திங்கள், 22 செப்டம்பர், 2014

காதல் வங்கி - சிறுகதை விமர்சனம்.

காதல் வங்கி

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

விமர்சனம்:

ஆற்று நீர் சலசலப்பில்லாமல் அமைதியாக ஓடும்போது அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சுகம். மனதிற்கு சாந்தியளிக்கும் ஒரு அனுபவம். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

அதேபோல் கோயிலில் கடவுள் விக்கிரகத்தை ஒரு நல்ல அர்ச்சகர் தேர்ச்சியாக அலங்காரம் செய்திருந்தால் அதையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்றே தோன்றும்.

சில கதைகள்தான் அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க வல்லவை. காதல் வங்கி அந்த மாதிரியான ஒரு சிறுகதை. எந்த விதமான நெருடலும் இல்லாமல், அபஸ்வரம் அற்ற ஒரு நல்ல சங்கீதத்தைக் கேட்கும் அனுபவத்தைத் தருகிறது.

அழகை அனுபவிப்பது பல வகைப்படும். அழகில் தெய்வீகத்தைப் பார்ப்பது ஒரு வகை. குழந்தையின் கபடமற்ற அழகு ஒரு வகை. பெண்களைத் தெய்வமாகப் பார்ப்பது ஒரு வகை. இப்படி அழகின் பல பரிமாணங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் திரு. வை.கோ. அவர்கள்.

கண்டதும் காதல் என்பதை நாசூக்காக கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். இக்காலத்து நவநாரீமணிகளுக்கு மிகவும் வேறுபட்டவளாக கதாநாயகியை சித்தரித்திருப்பது மனதை தொடுகிறது. மிக இயல்பாக அவள் தன் நாயகனுடைய பழக்கவழக்கங்களுக்கு மாற்றிக்கொள்கிறாள்.


ஆனால் நடைமுறையில் இத்தகைய சம்பவங்கள் நடக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாய் மனதில் தங்குகிறது.

5 கருத்துகள்:

  1. //சில கதைகள்தான் அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க வல்லவை. காதல் வங்கி அந்த மாதிரியான ஒரு சிறுகதை. எந்த விதமான நெருடலும் இல்லாமல், அபஸ்வரம் அற்ற ஒரு நல்ல சங்கீதத்தைக் கேட்கும் அனுபவத்தைத் தருகிறது.//

    :))))) தங்களின் இந்த விமர்சனம் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  2. திரு வை.கோ அவர்களின் ‘காதல் வங்கி’ சிறு கதையையும் தங்களின் மதிப்புரையையும் படித்தேன்.கதாசிரியர் இப்படியும் நடக்கலாம் அல்லது இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் கதையை அழகாக கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் நீங்கள் சொன்னதுபோல் நடைமுறையில் இத்தகைய நிகழ்வுகள் நடக்குமா என்பது கேள்விக் குறிதான். நல்ல கதையைத் தந்த திரு வை.கோ அவர்களுக்கும் அந்த கதையை நடுநிலையோடு மதிப்புரை செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. மிக நேர்த்தியான விமர்சனம் ரசிக்கவைக்கிறது ஐயா. பாராட்டுக்கள்..

    இப்படி- சிக் - என சிறப்பாக விமர்சிக்க எத்தனை திறமை வேண்டும் ..!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வழக்கம்போல் சிறிய எளிய விமரிசனம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு