திங்கள், 26 மே, 2014

இணையத்தின் மூலமாக பணம் சம்பாதிக்க !


கண்காட்சிகளைப் பார்த்திருப்பிர்கள். ஒரு இடத்தில் நாலு நண்பர்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தால் உடனே அங்கு ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அங்கு என்னவோ நடக்கிறது, அதில் நாமும் சேர்ந்து கொள்ளலாமே என்ற மனப்பான்மை மனிதர்களுக்கு இயற்கையாகவே வேறூன்றி இருக்கிறது.

இலவசம் அல்லது சும்மா கிடைக்கிறது என்றால் அதற்காக உயிரைப் பயணம் வைத்து அதைப் பெற்றுக்கொள்ள அடித்துக் கொள்வார்கள். இத்தகைய நிகழ்வுகள் நம் தங்கத் தமிழ்நாட்டில் பலமுறை அரங்கேறியுள்ளன.

உங்கள் பணம் 100 நாளில் இரட்டிப்பாகும் அல்லது மூன்று மடங்காகும் என்றால் முன்பின் யோசிக்காமல் பணத்தைக் கொண்டுபோய் கொட்டுபவர்களில் தமிழர்களை மிஞ்ச யாரும் இல்லை. நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, தீபாவளி பலகாரச்சீட்டு என்று அந்தந்த சீசனுக்கு தகுந்தாற்போல சீட்டுகள் நடக்கும். எல்லாம் ஏமாற்று வேலைகள்தான்.

இந்த வகையில் தற்போது தோன்றியிருப்பது "இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம்" என்ற கோஷம். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பல பதிவுகள் இதை ஊக்கப்படுத்துகின்றன. இணையத்தில் பதினைந்து நிமிடங்கள் செவழித்தால் போதும். மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று தடாலடியாக எழுதுகிறார்கள்.

நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் என்பது ஒருவன் தன் உழைப்பைக்கொட்டி சம்பாதிக்க வேண்டும். அதுதான் உண்மையான சம்பாத்தியம். கானல்நீரைக்கண்டு ஏமாந்து போகாதீர்கள்.

திங்கள், 19 மே, 2014

எனது பெங்களூரு விஜயம்

திரு GMB யைப் பார்க்க நான் செய்த முஸ்தீபுகளை போன பதிவில் எழுதியிருந்தேன். நான் புறப்படுவதற்கு முன் தினம் அவர் அனுப்பிய செய்தியில் என்னை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். நான் மிகவும் மகிழ்வுற்றேன். ஏனெனில் இப்போது பெங்களூரு பூதாகாரமாக வளர்ந்துள்ளது என்று கேள்விப்பட்டிருந்தேன். நண்பர் வீட்டிற்கு எப்படி போய்ச்சேரப் போகிறோம் என்ற கவலை மனதினுள் அரித்துக் கொண்டிருந்தது. அவர் அனுப்பிய செய்தியினால் அந்தக் கவலை மறைந்தது.

ஆனால் வேறு கவலைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. "தெனாலி" படத்தில் கமலஹாசன் சொல்லுவாரே அந்த மாதிரி கவலைகள்.

நான் போகும் ரயில் இரவு 1 மணிக்கு. நான் நேரத்தோடு ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். இல்லாவிட்டால் பஸ் கிடைக்காது. அப்படி நேரத்தோடு ஸ்டேஷன் போய்விட்டால், ரயில் வரும்போது தூங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை.

அப்படி ரயில் வரும்போது நான் விழித்திருந்து என் கம்பார்ட்மென்டில் ஏறின பிறகு என்னுடைய பெர்த் காலியாக இருக்குமா? அதில் யாராவது படுத்துக் கொண்டிருந்தால் அவருடன் வாக்குவாதம் செய்யவேண்டி வருமோ என்ற கவலை.

அப்படி நடக்காமல் பெர்த் கிடைத்த பிறகு ரயில் விபத்தில்லாமல் பெங்களூரு போய்ச்சேருமா என்ற கவலை.

டிடிஆர் உடனே வந்து டிக்கெட்டைச் செக் செய்யவில்லையானால் அவருக்காக விழித்துக்கொண்டிருக்கவேண்டுமே என்ற கவலை.

நடுவில் எங்காவது ரயில் கொள்ளைக்காரர்கள் வந்து என் உடமைகளைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை. என்ன உடமைகள்? இரண்டு செட் பழைய டிரஸ்கள். பணத்தை ஜட்டியில் இருக்கும் பாக்கெட்டில் பாலிதீன் கவரில் போட்டு பத்திரமாக வைத்து ஒரு சேப்டி பின் குத்திவிட்டு புறப்படுவதுதான் என் மாமூல் வழக்கம். ஆகவே பணத்தைப் பற்றி அதிகம் கவலை இல்லை.

பாத்ரூம் போனால் திரும்பி வருவதற்குள் என் பேக்கை யாராவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை.

நடுவில் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மேல் லோகம் போய் விட்டால் என் உடலை யார், எப்படி என் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்ற கவலை.

செல்போன் சார்ஜ் தீர்ந்து போனால் என்ன செய்வது என்ற கவலை.

பெங்களூர் ஸ்டேஷனுக்கு திரு GMB  வராமல் போனால் என்ன செய்வது என்ற கவலை.

இப்படிப் பலவிதமான கவலைகளுடன் ஸ்டேஷனில் தூக்கம் வராமல் உட்கார்ந்து கொண்டிருந்தபோது நான் செல்லவேண்டிய ரயில் வந்து சேர்ந்தது. என்னுடைய பெர்த் காலியாக இருந்தது. என் பேக்கையே தலையணையாக வைத்துக்கொண்டு படுத்தேன் ஏனென்றால் தூங்கும்போது பேக்கை யாரும் களவாடக் கூடாதல்லவா?

முன்பு டிடிஆர் என்று ஒரு கருப்புக்கோட்டு போட்ட ஆசாமி வந்து பயணிகளை வாதித்துக்கொண்டு இருப்பார். ஒழுங்காக டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தாலும் அவர் வந்து நம் டிக்கெட்டை செக் பண்ணிவிட்டுப் போகும் வரையிலும் ஒரு இனம் தெரியாத பயம் மனதிற்குள் இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ரயில்வே டிபார்ட்மென்டை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் அந்த அதிகாரிகளின் மனதில் வேறூன்றி இருக்கும். அது போலத்தான் நடந்துகொள்வார்கள்.

இப்போதெல்லாம் ரயில்வே டிபார்ட்மென்டுக்கு தங்கள் பயணிகள் மேல் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது போல் இருக்கிறது. நான் சென்ற ரயிலில் ஒரு டிடிஆரையும் காணவில்லை. திரும்பி வரும்போதும் அப்படியே. என்ன ஒரு நம்பிக்கை. மக்களும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் பயணித்துக்கொண்டு இருந்தார்கள்.

ரயில் வந்தவுடன் நான் என் கேரேஜை கண்டு பிடித்து ஏறி என் சீட்டைத் தேடினேன். என் சீட் லோயர் பெர்த். மாமூலாக யாராவது அதில் படுத்துக்கொண்டு இருப்பார்கள். எழுப்பி இது என்னுடைய பெர்த் என்று சொன்னால், என்னுடையது அப்பர் பெர்த், அதில் படுத்துக்கொள்ளுங்களேன் என்று புத்திமதி கூறுவார்கள். நம்முடைய உரிமையை நிலை நாட்ட ஒரு வாக்குவாதம் நிகழ்த்த வேண்டும்.

இந்த மாதிரி வாக்குவாதம் செய்து அதில் ஜெயித்து நம் பெர்த்தை நாம் அடைந்தோமானால் வாதத்தில் வெற்றி பெற்ற எண்ணம் மட்டுமே மிஞ்சும். தூக்கம் போய்விடும். அந்த மாதிரி எதுவும் நடக்காமல் என் பெர்த் காலியாக இருந்தது. எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பெர்த்தில் என்னுடைய பேக்கை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தேன். ஏனெனில் பேக்கை நான் தூங்கும்போது யாரும் திருடிக்கொண்டு போய்விடக்கூடாதல்லவா?

பிறகு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பெங்களூர் போய்ச் சேர்ந்தேன். ரயிலை விட்டு இறங்கினால் பிளாட்பாரத்தில் ஒரே திருவிழாக்கூட்டம். நண்பரை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறோம் என்ற புதுக்கவலை என்னை பிடித்துக்கொண்டது. என் நல்ல காலம் ஒரு நிமிஷத்தில் திரு.GMB  என் அருகில் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டார். இருவருமாக ஸ்டேஷனுக்கு வெளியில் வந்தோம். ஆட்டோ புக் செய்யும் இடத்திற்குச் சென்று ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டிற்கு போய் சேர்ந்தோம்.

அங்கு சென்றதிலிருந்து மாலை அவர் வீட்டை விட்டு புறப்படும் வரை நடந்தவைகளை திரு.GMB அவர்கள் தன்னுடைய பதிவில் விவரமாக எழ்தியிருக்கிறார் அதை மறுபடியும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதில் நான் ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தம்பதியினர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு என்னை உபசரித்து தங்கள் அன்பு வெள்ளத்தில் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டனர். இந்த அன்புக்கு நான் எப்படி எந்த ஜன்மத்தில் கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.


திருGMB தம்பதியினர்

பிற்பகலில் திரு GMB தம்பதியினர் என்னை தும்கூர் ரோட்டில் 15 கி. மீ. தூரத்திலுள்ள பகவத் கீதா மந்திருக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். பகவத் கீதை ஸ்லோகங்கள் முழுவதையும் நான்கு பாஷைகளில் அங்கு கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். நடுவில் விஷ்ணுவின் விஸ்வரூப சிலை ஒன்றும் இருக்கிறது. கீழ் தளத்தில் காயத்ரி தேவியின் சந்நிதி இருக்கிறது. கண்ணன் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள். நான் அங்கு எடுத்த சில போட்டோக்கள்.







திரு GMB எனக்கு அன்பளிப்பாக கொடுத்த ஓவியம். இது அவரே கைப்பட வரைந்தது. 65 வயதில் தஞ்சாவூர் பெயின்டிங்க் போட தானாகவே பழகி பல படங்கள் வரைந்துள்ளார்.(அதிகாலையில் போட்டோ எடுத்த போது தூக்கக் கலக்கத்தில் காமிராவின் கைப்பிடியும் போட்டோவில் சேர்ந்துவிட்டது.)


திரு GMB அவர்கள் எழுதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.

16 சிறு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மணிமேகலைப்பிரசுரம் பிரசுரித்துள்ளது. நடைமுறை ழ்க்கையில் நாம் சந்திக்கும், சந்தித்தபின் அவைகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் போகும் நிகழ்வுகளை அருமையாக சிறுகதை வடிவில் தொகுத்திருக்கிறார். படித்த பின் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.

இந்த இரண்டு அன்பளிப்புகளும் ஆத்மார்த்தமாக கொடுக்கப்பட்டவை. அவைகளை பெரும் பொக்கிஷமாக கருதி பாதுகாப்பேன். என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

மாலையில் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்படும்போது திருமதி GMB  தன் கையால் செய்த இனிப்புகள் கொண்ட ஒரு டப்பாவை என்னிடம் கொடுத்தார்கள். கோவை வந்தவுடன் அதைத் திறந்து பார்த்தேன். அருமையான பொரிவிளங்காய் உருண்டைகள். பாதிக்கு மேல் நானே சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தன. சர்க்கரை, நெய்யுடன் அன்பும் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பல்லவா அவை.

ஒரு இனிய நண்பருடன் ஒரு நாள் கழித்த நினைவுகள் என்றும் என் மனதில் பசுமையாகத் தங்கியிருக்கும்.

சனி, 17 மே, 2014

நானும் GMB யும்.


திரு GMB  யின் பிளாக்கை அறியாதவர்கள் பதிவுலகை அறியாதவர்கள் என்றே கூறலாம். தன்னுடைய எழுத்துக்களினாலும் எந்த ஊருக்குச்சென்றாலும் அந்த ஊரிலுள்ள பதிவர்களைச் சந்திப்பதிலும் அவர் தனித்து நிற்கிறார். அவர் பதிவுலகத்தில் கால் பதித்த நாட்களிலிருந்து அவர் பதிவுகளை ரசித்து வந்திருக்கிறேன். மத்திய அரசு நிறுவனமான BHEL ல் வேலை பார்த்து ஓய்வு பெற்று பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஒரு முறை அவர் கோவைக்கு வந்திருந்தபோது என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். நான் இதிலென்ன கஷ்டம் தாராளமாக வாருங்கள் என்று பதில் போட்டிருந்தேன். அவர் என் வீட்டை கண்டுபிடித்து தம்பதி சமேதராக வந்தே விட்டார். நேரம் போறாமையினால் சிறிது நேரமே இருந்து விட்டுப் புறப்பட்டார். இது நடந்து ஏறக்குறைய மூன்று வருடம் இருக்கும்.

போன வருடம் நானும் என் நண்பர் ஒருவரும் பெங்களூர் போகவேண்டி இருந்தது. நான் இவரை சந்திக்க ஆவல் கொண்டு அவருடைய வீட்டு விலாசம், டெலிபோன் நெம்பர் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் பெங்களூரில் நாங்கள் எங்களை வரவேற்ற நண்பரின் அன்புப் பிடியில் சிக்கி விட்டபடியால் இவருடைய வீட்டிற்கு செல்ல இயலாமல் போனது. போன் செய்து என் இயலாமையைக் குறிப்பிட்டு சந்திக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டிருந்தேன்.  அவரும் பெரிய மனதுடன் மன்னித்தேன் என்றார்.

ஆனால் இந்த நிகழ்வு அவருடைய மனதிலிருந்து மறையவில்லை என்று பிற்பாடுதான் தெரிய வந்தது. அது எப்படியென்றால், சென்ற மாதம் நான் திருச்சிக்கு என் பேரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்குப் போயிருந்தேன். அப்போது ஒரு இடைவெளி கிடைத்ததைப் பயன்படுத்தி
திரு.வைகோ. அவர்களைப் பார்த்துவிட்டு வந்தேன். அவரை அறியாதவர்களும் யாரும் இருக்கமாட்டார்கள்.

{ஒரு முக்கிய குறிப்பு: பிரபல பதிவர்கள் ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த மாதிரி (என்னையும் சேர்த்து?!) பிரபல பதிவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதைப்பற்றி பதிவுகள் போடவேண்டும்.}

நிற்க, நான் வைகோவை சந்தித்தது பற்றி ஒரு பதிவில் எழுதியிருந்தேன். அதைப் படித்த திரு GMB. என் மீது ஒரு அஸ்திரம் ஏவிவிட்டார். அது என் நடு மனத்தில் ஆழமாகப் பாய்ந்து விட்டது. "பெங்களூர் வந்திருந்தும் என்னைப் பார்க்காது போய்விட்டீர்களே" என்ற அஸ்திரம்தான் அது.

இனி என்ன செய்வது என்று யோசித்தேன். அப்போதுதான் எங்கோ படித்திருந்த ஒரு பொன்மொழி நினைவிற்கு வந்தது. பாக்கி வைக்காமல் தீர்க்கவேண்டிய சமாசாரங்கள் மூன்று உண்டு. 1. மனிதனின் கடமைகள். 2. தான் வாங்கிய கடன். 3. எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு. இவைகளைத் தீர்க்காவிட்டால்
அவை மீண்டும் வளர்ந்து ஒருவனை கஷ்டத்திற்குள்ளாக்கும். ஆகவே GMB யை சந்திக்கவேண்டிய கடமை இருக்கிறது. அதை தீர்க்கவேண்டும். அதுவும் எனக்கு வயதாகிக்கொண்டு இருப்பதால் அதை தள்ளிப்போட முடியாது என்று முடிவு செய்து, உடனடியாக பெங்களூருக்கு போகவர ரயில் டிக்கட் புக் செய்து விட்டு இவருக்கு செய்தி அனுப்பினேன்.

உங்கள் வீட்டு விலாசமும் வரும் வழியையும் தெரிவியுங்கள் என்று பல முறை மெயில் அனுப்பியும் மனுஷன் பதிலே போடவில்லை. சரி என்ன ஆனாலும் ஆகட்டும், பிளான் பிரகாரம் பெங்களூர் போவோம் என்று முடிவு செய்திருந்தேன். நான் புறப்படும் தினத்திற்கு முதல் நாள் இவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் என்ன சொல்லியிருந்தார் என்றால்............

மீதி அடுத்த பதிவில்.

திங்கள், 12 மே, 2014

கட்டைப் பேனாக்கள்

நாம் எழுத்தாணி உபயோகப்படுத்திக்கொண்டிருந்தபோது ஐரோப்பாவில் இறகுப் பேனாவை பயன்படுத்தினார்கள். பேப்பர் கண்டுபிடிக்காதபோது அவர்கள் மரப்பட்டைகளை உபயோகப்படுத்தினார்கள்.
இதிலிருந்து மாறி வந்தது தான் கட்டைப் பேனாக்கள். இவை 1960 ம் வருடத்திற்கு முன் மிகவும் பிரபலமாக இருந்தன.


இவைகளை தொட்டு எழுதும் பேனாக்கள் என்றும் கூறுவார்கள். சர்க்கார் ஆபீசுகளில் ஒவ்வொரு மேஜையிலும் தவறாது இடம் பெற்றிருக்கும்.
இந்தப் பேனாவை உபயோகித்து எழுதுவதற்கு நல்ல திறமையும் அனுபவமும் வேண்டும். அப்டிப்பட்ட அனுபவஸ்தர்கள் எழுதினால் எழுத்துக்கள் ஒரே சீராக இருக்கும். இல்லையென்றால் வரி ஆரம்பிக்கும்போது இங்க் அதிகமாகவும் வரி முடியும்போது எழுத்து மங்கலாகவும் இருக்கும்.

நான் இந்தப் பேனாக்களை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இதற்கு உபயோகிக்க இங்க் வில்லைகள் அந்தக்காலத்தில் பெட்டிக்கடைகளில் கிடைக்கும். ஒரு வில்லை காலணா (ஒன்றரை நயா பைசா) என்று ஞாபகம். காலணா என்பது நான் சிறுவனாக இருந்தபோது ஒரு கணிசமான தொகை. அதை வைத்துக்கொண்டு ஒரு இலந்தை வடகம் வாங்கலாம். ஒரு தேங்காய் பர்பி வாங்கலாம். அன்று ஒரு சிறுவன் கையில் காலணா இருந்தால் அவன் அன்று பள்ளியில் ஒரு பெரிய ஹீரோ.

இந்தப் பேனாக்கள் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்டவை. ஒரு முனையில் நிப் சொருக ஒரு அமைப்பு இருக்கும். அந்த நிப்பை சொருகி பின் மைக்கூட்டில் மையைத் தொட்டு எழுதவேண்டும். இதன் பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதுதான் பவுன்டன் பேனா என்று சொல்லப்படுபவை. இதில் இரண்டு வகை உண்டு. கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றும் வகை. இன்னொன்று தானே இங்க் நிரப்பிக்கொள்ளும் வகை.

பேனாவின் கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றுவது ஒரு பெரும் யுத்தம். இங்க்கை கீழே சிந்தாமல் இங்க் ஊற்றிய சிறுவர்கள் அநேகமாக இல்லை. அப்படி செய்து " அம்மாவிடம் "கடங்காரா" பட்டம் வாங்காதவர்கள் இல்லை. இத்தகைய பேனாக்கள் கூட அன்று மேலை நாட்டிலிருந்துதான் இறக்குமதியாகிக்கொண்டிருந்தன.  பிளேக் பேர்டு, ஸ்வேன், பார்க்கர், பைலட், ஷெஃபீல்டு ஆகியவை அன்று பிபலமானவை.

இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் பேனா தயாரிப்பு இங்கு தொடங்கியது. இங்குகளும் தயாரிக்கப்பட்டன. "கேம்லின்" தயாரிப்புகள்தான் இன்று மார்க்கெட்டில் நிரம்பிக்கிடக்கின்றன. நடுவில் சைனாவிலிருந்து "ஹீரோ" பேனாக்கள் திருட்டுத்தனமாக வர ஆரம்பித்தன. சும்மா சொல்லக்கூடாது. அந்தப் பேனாக்கள் உண்மையிலேயே நன்றாக இருந்தன. இன்றும் நன்றாக இருக்கிறது.


அந்தக் காலத்தில் "ஹீரோ" பேனா வைத்திருப்பதுதான் பேஷனாக இருந்தது.இப்போது அதன் மவுசு பெரிதும் குறைந்து விட்டது. விதம் விதமான ஹீரோ பேனாக்கள் வாங்கி சேமித்து வைத்திருந்தேன். அதை எல்லாம் இப்போது பேரன்களுக்கு கொடுத்து விட்டேன்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பால்பாய்ன்ட் பேனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. அவை வந்த புதிதில் அவைகளின் தரம் இன்று இருப்பதைப்போல் இருக்கவில்லை, எந்தப் புதிய கண்டு பிடிப்பு வந்தாலும் அதை எதிர்ப்பவர்கள் நம் நாட்டில் உண்டுதானே. குறிப்பாக பேங்க் ஆசாமிகள்.

செக்குகளில் பால் பாய்ன்ட் பேனாவால் கையெழுத்துப் போட்டால் செல்லாது என்றார்கள். அதற்கு அவர்க்ள கொடுத்த வியாக்யானம்தான் வேடிக்கை. பால்பாய்ன்ட் பேனாவால் எழுதும்போது கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும். அப்படி அழுத்தி செக் புக்கில் எழுதினால் கீழே இருக்கும் செக்கிலும் அந்தக் கையெழுத்தின் அடையாளம் விழுந்து விடும். அதை வைத்து யாராவது வேற்று ஆட்கள் அந்தக் கையெழுத்தை ஒரிஜினல் மாதிரி போட்டு பணத்தைக் களவாண்டு விடுவார்கள், அதனால் பால்பாய்ன்ட் பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்றார்கள்.

அப்படி சொன்னவர்கள் இன்று எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. பேங்குகளில் இங்க் பேனாவை மருந்துக்குக்கூட காண முடிவதில்லை. எல்லோரும் பால் பாய்ன்ட் பேனாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இன்று பால்பாய்ன்ட பேனாக்களில் எத்தனை வகை இருக்கறது என்று யாராலும் சொல்ல முடியாதென்று நினைக்கிறேன். ஒரு சமயம் பள்ளிச் சிறுவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்குத்தான் லேட்டஸ்ட் சமாச்சாரங்கள் தெரியும். கடைகளில் போய் இங்க் பேனா வேண்டும் என்றால் மேலும் கீழும் பார்க்கிறார்கள்.

இப்போது கம்ப்யூட்டர் வந்து விட்டது. பேப்பரில் எழுதுவது என்பதே ஏறக்குறைய மறந்து போக ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பேனாக்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் இன்னும் ஹீரோ பேனாவும் கேம்லின் இங்க்கும் வைத்திருக்கிறேன். அவைகளை அவ்வப்போது உபயோகப்படுத்தவும் செய்கிறேன்.

சனி, 3 மே, 2014

ஒரு வில்லங்கமான சந்தேகம்.

பாரம்பரியமாக சொல்லப்படுகின்ற அல்லது நடைமுறையில் இருப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான பெரியோர்களின் கருத்து. ஏனெனில் அவைகளில் பல உட்பொருள்கள் மறைந்திருக்கலாம். அதை நாம் அறியாமல் இருக்கலாம். ஆகவே அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றிய மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். (நம்ம அரச மரத்தைத்தான் போதி மரம் என்று புத்தர்கள் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?)

இந்த மாதிரி சந்தேகங்கள் வருவது பாவ லிஸ்டில் சேருமா  என்று நான் அறியேன். சித்திரகுப்தனை ஒரு நாள் பார்த்து இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். பார்வதி கல்யாணப்படம். பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க பரமசிவன் தானம் வாங்கிக்கொள்கிறார்.


இந்த படம் எனக்கு சமீபத்தில் வந்திருந்த ஒரு கல்யாண அழைப்பிதழில் இருந்தது. செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டது. படம் அவ்வளவு துல்லியமாக வரவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு வந்த கல்யாணப் பத்திரிக்கைகளிலும் இருக்கலாம்.

இந்த தானம் கொடுப்பதைப்பற்றி ( தாரை வார்ப்பது என்றாலும் தானம் கொடுப்பது என்றாலும் ஒன்றுதான்) எனக்குத் தெரிந்த ஐதீகம் என்னவென்றால், தானம் கொடுப்பவர் கை உயர்ந்து இருக்கவேண்டும். அடுத்த படியில் அதாவது அதற்குக் கீழே தானம் கொடுக்கப்படும் பொருள் இருக்கவேண்டும். அதற்குக் கீழே தானம் வாங்குபவரின் கை இருக்கவேண்டும். சரிதானே.

இப்போது படத்திற்கு வாருங்கள். பெருமாளின் கை மேலே இருக்கிறது. அவர் கெண்டியிலிருந்து நீர் வார்க்கிறார். தானம் கொடுக்கும்போது இந்த மாதிரி நீர் வார்ப்பது அவசியம்.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திர யுத்தத்தில் இந்திரன் பிராமண வேடத்தில் கர்ணனை அணுகி அவனுடைய புண்ணியங்களை தானமாக கொடுக்கும்படி கேட்கிறான். அப்போது அங்கு தண்ணீர் இல்லாததால் தன் உடம்பிலிருந்து வழியும் ரத்தத்தையே வார்த்து தானம் கொடுத்ததாக கதை படித்திருப்பீர்கள்.

இப்படி பெருமாள் நீர் வார்க்கும்போது மேலே பார்வதியின் கையும் அதன் கீழே ஈஸ்வரனின் கையும் இருப்பதுதானே முறை. ஆனால் இந்த மாதிரி பல படங்களில் ஈஸ்வரன் கை மேலேயும் பார்வதியின் கை கீழேயும் இருப்பது மாதிரி காட்டப்படுகிறது. இது சரியல்ல என்பது என்னுடைய கருத்து. 

இந்தப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த நுணுக்கத்தைப் பார்த்துப் பார்த்து எனக்கு இந்தப் படங்களின் மேல் இருக்கும் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. என் கருத்து சரிதானா என்று வாசகர்கள் சொல்லுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.