்தின நாளே இந்த பஸ் ஓட்டுனர்களிடம் சொல்லி வைத்து விடுவார். இந்த பஸ் ஓட்டுனர் ஊருக்குள் கிடைக்கும் ஆட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் காத்திருக்கவேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் வரும் வரை காத்திருந்து அவரை ஏற்றிக்கொண்டு போகவேண்டும். அவர் பெரிய துரை ஆதலால் டிக்கெட் வாங்கமாட்டார். ஓசிப் பயணம்தான்.

நான் அந்தப் பஸ்சைப் பார்த்ததில்லை. நான் பள்ளி விடுமுறைகளில் பொள்ளாச்சி போவேன். அது இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். பெட்ரோல் எல்லாம் சண்டைக்குப் போய்விட்டது. அதாவது சண்டையில் உபயோகப்படுத்தப்படும் வாகனங்களுக்கு முன்னுரிமையாகப் போய்விட்டது. ஆகவே பொது மக்களுக்காக ஒரு புது வகையான பஸ் கண்டு பிடித்தார்கள். விறகுக் கரியில் ஓடும் பஸ்.

பஸ்சின் பின்புறம் ஒரு உயரமான பாய்லர் இருக்கும். அதில் விறகுக்கரியைப் போட்டு ஒரு துருத்தியில் உள்ள விசிறியை வேகமாகச் சுற்றவேண்டும்.  அப்போது ஏதோ ஒரு ஆயு உற்பத்தியாகி அதனால் பஸ் ஓடும். உங்களில் எத்தனை பேர் அந்த மாதிரி பஸ்சைப் பார்த்திருப்பீர்க்ள என்று தெரியவில்லை. இங்கே பாருங்கள்.

                                    Image result for charcoal bus

இத்தகைய பஸ்களிலிருந்து இன்று முன்னேறியுள்ள மல்டி ஏக்சில் பஸ்களைப் பார்த்தால் ஏதோ கனவில் நடப்பது போல் இருக்கிறது.

                      Image result for multi axle volvo bus





                                   Image result for volvo multi axle sleeper bus



                               Image result for volvo multi axle sleeper bus

தொடரும்