வெள்ளி, 15 மார்ச், 2013

என்னைத் தோலுரித்த கதை


நான் போன நூற்றாண்டில் பிறந்தவன். ஆனாலும் அந்த நூற்றாண்டின் மவுசே தனி. சிறு வயதில் நான் இரண்டாம் உலக மகா யுத்தத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.

நாடு சுதந்திரம் வாங்கியதை தூக்கத்திலேயே பார்த்தவன் நான். ராத்திரி 12 மணிக்கு புத்தியுள்ளவன் எவனாவது விழித்திருப்பானா?

மகாத்மா காந்தியை கோட்சே சுட்டதை நேரில் பார்த்தவர்களை நேரில் பார்த்திருக்கிறேன்.

அப்படியே பல சம்பவங்கள். அதை விடுங்கள். இந்த சமயங்களில் எல்லாம் என்னுடன் ஒத்துழைத்த என் தோல் இருபத்தியோராம் ஆண்டு பிறந்து பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு என்னுடன் வம்பு பண்ணுகிறது.

இரண்டு வருடம் முன்பு ஒரு வேலையாக (?) காரைக்கால் போயிருந்தேன். அனுபவஸ்தர்கள் என்ன வேலையென்று கேட்க மாட்டார்கள். அனுபவம் இல்லாதவர்களுக்கு அந்த வேலை என்னவென்று சொன்னால் புரியாது. ஆகவே அதை விட்டு விடுவோம்.

நான் அங்குள்ள விவசாயக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். சுற்றிலும் செடி கொடிகளுடன் கூடிய இயற்கைச் சூழ்நிலை. அங்கிருந்த கல்லூரியின் தலைவர் என்னுடைய பழைய மாணவர். அங்கு இருப்பவர்கள் எல்லோருக்கும் என்னை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்ளச் சொல்லி உத்திரவு போட்டுவிட்டார். எல்லோரும் நன்கு கவனித்துக்கொண்டார்கள். அங்கு குடியிருக்கும் ஒரு லட்சத்தி இருபதனாயிரத்து ஒரு கொசுக்கள் உட்பட.

இந்தக் கொசுக்கள் என்னைக் கவனித்துக் கொண்டதை நான் சரியாகக் கவனிக்கவில்லை. ஊருக்கு வந்து மறு நாள் குளிக்கும்போது உடல் முழுவதும் ஆங்காங்கே சிகப்பு சிகப்பாக ஆகியிருந்தது. என்னமோ ஏதோ என்று பயந்துபோய் டாக்டரிடம் போனேன். அவர் உடம்பைப் பார்த்துவிட்டு, எங்காவது வெளியூர் போயிருந்தீர்களா என்று கேட்டார். நான், ஆமாம், காரைக்கால் போயிருந்தேன் என்றேன்.

அந்த ஊர் கொசுக்கள் பிரபலமானவை. நீங்கள் பிரபலஸ்தர் ஆனதால் உங்களை ஸ்பெஷலாக கவனித்திருக்கின்றன. இந்த அலெர்ஜி ஆயின்ட்மென்டைப் போடுங்கள் சரியாகி விடும் என்றார். அப்படியே போட்டதில் ஒரு வாரத்தில் சரியாகிவிட்டது.

கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் அதே மாதிரி தடிப்புகள் வந்தன. இந்த முறை நான் வெளியூர் எங்கும் போகவில்லை. காரைக்கால் கொசுக்களுக்கு நாங்கள் இளைத்தவர்களா என்று கோயமுத்தூர் கொசுக்களுக்கு ரோஷம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். மறுபடியும் அதே மருந்தைத் தடவ தடிப்புகள் மறைந்தன.

இப்படியே நானும் இந்தக் கொசுக்களும் இரண்டு வருடம் கண்ணாமூச்சி விளையாடினோம். ஒரு மாதத்திற்கு முன் இந்த தடிப்புகளைப் பார்த்த என் மனைவி, என்னங்க, இது ஏதோ கொஞ்சம் சீரயஸான விஷயம் மாதிரி இருக்கிறது. ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் காட்டுங்களேன் என்றாள் நான் வழக்கம்போல் இது என்ன கொசு சமாச்சாரம், இதுக்கெல்லாம் ஸ்பெஷலிஸ்ட் எதுக்கு என்று இன்டர்நெட்டில் கொசுக்கடிக்கு என்ன வைத்தியம் என்று பார்த்தேன்.

அதில் சொல்லியிருந்த மருந்தை வாங்கி ஒரு மாதம் உபயோகித்தேன். அது நல்ல பலனைக் கொடுத்தது. எப்படியென்றால் தடிப்பு ஆங்காங்கே இருந்தது மாறி, நிறைய இடங்களில் வந்து விட்டது. அந்த இடங்களில் அரிப்பும் ஆரம்பித்துவிட்டது. இனி மேல் வேறு வழியில்லை என்ற நிலை வந்து விட்டது.

என் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போனோம். அந்த டாக்டர் என் பெண்ணுக்குத் தெரிந்த டாக்டர். என் உடம்பில் தடிப்பு உள்ள இடங்களை சுரண்டிப் பார்த்து விட்டு, இது கொசுக்கடி இல்லை என்றார். அப்பாடி என்று நான் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள், இது ஒரு தோல் வியாதி, இதற்குப் பெயர் "சோரியாசிஸ்" என்று சொன்னார்.

இந்தப் பெயரை நான் முன்பு கேட்டிருக்கிறேன். எய்ட்ஸ் மாதிரி ஒரு வியாதி என்று என் கணிப்பு. ஐயோ, என் நிலை இப்படி ஆகவேண்டுமா என்று என் கற்பனைக் குதிரையில் ஏறி யமலோகம் வரை போய்விட்டேன்.

அப்போது அந்த டாக்டர், இது ஒரு சாதாரண தோல் வியாதிதான், ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்றார்கள். அப்போதுதான் என் யமலோகம் போன உயிர் திரும்பி வந்தது.  தன்னுடைய பிரிஸ்கிரிப்ஷன் பேடை எடுத்து, (அது புல்ஸ்கேப் சைசில் இருந்தது) அது நிறைய மருந்துகள் எழுதிக்கொடுத்தார்கள். தினமும் அந்த தடிப்பு இருக்கும் இடங்களில் தோலை உரித்துவிட்டு, அதாவது நன்றாக கிளீன் செய்துவிட்டு அந்த இடங்களில், எழுதியுள்ள ஆயின்ட்மென்ட்டுகளை தடவி வருமாறு சொன்னார்கள்.

நான் டாக்டரிடம் போகும்போதே, என் சொத்துக்ளை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கிக்கொண்டு போனது வசதியாகப் போனது. அந்தப் பணத்தில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்போது தினமும் என் தோலை உரித்துக் கொண்டிருக்கிறேன். உரித்துவிட்டு உப்பு தடவுவதற்குப் பதிலாக ஆயின்ட்மென்ட்டுகளைத் தடவிக்கொண்டு இருக்கிறேன்.

36 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கொசுவால் வந்ததா என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் கொசுக் கடியினால்தான் முதலில் தடிப்புகள் வந்தன. நான் கொசுக்கடி அலர்ஜி என்று நினைத்து கை வைத்தியம் பண்ணிக்கொண்டு இருந்தேன். அது தவறு என்று இப்போது உணறுகிறேன். இப்பொழுதாவது உணர்ந்தேனே என்ற ஆறுதலுடன் இருக்கிறேன்.

      இது மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கட்டும் என்றுதான் இந்தப் பதிவு போட்டேன்.

      நீக்கு
    2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

      நீக்கு
    3. நம்பள்கி எனக்கு ஒரு தனிப்பட்ட செய்தி அனுப்பியிருந்தார். அனைத்து பின்னூட்டங்களையும் சேர்த்து டிக் செய்ததினால் அதுவும் பிரசரமாகிவிட்டது. அது இந்தப் பதிவுக்கு தேவையில்லாததினால் அதை நீக்கினேன். மற்றபடி நம்பள்கியும் நானும் இப்போ பயங்கர தோஸ்த்துகள் ஆகிவிட்டோம்.

      நீக்கு
  2. //நான் டாக்டரிடம் போகும்போதே, என் சொத்துக்ளை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கிக்கொண்டு போனது வசதியாகப் போனது//

    சிரிப்பு வந்தாலும் உண்மை அதுதான்.பல் மருத்துவரிடமும் தோல் சிகிச்சை நிபுணரிடமும் சென்றால் பல நூறு ரூபாய்களுக்கு மருந்து வாங்கியே அனைத்து பணமும் செலவாகிவிடும்.

    அது இருக்கட்டும். ‘உன்னை தோலுரித்துக் காட்டுகிறேன் பார்’ என்பார்களே. அது இதுதானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூற்றுக்கு நூறு உண்மை.
      அமைதியாக இருந்து பணம் பறிப்பதில் இந்த தோல் வியாதியும் பல் வலியும் மன்னாதி மன்னர்கள்.
      - என்ன செய்வது. தோல் அழகு சம்பந்தப்பட்டது. ஒன்றுமில்லாமலே வெள்ளை தோலுக்கு கிரீம்ஸ் வாங்க நூற்றுகணக்கில் செலவு செய்கிறோம். வியாதி வேறு வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வாயில் நுழையாத பேர் கொண்ட கிரீம் எல்லாம் வாங்க வேண்டியதிருக்கிறது. சொரியாசிஸ் வியாதிக்கு உணவு கட்டுப்பாடு முக்கியம். அய்யாவுக்கு சொரியாசிஸ் என்று முடிவு செய்திருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி விளக்க வேண்டிய உணவுகளை பற்றி கேட்டுகொள்வது நல்லது. முக்கியமாக உளுந்து சேர்த்த உணவுகளை விலக்க வேண்டியதிருக்கும். டாக்டர் சொல்வதை கண்டிப்பாக கேட்கவேண்டும். திரும்ப வர விட்டு விடக்கூடாது.
      - இரண்டாவது பல். பல் வலி பொறுக்க முடியாத ஒன்று. தெரியாத்தனமாக பல்வலி என்று ஒரு பெரிய பல் டாக்டரிடம் போய்விட்டேன். ஏதோ ஒரு மினி தொழிற்சாலைக்கு போன மாதிரி இருந்தது. அங்கிருக்கும் படுக்கை, வளைந்து வந்து லைட் அடிக்கும் (அந்த காலத்து டேபிள் லாம்ப் மாதிரி) பல வகை நெம்புகோள்களை கொண்டு செய்யப்பட்ட ஒரு உபகரணம், பக்கத்துக்கு டேபிளில் யம லோகத்தில் விரல் நகக்கண்ணை பிடுங்கம் உபகரணம் போல பலப்பல சாமான்கள். பயந்தே போய்விட்டேன். மயக்கமருந்துக்கு ஊசி போட்டார்கள். பில் கொடுக்கும்போதுதான் தெரிந்தது. மயக்க மருந்து ஊசிக்கு பதில் அப்போதே பில்லை காட்டியிருந்தால் தானாக மயக்கம் வந்திருக்கும். ஊசி மருந்து அமௌண்ட்தாவது பில்லில் குறைந்திருக்கும். பல்லை டாக்டரிடம் கொடுத்து விட்டு அதற்கு பதில் பில்லை வாங்கிகொண்டு வந்தேன். பர்சின் வெயிட் கணிசமாக குறைந்திருந்தது

      நீக்கு
  3. நீங்கள் பிரபலஸ்தர் ஆனதால் உங்களை ஸ்பெஷலாக கவனித்திருக்கின்றன..

    ஐயாவுக்கு தேவலோகம் தானே பக்கம் ...
    விமானங்களெல்லாம் ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்கிறீர்களே..!

    பதிலளிநீக்கு
  4. காரைக்காலின் கொசுக்களினால் தங்களின் சொத்தையே அடகு வைக்கும் நிலை வந்து விட்டதா ஐயா. இனி மேலும் அப்பக்கம் போகாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஹா...ஹா... என்று எழுத்து நடையைப்பார்த்து சிரித்தாலும்... உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்...

    பதிலளிநீக்கு

  6. பதிவு நகைச் சுவையாக இருந்தாலும் , சீக்கிரமே பூரணகுணம் அடையப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஐம்பொன்னாலான பழனி கந்தசாமி சிலையின் பின்புறத்தை சில புண்ணியவான்கள் சுரண்டி விட்டார்கள் என கேள்விப்பட்டதுண்டு !அய்யா பழனி ,கந்தசாமி யின் தோலை கொசுக்கள் சுரண்டியதம் கொடுமைதான் ! என் அனுபவத்தையும் படிச்சுப் பாருங்க ...
    'சிரி'கவிதை!கொசு அடிக்கவும் கத்துக்கணும் !

    பறந்து வந்து ...உடம்பின் மேல் உட்கார்ந்து ...
    கடி இடத்தில் 'லுப்ரிகேசன் 'செய்யும் வரையும் தெரியாது ...
    மெய் மறந்து ரத்தம் உறிஞ்சுகையில் ...
    மெதுவாக தொட்டாலே செத்துவிடும் கொசு ...
    அது சொல்லும் பாடம் ...
    பறப்பதை பிடிக்க நினைக்காதே !
    சாதிக்க பொறுமை வேண்டும் !
    மெய் மறந்து இருக்கையில் ஆபத்து அதிகம் !

    பதிலளிநீக்கு
  8. ஐம்பொன்னாலான பழனி கந்தசாமி சிலையின் பின்புறத்தை சில புண்ணியவான்கள் சுரண்டி விட்டார்கள் என கேள்விப்பட்டதுண்டு !அய்யா பழனி ,கந்தசாமி யின் தோலை கொசுக்கள் சுரண்டியதம் கொடுமைதான் ! என் அனுபவத்தையும் படிச்சுப் பாருங்க ...
    'சிரி'கவிதை!கொசு அடிக்கவும் கத்துக்கணும் !

    பறந்து வந்து ...உடம்பின் மேல் உட்கார்ந்து ...
    கடி இடத்தில் 'லுப்ரிகேசன் 'செய்யும் வரையும் தெரியாது ...
    மெய் மறந்து ரத்தம் உறிஞ்சுகையில் ...
    மெதுவாக தொட்டாலே செத்துவிடும் கொசு ...
    அது சொல்லும் பாடம் ...
    பறப்பதை பிடிக்க நினைக்காதே !
    சாதிக்க பொறுமை வேண்டும் !
    மெய் மறந்து இருக்கையில் ஆபத்து அதிகம் !

    பதிலளிநீக்கு
  9. யாருக்கு வந்தாலும் கஷ்டமோ கஷ்டம்.கொசுமட்டும் காரணம் இல்லை. செடிப்பக்கம் இருக்கு சில பூச்சிகள் ,பூரான்கள் எல்லாமே காரணம்தான். நான் ஆறுமாதம் கஷ்டப்பட்டேன்.
    நம்ப மட்டீர்கள் மந்திரித்து மந்திரித்தே என் நோய் தீர்ந்தது.
    விளக்கெண்ணெய், சுண்ணாம்பு,மஞ்சள் சேர்த்த்துத் தடவச் சொன்னார் அந்தப் பெரியவர்.சரியாகிவிட்டது.!!!!

    பதிலளிநீக்கு
  10. நியாயத்தை கேளுங்கள் யாரால் எப்படி ஏன் செலவு வந்ததென்று.
    அப்படியே இதையும் படியுங்கள்
    http://kaviyazhi.blogspot.com/2012/11/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  11. சீரியஸான விடயத்தை நகைச்சுவையாக எழுதும் நீங்கள் அந்தக் காலத்து ஆள் என்பதை நம்ப முடியவில்லை, சோரியாசிஸ் வர பலக் காரணங்கள் உள்ளன, நல்ல வேளையாக முற்ற முன்னர் அறிந்து மருந்திட்டுள்ளீர்கள், வாழ்க விஞ்ஞானம். சித்தா, ஓமியோ எனப் போய் சிக்காமல் தப்பியதற்காக எல்லாம் வல்ல இடியப்ப பூதனாருக்கு 108 ஈமெயிலை தினமும் அனுபுங்க சரி ஆயிடும். :)

    பதிலளிநீக்கு
  12. நல்ல வேளை கனடாவில் கொசுக்கள்(கடிப்பதில்லை சம்மரில்) இல்லை.. தப்பிச்சேன் .

    பதிலளிநீக்கு
  13. //ஐம்பொன்னாலான பழனி கந்தசாமி சிலையின் பின்புறத்தை சில புண்ணியவான்கள் சுரண்டி விட்டார்கள் என கேள்விப்பட்டதுண்டு //

    இது ஐம்பொன் சிலை இல்லை. நவபாஷாணம் பயன்படுத்தி சித்தர் செஞ்ச சிலை. சொரண்டலுக்கு ஆளாகுது(இப்பவும்) என்று கேள்வி:(

    பதிலளிநீக்கு
  14. //அங்கு குடியிருக்கும் ஒரு லட்சத்தி இருபதனாயிரத்து ஒரு கொசுக்கள் உட்பட.//

    இந்த வரி உண்மையிலும் உண்மை.
    எங்கு பார்த்தாலும் கொசு தொந்திரவு தாங்கமுடியவில்லை
    அதை ஒழிக்கவும் முடியவில்லை
    இந்த இடத்தில்தான் (கொசு கடித்த இடத்தில் அல்ல) நாம் வெளிநாட்டுக்காரர்களிடம் இருக்கும் சுயஒழுங்குமுறைகளை (self-discipline) கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
    - நமது வீட்டு வாசல் சுத்தமாக இருந்தால் (அதுவே நிறைய இடங்களில் இருப்பதில்லை) போதும் என்று நம் வீடு குப்பையை அடுத்தவன் வீடு அருகில் (அவர்கள் பார்க்காத போதுதான்) கொட்டும் பழக்கம்
    - எதற்கெடுத்தாலும் அரசாங்கம் எதற்கு இருக்கிறது. என்ன செய்கிறது என்று கேட்டுக்கொண்டு சும்மா இருப்பது (அந்த நேரத்தில் ஒரு காலனிக்கு அல்லது ஒரு தெருவுக்கு ஒரு குழு வைத்துக்கொண்டு சுத்தத்தை நிலை நிறுத்தும் வேலை எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் உடல் வளையனும். கொஞ்சம் காசு செலவாகும். ஆனால் உடல் கெட்டு போய் டாக்டரிடம் போகும்போது அய்யா அவர்கள் சொன்னது போல சொத்தை விற்கவோ அடமானம் வைக்கவோ தேவை இல்லாமல் போகுமே.
    - வெளி நாடுகளில் குளிர் பிரதேசமாக இருப்பதால் இந்த தொந்திரவு அதிகமாக இருப்பதில்லை நம் நாடு வெப்ப பிரதேசமானதால் தூசு தும்பை அதிகமாகத்தான் இருக்கும். நாம்தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அக்கறை எடுத்துக்கொண்டு சுத்தத்தை கொண்டு வர வேண்டும்.
    - தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    - இது எங்க அப்பாவோட அப்பாவுடையது. தூக்கி எறிஞ்சிடாதென்னு எல்லா குப்பையும் வைத்துகொண்டிருந்தால் எல்லா பூச்சி பொட்டும் சேரத்தான் செய்யும். பழைய குப்பைகளை தூக்கி எறிய நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் (ஆனால் பக்கத்து வீட்டுக்கு முன்னால் அல்ல குப்பை தொட்டியில்)
    - காசு செலவில்லாத ஈசியான ஒரு முறை. வேப்பிலையை பறித்து நன்கு காய வைத்து (அதுதான் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துதே) தூள் செய்து ஒரு ஆறு மணி அளவில் ஒரு தேங்காய் மூடியில் (தேங்காய் பருப்பு எடுத்த பிறகு கிடைக்கும் ஓட்டில்தான்) லேசாக ஒரு கற்பூரத்தை பொடித்து இந்த வேப்பிலைதூளுடன் கலந்து புகை மூடம் போட்டால் அப்புறம் கொசுவாவது ஒன்றாவது. இந்த வேலையை செய்ய சோம்பேறிபட்டால் இருக்கவே இருக்கிறது 100 ரூபாய் சீனா பேட். என்ன மூன்று மாதத்திற்கு ஒன்று வாங்க வேண்டும். அப்புறம் என்ன கொசு போகிறதோ இல்லையோ நாம் காசு கொஞ்சம் காலியாகும்.

    பதிலளிநீக்கு
  15. //இப்போது தினமும் என் தோலை உரித்துக் கொண்டிருக்கிறேன். உரித்துவிட்டு உப்பு தடவுவதற்குப் பதிலாக ஆயின்ட்மென்ட்டுகளைத் தடவிக்கொண்டு இருக்கிறேன்//
    எந்த நேரத்தில் தோலை உரித்து உப்புகண்டம் போட வேண்டும் என்று சொன்னீர்களோ தெரியவில்லை. இப்போது நீங்களே உங்கள் தோலை உரித்து ஆயின்மென்ட் கண்டம் போட வேண்டியதாய் போயிற்று. சீக்கிரமே குணமாக வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
  16. //ஐயோ, என் நிலை இப்படி ஆகவேண்டுமா என்று என் கற்பனைக் குதிரையில் ஏறி யமலோகம் வரை போய்விட்டேன்.//
    அய்யாவே இந்த பயம் பட்டால் நாங்கள் எல்லாம் என்ன கதியாவது.
    பயம்தான் பாதி வியாதிக்கு காரணம். ஒரு ஜோக் கூட உண்டு. ரொம்ப பயந்த நோயாளியிடம் டாக்டர் சொன்னாராம் நான் இருக்கேன் பயப்படாதே. அதற்கு நோயாளி பதில் சொன்னாராம் நீங்க இருப்பீங்க டாக்டர் ஆனா நான் இருக்கணுமே என்று. பயம்தான் பாதி பேரை கொல்கிறது. எனவே அய்யா அவர்கள் இந்த பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்று ஒரு பதிவு போட்டால் பல பேருக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரண பயம், அதை வெற்றி கொண்டால் அப்புறம் எந்தக் கவலையும் இல்லை. பதிவு போடுவது பற்றி நான் முதலில் மரண பயத்தை வெற்றிகொண்ட பிறகுதானே போட முடியும்?

      நீக்கு
  17. //தன்னுடைய பிரிஸ்கிரிப்ஷன் பேடை எடுத்து, (அது புல்ஸ்கேப் சைசில் இருந்தது) அது நிறைய மருந்துகள் எழுதிக்கொடுத்தார்கள்//
    பின்னே டாக்டர் பொழைக்க வேண்டாமா
    பெரிய சீட்டில் மருந்து எழுதி கொடுத்தால்தானே மருந்துக்கடைக்காரன் பொழைக்க முடியும்.
    அந்த மருந்து உற்பத்தி பண்ணுபவனோ அல்லது டீலரோ வருடத்திற்கு ஒரு முறை டாக்டருக்கு மருந்து விற்பனையில் ஒரு பர்சண்டேஜ் போட்டு கிப்ட் (கிப்ட்கள் கூட இருக்கலாம்) கொடுக்க முடியும்.
    ஒரு ரகசியம் சொல்கிறேன்.
    டாக்டர் எழுதி கொடுக்கும் மருந்து சீட்டை கிழித்து போட்டு விடுங்கள். மருந்து வாங்காதீர்கள்.நீங்கள் பொழைக்க வேண்டாமா
    சும்மா ஒரு ஜோக்குக்குத்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நான் ஒரு அடிமை. என் இஷ்டத்திற்கு எதுவும் செய்யமுடியாது, பொண்டாட்டி சரீங்கணும். அப்புறம் பொண்ணுங்க சரீங்கணும். அப்புறம் என் மாப்பிள்ளைகள் ஏதும் சொல்லீடுவாங்களான்னு யோசிக்கணும். உங்க மாதிரி பின்னூட்டம் போடறவங்க சொல்றதையும் கவனிக்கணும். இத்தனை சிக்கல்கள் இருக்கும்போது நான் சுதந்திரமா ஏதாச்சும் செய்ய முடியுமா?

      நீக்கு
    2. பொண்டாட்டி, பொண்ணுங்க, மாப்பிள்ளைங்க, பின்னூட்டக்காரனுங்க
      அப்பப்பா இதுக்கு நடுவிலே இந்த கொசு வேற நிஜமாவே பாவங்க நீங்க

      நல்ல வேளை. பொண்ணுங்க, மாப்பிள்ளைங்க, பின்னூட்டக்காரனுங்கன்னு சொல்லற மூடுல பொண்டாட்டிங்கன்னு சொல்லாமே விட்டீங்களே சொல்லியிருந்தா பெரிய பிரச்னையில்ல ஆயிருக்கும்.

      கல்யாணம் ஆனா பாதி சுதந்திரம் போச்சு குழந்தைங்க பொறந்துட்டா மீதி சுதந்திரமும் போச்சு மாப்பிள்ளைங்க வந்துட்டா அப்புறம் அடிமை மாதிரித்தான்
      ஆனால் அதிலும் ஒரு சந்தோஷம் இருக்கில்லையா

      25 வருஷம் ப்ரீயா இருந்தாச்சு
      அப்புறம் பொண்டாட்டியோட அட்ஜஸ்ட் பண்ணித்தானே வாழனும்
      குழந்தைங்க வந்ததுக்கப்புறம் அவங்களுக்காகத்தானே நாம வாழனும். என்னங்க நான் சொல்றது சரிதானே
      அப்புறம் மாப்பிள்ளைங்க பாத்ததுக்கப்புறம், வேறென்ன வேண்டியிருக்கு வாழ்க்கையிலே. அதுதானே சந்தோஷமே.

      இதை போய் சுதந்திரம் போச்சுன்னு சொல்லுறதும் அடிமை ஆய்ட்டேன்னு பீல் பண்றதும் வேண்டாத வேலைகள் இல்லையா

      மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து , அதுவும் நம் ரத்த சொந்தங்களுக்காக விட்டுகொடுத்து வாழ்வதில் இருக்கும்
      சந்தோசம் அளவிட முடியாதது. அய்யா போன்றவர்கள் இதை அனுபவித்திருப்பார்கள்,

      இப்போ சுதந்திரமா ஏதாச்சும் செய்ய முடியுமான்னு கேட்கும் போது கூட உங்களின் அந்த சந்தோஷத்தை என்னால் பீல் பண்ண முடிகிறது

      நீக்கு
  18. //நான் வழக்கம்போல் இது என்ன கொசு சமாச்சாரம், இதுக்கெல்லாம் ஸ்பெஷலிஸ்ட் எதுக்கு என்று இன்டர்நெட்டில் கொசுக்கடிக்கு என்ன வைத்தியம் என்று பார்த்தேன்.அதில் சொல்லியிருந்த மருந்தை வாங்கி ஒரு மாதம் உபயோகித்தேன். அது நல்ல பலனைக் கொடுத்தது. எப்படியென்றால் தடிப்பு ஆங்காங்கே இருந்தது மாறி, நிறைய இடங்களில் வந்து விட்டது. அந்த இடங்களில் அரிப்பும் ஆரம்பித்துவிட்டது. இனி மேல் வேறு வழியில்லை என்ற நிலை வந்து விட்டது.//

    இது மாதிரி அட்வெஞ்சர்களில் ஈடுபடுவது உடம்புக்கு ரொம்ப ஆபத்து. இன்டர்நெட் வைத்தியம் ரொம்ப ஜெனரலானது. அது நோயாளியின் மற்ற சிம்ப்டம்ஸ்களை கண்டு கொள்ளாது. டாக்டர் இத்தகைய அனைத்து சிம்ப்டம்ஸ்களையும் (இதற்கு ஒரு நல்ல தமிழ் வார்த்தை யாராவது சொன்னால் பரவாயில்லை) ஆராய்ந்து பார்த்து நம்முடைய ஒவ்வாமையையும் (அலெர்ஜிக்கு தமிழ் வார்த்தை) பார்த்து மருந்து கொடுப்பார். எனவே டாக்டர்கள் வழியாக நம் உடம்பை பார்த்துக்கொள்வதே நல்லது.

    ஆனால் என்ன இப்போதிருக்கும் டாக்டர்கள் மருத்துவத்தை ஒரு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றி விட்டார்கள். மல்டி ஸ்பெஷலிடி ஹாஸ்பிடல்ஸ் ஒரு சூப்பர் மார்கட் மாதிரிதானே செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம்தான். சூப்பர் மார்கெட்டில் பொருளை எடுத்துக்கொண்டு காசு கொடுக்கவேண்டும். இங்கு முதலிலேயே காசு கட்டிவிட வேண்டும் பிறகுதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கும். சில இடங்களில் இன்னமும் மனிதாபிமானத்துடன் நோயாளிகளை பார்க்கும் ஹாஸ்பிடல்களும் இருக்கின்றன என்பதை நாம் ஒத்துகொள்ள வேண்டும்.

    ஆனால் beggers have no choice என்பது போல நமக்கு வேறு வழியில்லையே. நல்லபடி இருக்க வேண்டுமே. இதையெல்லாம் பார்த்தால் உடம்புக்கு ஒன்றும் வராமல் பார்த்துக்கொள்வதுதான் ஒரே வழி.

    பதிலளிநீக்கு
  19. //அனுபவஸ்தர்கள் என்ன வேலையென்று கேட்க மாட்டார்கள். அனுபவம் இல்லாதவர்களுக்கு அந்த வேலை என்னவென்று சொன்னால் புரியாது//

    அனுபவபூர்ணமான வார்த்தைகள்.
    நமக்கு சம்பந்தமில்லாத அனைத்திலும் மூக்கை நுழைக்கும் பழக்கம் நம்ம பக்கத்து ஆட்களிடம் உண்டு, நிறையவே உண்டு. கேட்பதுடன் நின்று விடாமல் ரொம்ப அக்கறை உள்ளவர் போல ஆலோசனைகள் வேறு சொல்லிகொண்டிருப்பார். விட்டால் போதும் என்று நாம் நினைப்பது அவருக்கு மட்டும் புரியவே புரியாது. நாகரிகம் கருதி அவர் பேச பேச தலையாட்டிகொண்டு நம் மனது வேறு எதையோ நினைத்துக்கொண்டிருக்க திடீரென்று அவர் என்னங்க நான் சொல்றது என்பர். பெப்பெபே என்று விழிப்பதை தவிர வேறு வழியே இல்லை.
    அனுபவஸ்தர்கள் முதல் பதிலிலேயே புரிந்து கொண்டு விலகி விடுவார்கள்.
    விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என்பது மாதிரிதான்.
    அனுபவஸ்தர்கள் கேட்க மாட்டார்கள். கேட்பவர்களுக்கு சொன்னால் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு அனுபவம் இருக்காது.
    ஒரு முறை மோதிலால் நேரு (வேறு யார் ஜவஹர்லால் நேருவின் தந்தை, இந்திரா காந்தியின் தாத்தா, ராஜீவ் காந்தியின் கொள்ளு தாத்தா, ராகுல் காந்தியின் எள்ளு தாத்தா - இந்த பெயர்முறைகள் சரியா என்பதற்குதான் இந்த மாதிரி விலாவாரியாக விளக்கியுள்ளேன்) கல்லுரி விடுதியில் இருந்த தன மகன் ஜவஹர்லால் நேருவிடம் மாத செலவுக்கு கணக்கு கேட்டாராம் (கணக்கு கேட்டாலே நேரு குடும்பம் என்றாலும் சரி எம்ஜியார்-கருணாநிதி ஆனாலும் சரி பிணக்குதான்) அதற்கு நேரு சொன்னாராம் "என்னை நீங்கள் நம்பினால் கணக்கு கேட்க மாட்டீர்கள் நம்பாவிட்டால் நான் என்ன மாதிரி கணக்கு கொடுத்தாலும் நம்ப மாட்டீர்கள். எனவே நான் கணக்கு கொடுக்கவில்லை". அது மாதிரி உதவி தேவைபட்டால் நாமே என்ன காரியம் என்று அவரிசம் கேட்காமலே சொல்லி விடுவோம். உதவி கிடைக்காது என்று நினைத்தால் என்ன கேட்டாலும் சொல்ல மாட்டோம். இது அனுபவஸ்தர்களுக்கு புரிந்திருப்பதால் நாமாக சொன்னாலொழிய கேட்கமாட்டார்கள்.
    இந்த பக்குவம் (maturity) நம்மவர்களுக்கு வந்து விட்டால் பாதி சண்டை சச்சரவுகள் குறைந்து விடும்.
    அந்த நாளே நமக்கு நன்னாள்.

    பதிலளிநீக்கு
  20. என்னதான் நகைச்சுவையுடன் எழுதியிருந்தாலும் உங்கள் கஷ்டம் மனதைப் பதற வைக்கிறது!விரைவில் குணமாவீர்கள் என நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. சொரியாசிஸ், வரும் முன் காப்பது எப்படி சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கொஞ்சம் கஷ்டமான வேலைங்க. உங்களால் எல்லாம் முடியாது.

      தோலை முழுவதும் உரித்து எடுத்துவிட்டு உடம்பு முழுவதும் மற்றும் தோலின் உட்புறமும் இந்த மருந்தைத் தடவி ஓரு நாள் வெய்யிலில் காய்ந்த பிறகு தோலைப் பழையபடி உடம்பின்மேல் போர்த்திவிட வேண்டியதுதான். ஆயுளுக்கும் சோரியாசிஸ் போயே போச்சு.

      நீக்கு
  22. இந்த நோய் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    நகைச்சுவையுடன் நோயை விரட்டும் உங்கள் பாசிடிவ் உள்ளம் வாழ்க!

    பதிலளிநீக்கு
  23. தோழர்களே வணக்கம்.எனக்கு சொரியாசிஸ் பிரச்சனை 7 வருடமாக இருந்தது.எனது கணவரின் நண்பர் மூலம் சித்தர்ஓலைசுவடி மருத்துவரை தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய ராசி, நட்சதிரிம் கேட்டு 10 நாள் பிறகு மருந்து மற்றும் தாயத்து தந்தார். 4 மாதம் பயன் படுத்த சொன்னார்.முதல் மாதம் பெரிய மாற்றம் தெரியவில்லை.இரண்டாவது மாதம் 70% குணமானது.3 மாதம் முடியும் முன்பே 100% குணமானது.ஆனால் மேலும் 1மாதம் பயண்படுத்த சொன்னார்.குணமாகி 4 மாதம் ஆகிறது.இனிமேல் வராமல்இருந்தால் பராவல்லை.அவரை தொடர்பு கொள்ள 9688888410. போன் செய்தால் பல முறை எடுப்பதில்லை.Whatsappல் தொடர்பு கொண்டால் நிச்சயம் பேசலாம்.
    இதை அலட்சிய படுத்த வேண்டாம்.பயண் பெருங்கள்.

    பதிலளிநீக்கு
  24. சோரியாசிஸ் நோய்க்கு நிரந்தர குணம் தரும் மூலிகை எண்ணெய் (பத்தியம் உண்டு)
    வணக்கம் நண்பர்களே
    நான் மருத்துவர் (Doctor) அல்ல. நான் சோரியாசிஸ் நோயினால் 14 வருடம் பாதிக்கப்பட்டு அனைத்து விதமான மருந்துகளையும் சாப்பிட்டு குணமே ஆகாத நிலையில் தேனீ மாவட்டம் மயிலாடும்பாறை அருகே வழிப்போக்கில் சந்தித்த சித்தர் கூறிய மூலிகை எண்ணெய் தயார் செய்து உபயோகப்படுத்த 90 நாட்களில் குணமடைந்தது. பத்தியம் PURE VEG
    சோரியாசிஸ் நோய் பாதிப்புள்ள நண்பர்கள் எனது வாட்சப்பில் தொடர்புகொள்ளவும் அல்லது அழைக்கவும்.
    அனைவருக்கும் பகிருங்கள்.
    இது விளம்பரம் அல்ல. முழுமையான சேவை நோக்கம் மட்டுமே...
    9566750595
    My video link.
    https://youtu.be/7sm2UQbC_N4

    பதிலளிநீக்கு