வெள்ளி, 30 நவம்பர், 2012

கடவுள் சைவமா, அசைவமா?


இத்தகைய கேள்விகளையே கேட்கக்கூடாது, இதுதான் தமிழனின் முக்கிமான கெட்ட குணம், நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டு நம்புகிறவர்கள் மட்டும் எங்களிடம் வந்தால் போதும் என்று சொல்லும் மத குருமார்கள் இருக்கிறார்கள். நன்றாகவே இருக்கிறார்கள்.

ஆனாலும் சமீப காலங்களில் இந்த சைவ, அசைவ உணவுகளைப் பற்றிய விழிப்புணர்வு பதிவுலகில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இந்த சந்தேகம் என் மனதில் தோன்றியது.

இரண்டு விதமான கடவுள்களும் இருக்கிறார்கள். ஆடு, மாடு, எருமை, கோழி இவற்றைப் பலி கொடுக்கும் கடவுள்கள் நிறைய இருக்கின்றன. கோவில் மடப்பள்ளியில் அய்யர் சமைத்ததைத்தான் சாப்பிடுவேன் என்று சொல்லும் கடவுள்களும் இருக்கிறார்கள்.

கடைசியில் பார்த்தால் கடவுள் பெயரைச் சொல்லி மனுசன் சாப்பிடுகிறதுக்காகத்தான் இந்த படையல்களெல்லாம். இந்த வழக்கங்களெல்லாம் எப்போது யாரால் முறைப்படுத்தப்பட்டன என்று தெரியவில்லை. எது சரி என்றும் தெரியவில்லை?

எது எப்படியானாலும் மனிதன் தன்னுடைய தேவைக்கேற்பவும் கற்பனைக்கேற்பவும் கடவுள்களைப் படைத்திருக்கிறான். தனக்கும் பிடித்த உணவு வகைகளை கடவுள் பெயரைச்சொல்லி சாப்பிடுகிறான். ஆகவே ஒரு வகை உணவுதான் சிறந்தது மற்ற வகை உணவு தாழ்ந்தது என்று கருதவேண்டியதில்லை.

புதன், 28 நவம்பர், 2012

சட்டமும் மனிதாபிமானமும்

சட்டம் பெரிதா? மனிதாபிமானம் பெரிதா?

நீதி அறிந்தவர்கள் எப்பொழுதும் மனிதாபிமானத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளார்கள். இந்திய நீதித்துறையின் கோட்பாடுகளின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளினால் 99 சதம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பித்தாலும் சரி, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். அதனால்தான் பெரிய குற்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெறுவதில்லை.

மாவட்ட ஆட்சியர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரங்களைப் பற்றி சாதாரண குடிமகன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த அதிகாரங்களை அவர் சாதாரண நேரங்களில் பயன் படுத்துவதில்லை. பேரிடர் காலங்களில் மட்டுமே பயன்படுத்துவார். இது முற்றிலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயல்பட அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள்.

ஒவ்வொரு உயர் அதிகாரிக்கும் இப்படிப்பட்ட அதிகாரங்கள் உண்டு. ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் பயம். நாளைக்கு யாராவது கேள்வு கேட்டால் என்ன சொல்வது என்ற பயம். இன்ன காரணத்திற்காக பொது நன்மைக்காக அல்லது ஒரு தன் மனிதனின் உரிமையைக் காக்க, இந்த முடிவை நான் எடுத்தேன் என்று சொல்லக்கூடிய தார்மீக பலம் அவர்களுக்கு இல்லை.

சமீப காலத்தில் பல கொலைகளில், அவை தற்காப்பிற்காக செய்யப்பட்டவை என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்தபோது உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை அரெஸ்ட் கூட செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் சட்டத்தை விட மனிதாபிமானம்தான் உயர்ந்தது என்று அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் நினைவு கொள்கிறது.

என் சர்வீசில் நடந்த ஒரு சம்பவம். நான் தஞ்சாவூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் இரவு 8 மணிக்கு ஆபீஸ் ஜீப்பில் என் இருப்பிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் அப்போது தஞ்சாவூர் அவுட்டரில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அப்பாது லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. மின்சாரமும் இல்லை. ரோடு முழுவதும் இருட்டு.

என் வீட்டிற்கு சமீபத்தில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு வயதான அம்மா கையைக் காட்டி என் வண்டியை நிறுத்தினார். நான்தான் ஜீப்பை ஓட்டிக்கொண்டு வந்தேன். நான் வண்டியை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா, "என் மகளுக்கு பிரசவ வலி வந்திருக்கிறது. உடனே ஆஸ்பத்திருக்குப் போகவேண்டும். இந்த இருட்டிலும் மழையிலும் ஒரு ஆட்டோ கூட இந்தப் பக்கம் வரவில்லை. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்" என்றார்கள்.

அரசு வண்டியை சொந்தக் காரியங்களுக்கு பயன் படுத்தக்கூடாது என்பது சட்டம்.  ஆனால் அங்கு நான் எதிர்கொள்வது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. நான் அதிகம் யோசிக்கவில்லை. சரி, வாருங்கள் என்று அந்த அம்மாவின் வீட்டிற்குச் சென்று அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு, நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தேன். அந்த அம்மா பலமுறை நன்றி சொல்லிவிட்டு ஐந்து ரூபாய் கொடுத்தார்கள். நான் அந்தப் பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

நான் செய்தது சட்டத்திற்குப் புறம்பாயிருக்கலாம். ஆனால் என் மனச்சாட்சியின்படி அது ஒரு மனிதாபிமானச் செயல். அதை நான் செய்திருக்காவிடில் என் ஆயுள் முழுவதும் என் மனச்சாட்சி என்னைக் குத்திக்கொண்டு இருந்திருக்கும். இந்த காரியத்திற்காக எனக்கு ஏதும் தண்டனை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். என்னுடைய பெரிய அதிகாரியை அடுத்த முறை சந்தித்தபோது இதைச் சொன்னேன். அவர் நீ செய்தது சரிதான், ஆனால் வண்டியின் லாக்புக்கில் எழுதாதே, பின்னால் ஆடிட்டர்கள் வீணாக தொந்திரவு செய்வார்கள் என்று சொல்லிவிட்டார்.

ஒவ்வொரு உயர் அதிகாரியும் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக, மனிதாபிமான அடிப்படையில், முடிவுகள் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே நிதரிசனம்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

நம்பள்கியின் கேள்விக்கு பதில்.


வருத்தத்திற்குரிய நிகழ்வு.
டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா, இந்த வருத்தம் ஏன் தினமும் இறக்கும் 5000 இந்தியக் குழந்தைகளிடம் யாருக்கும் இல்லை; அதுதான் என் கேள்வி?

நீங்கள் இதற்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா; எனக்கு பல பெரிய மனிதர்கள் "இந்தியாவில்" சிந்திப்பது இன்றும் புரியவில்லை; உங்களையும் சேர்த்துதான் இந்தக் கேள்வி.
'
ஒரு வேளை சிகப்பாக இருந்தால் "மட்டுமே" இந்திய அரசாங்கம் கேள்வி கேட்குமா? உதவி செய்யுமா? நீங்கள் பெரிய மனிதர்; நீங்கள் இதற்க்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...

[[
பழனி.கந்தசாமி said...வருத்தத்திற்குரிய நிகழ்வு.]]


நம்பள்கியின் இந்தக் கேள்வியை இன்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் பிறந்து இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து இன்று அமெரிக்க சிகப்புத்தோல்களுக்கு சேவை புரியும் நீங்கள் இந்த 5000 குழந்தைகளின் இறப்புக்காக என்ன செய்தீர்கள் என்று சொல்லிவிட்டு, அப்புறம் எங்களைக் கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறோம்.


திங்கள், 26 நவம்பர், 2012

நல்ல கலந்துரையாடல் - எப்படி இருக்கவேண்டும்?


சமீபத்தில் நானும் என்னுடைய இரு நண்பர்களும் என்னுடைய ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தோம். இதுதான் முதல் முறையாக அவர் வீட்டுக்குப்பொவது.

நாங்கள் சுமார் அரை மணி நேரம் இருந்தோம். நான் போனவுடன் என் நண்பர்களை அறிமுகப்படுத்தினேன். கொஞ்ச நேரம் கழித்து அவர் மனைவி ஸ்வீட், காரம் கொண்டுவந்து வைத்தார்கள்.

நாங்கள் போனதிலிருந்து விடை பெற்றுக்கொள்ளும் வரை, நாங்கள் அங்கே இருந்த அரை மணி நேரம் முழுவதும் அவர்தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் பெண்களின் புகுந்த வீட்டுப் பெருமை, தன் உத்தியோக காலத்திய பெருமை ஆகியவைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தாரே தவிர, என்னைப்பற்றியோ, என்னுடன் வந்த நண்பர்களைப் பற்றியோ ஒன்றும் விசாரிக்கவில்லை.

இந்த மாதிரி அநேகம் பேர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழில் "கழுத்தறுப்பு" என்றும் ஆங்கிலத்தில் "போர்" என்றும் பெயர் வைத்திருக்கிறோம். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

வெள்ளி, 23 நவம்பர், 2012

பதிவுகளின் வகைகள்.

பதிவுகள் பல விதம். சில பதிவுகள் எல்லோரும் படித்துப் பயன் பெறட்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகின்றன. அவை படிப்பதற்கு எளிதாக, நல்ல நடையில், நல்ல எழுத்துக்ளுடன், நல்ல இடைவெளியுடன் எழுதப்படுகின்றன.


ஆனால் அநேக பதிவுகள் அவரவர்களுக்காக மட்டுமே பதிவிடப்படுகின்றன. இந்தப் பதிவுகளை மற்றவர்கள் வாசிக்கவேண்டும் என்று அந்த்ப பதிவர்கள் நினைப்பதில்லை. அந்தப் பதிவுகள் பெரும்பாலும் கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துகளுடன் இருக்கும். டிசைனும் டார்க் கலரில் இருக்கும்.


நாம் எழுதப் படிக்க ஆரம்பித்த காலத்தில் கருப்பு சிலேட்டில் வெள்ளை பலப்பத்தினால் எழுதினோம். ஆனால் வளர்ந்த பிறகு வெள்ளைக் காகிதத்தில் கருப்பு மசியினால் எழுத ஆரம்பித்தோம். இதுதான் இயற்கையான வளர்ச்சி.

சில பதிவுகளில் கொசகொசவென்று படங்களும் இன்ன பிறவும் இருக்கும். பதிவு எங்கேயென்று தேடவேண்டும்.


நீங்கள் எப்படி?

புதிய பதிவர்களுக்கு சில நல்ல யோசனைகள் கோடங்கியின் இந்த பதிவில் இருக்கின்றன.

வியாழன், 22 நவம்பர், 2012

என் தகப்பனாரின் திதி



நேற்று என் தகப்பனாருக்கு திதி கொடுத்தேன்.

பிராமணல்லாதவர்கள் வருடத்தில் மூன்று அமாவாசை (ஆடி, புரட்டாசி, தை) மற்றும் தாயார், தகப்பனார் திதி அதாவது திவசம் இவைகளை அனுஷ்டிப்பது வழக்கம். ரொம்ப நாளைக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திற்கும் அல்லது இரண்டு மூன்று கிராமங்களுக்கு சேர்த்து ஒரு பஞ்சாங்க அய்யர் இருப்பார். அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுப்பது வசதியானவர்கள் மட்டும் செய்வார்கள். ஆனால் எல்லோரும் திதி கொடுக்கத் தவறமாட்டார்கள். திதி எப்பொழுது வருகிறது என்று இவர் சில தினங்களுக்கு முன்பே வந்து சொல்லுவார். திதியன்று வீட்டிற்கு வந்து திதியை நடத்தி வைத்துவிட்டுப் போவார். ஆனால் இப்போது அந்த மாதிரி பஞ்சாங்க ஐயர்கள் இல்லை.

திதியன்று பேரூர் போனால் அங்கு ஆற்றங்கரையில் கொட்டகை போட்டுக்கொண்டு ஏகப்பட்ட அய்யர்கள் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு அய்யருக்கும் ஒவ்வொரு ஏஜென்ட் உண்டு. இந்த மாதிரி திதி மற்றும் அந்திமக் காரியங்கள் செய்ய வருபவர்களை அவர்கள் கரெக்ட்டாக மோப்பம் பிடித்து, அமுக்கி, அவர்களின் கொட்டகைக்கு தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். அந்த மெயின் அய்யர் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருப்பார். பார்ட்டியைப் பார்த்ததுமே எவ்வளவு தேறும் என்று கணித்து விடுவார்.

அவர் தரத்திற்கு இல்லையென்றால் பக்கத்து கொட்டகைக்கு தள்ளிவிடுவார். தன்னுடைய தரத்திற்கு ஏற்றவர்களை மட்டும் நிறுத்திக்கொள்வார். நமக்குப் புரியாத வார்த்தைகளை உச்சரித்து ஐந்து நிமிடத்தில் காரியத்தை முடித்து விடுவார். கடைசியில் இறந்தவர் பெயரைக்கேட்டு அவரும், அதற்கு முந்தின ஏழேழு தலைமுறையினரும் சொர்க்கத்தில் க்ஷேமமாக வாழட்டும் என்று சொல்லி, தக்ஷிணையை வாங்கிக்கொண்டு அடுத்த கிராக்கியை கவனிக்க ஆரம்பித்து விடுவார்.
கொஞ்சம் அரிசியைக் கொடுத்து அதை அன்றைய சமையலில் சேர்த்துக்கொள்ளச் சொல்லுவார். அவ்வளவுதான். நாம் நம் முன்னோர்களைக் கடைத்தேற்றி விட்டாயிற்று என்ற திருப்தியுடன் வீட்டுக்கு வந்து மற்ற வேலைகளைக் கவனிக்கவேண்டியதுதான்.
மற்ற வேலைகள் என்னவென்றால், அன்றைக்கு விரதம் இருந்து விதிப்பிரகாரம் உண்டான சமையல் செய்யவேண்டும். விதிகள் என்னென்னவென்றால்:

கீழ்க்கண்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
வெங்காயம்
கத்தரிக்காய்
இங்கிலீஷ் காய்கறிகள்.

சேர்த்துக்கொள்ளவேண்டிய காய்கறிகள்.
வாழைக்காய்
பாவற்காய்
சேனைக்கிழங்கு
அரசாணிக்காய்
கொத்தவரங்காய்
அவரைக்காய்
பிரண்டை
அகத்திக்கீரை
வெண்டைக்காய்
வாழைப்பூ
வாழைத்தண்டு

இதெல்லாம் அய்யர் சொல்லிக் கொடுத்ததுதான்.
அன்றைய சமையல் கொஞ்சம் தடபுடலாக இருக்கும். வடை, பாயசம் கண்டிப்பாக உண்டு.

சமையல் முடிந்ததும் ஒரு கிழக்குப்பார்த்த சுவரில் பக்கம் பக்கமாக, மூன்று இடத்தில் விபூதியை தண்ணீரில் குழைத்து முப்பட்டை போடவேண்டும். இவைகள் காலம் சென்ற மூன்று தலைமுறைகளைக் குறிக்கும். அவற்றிற்கு சந்தனப்போட்டு வைத்து குங்குமம் வைத்தால் மூன்று தலைமுறையினரை வீட்டில் எழுந்தருளச் செய்தாகி விட்டது.
இதற்கு முன்னால் ஒரு தலைவாழை இலை போட்டு அதில் அன்று செய்த உணவு வகைகள் எல்லாவற்றையும் பரிமாற வேண்டும். பக்கத்தில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கவேண்டும். ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, இரண்டு பழம், ஒரு தேங்காயை உடைத்து இரண்டு மூடியையும் வைக்கவேண்டும்.

ஊதுபத்தி கொளுத்தி, அதற்கு ஸ்டேண்ட் இருந்தால் அதில் வைக்கலாம், இல்லாவிட்டால் அந்த வாழைப் பழத்தில் செருகி வைத்துவிடலாம். ஒரு சின்ன சொம்பில் சுத்தமான தண்ணீர் வைக்கவேண்டும். தேங்காய் உடைக்கும்போது வரும் இளநீரை இந்தச் சொம்பில் பிடித்து வைக்கவேண்டும்.

எல்லாம் ரெடி. இனி சாமி கும்பிடவேண்டியதுதான். முதலில் தண்ணீர் சுற்றிப்போடவேண்டும். பிறகு ஊதுபத்தி சுற்றவேண்டும். முன்னொரு காலத்தில் விறகு அடுப்புகள் இருந்த காலத்தில், சாம்பிராணி வைத்திருப்பார்கள். கேஸ் வந்த பிறகு அந்த வழக்கங்கள் வழக்கொழிந்து போயின. பிறகு கற்பூரம் பற்றவைத்து தீபாராதனை காட்டவேண்டும். பிறகு இன்னொரு முறை தண்ணீர் சுற்றிப்போட்டால் பூஜை முடிந்தது. எல்லாரும் கும்பிட்ட பிறகு, அந்த தலைவாழை இலையில் இருக்கும் உணவுகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து, வேறு ஒரு இலையில் எடுத்து வைக்கவேண்டும்.

குடும்பத்தினர் அனைவரும் இதைச் செய்யவேண்டும். படையல் இலையில் கொஞ்சம் உணவு மீதி இருக்கவேண்டும். இப்படி தனியாக எடுத்த உணவைக் கொண்டு போய் காகத்திற்கு வைக்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இதற்கென்று ஒரு இடம் இருக்கும். அங்கு வைத்தால்தான் காகம் வரும். நம் முன்னோர்கள் காக ரூபத்தில் வந்து நாம் வைக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டுப் போவதாக ஐதீகம். இதுவும் அய்யர் சொல்லிக் கொடுத்ததுதான். மாடு மேய்ப்பவனுக்கு இதெல்லாம் வேற எப்படித்தெரியும்?

காகம் வந்து சாப்பாடு எடுத்த பிறகுதான் குடும்பத்தினர் சாப்பிடலாம். படையல் போட்ட இலையில், அன்றைய திதி கொடுத்தவன் சாப்பிடவேண்டும். மற்றவர்கள் எல்லோருமே அன்று வாழை இலையில்தான் சாப்பிடவேண்டும். இலையில் மிச்சம் வைக்கக் கூடாது.
தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும். நான் வருடத்தில் ஐந்து நாட்கள் இப்படி தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறேன். அதாவது மூன்று அமாவாசை, இரண்டு திதிகள், ஆகியவற்றுக்காக.

அன்று இரவு சாப்பாடு சாப்பிடக்கூடாது. வடை பாயசம் மிச்சம் இருப்பதை சாப்பிடலாம்.

கடவுள், மறுபிறவி இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சி இது. ஏதோ ஒரு வகையில் நம் முன்னோர்களை வழிபட உண்டான ஒரு முறை. அந்த வகையில் இதை நான் வருடா வருடம் கடைப்பிடிக்கிறேன். ஆனால் பேரூர் போய் அய்யருக்கு காணிக்கை கொடுப்பதில்லை. வீட்டில் சாமி கும்பிடுவதோடு சரி.

கடந்த 45 வருடங்களாக இந்த திதி கொடுப்பதைச் செய்து வருகிறேன். முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்த ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

புதன், 21 நவம்பர், 2012

வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்


1. எனக்கு "வயதாகிவிட்டது" என்று எப்போதும் சொல்லாதீர்கள். மூன்று வகைகளில் வயதைக் கணக்கிடலாம். முதல் வழி உங்கள் பிறந்த தேதியை வைத்து. இரண்டாவது வழி உங்கள் உடல் ஆரோக்கியத்தை வைத்து. மூன்றாவது வழி உங்கள் வயது எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது. உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியாது. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்க முடியும். உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய நல்ல கனவுகளுடன் வாழுங்கள்.

2. நல்ல ஆரோக்கியமே மனிதனின் சொத்து. நீங்கள் உங்கள் மனைவி மக்களை உண்மையாக விரும்புவீர்களானால் உங்கள் உடல் நலத்தை முக்கிமாகப் பேணவேண்டும். அவர்களுக்கு நீங்கள் ஒருபோதும் பாரமாகி விடக்கூடாது. வருடத்திற்கு ஒரு முறை ஹெல்த் செக்அப் செய்து கொள்ளுங்கள். ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள்.

3. பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய, குடும்ப அங்கத்தினர்களின் மரியாதையைப் பெற, உடல் ஆரோக்கியத்தைப் பேண, இத்தியாதி காரியங்களுக்குப் பணம் தேவை. உங்கள் குழந்தைகளானாலும் சரி, உங்கள் சக்திக்கு மீறி செலவு செய்யாதீர்கள். வயதான காலத்தில் அவர்கள் உங்களைக் காப்பாற்றினால் சந்தோஷப்படுங்கள். இல்லாவிட்டால் உங்கள் காலில் நிற்க பணம் தேவை.

4. அமைதியான வாழ்வு வாழுங்கள். நல்ல பொழுது போக்குகளும் நல்ல தூக்கமும் வாழ்க்கைக்கு அவசியம். ஆன்மீக விஷயங்களில் நாட்டமும், நல்ல சங்கீதமும் அமைதிக்கு வழி.

5. நேரம் விலை மதிப்பு மிக்கது. அதுவும் வயதான பின்பு மிகமிக மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிதாகப் பிறக்கிறீர்கள். அந்த நாளை கவலைகளில் வீணாக்காமல் இன்பமாக கழியுங்கள்.

6. மாறுதல் ஒன்றே மாறாதது. காலம், மனிதர்கள், வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைக்குறித்து வருத்தப்படாமல் நீங்களும் அந்த மாறுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. கொஞ்சம் சுயநலத்துடன் வாழுங்கள். உங்களுக்கு என்று சில விருப்பங்கள் இருக்கலாம். இது நாள் வரை மற்றவர்களுக்காக உழைத்ததில் அந்த விருப்பங்களை தள்ளிப்போட்டிருப்பீர்கள். இப்போது அவைகளை அனுபவியுங்கள். அது சுயநலம் போல் தோன்றினாலும் அந்த சுய நலம் உங்களுக்குத் தேவை.

8. மன்னிப்போம்-மறப்போம். மற்றவர்களின் குறைகளை பெரிது பண்ணாதீர்கள். உங்களுடைய நலனுக்காக, உங்களுடைய இரத்த அழுத்தம் அதிகமாகாமலிருக்க மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

9. ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவியுங்கள். மற்றவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பாணியில் வாழ சுதந்திரம் உண்டு.

10. மரண பயத்தை வெல்லுங்கள். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதி மாற்ற முடியாதது. அதை உணர்ந்து மரண பயத்தை வெல்லுங்கள்.   நீங்கள் இறந்து விட்டால் உங்கள் மனைவி மக்கள் எப்படி வாழ்வார்கள் என்ற கவலை வேண்டாம். யாரும் இறந்தவர்களுடன் இறப்பதில்லை. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.


செவ்வாய், 20 நவம்பர், 2012

இருசக்கர வாகனங்களும் விபத்துகளும்.

செய்தித்தாள்களைப் படித்தால் அனுதினமும் தவறாமல் கண்ணில் படும் செய்தி என்னவென்றால் இரு சக்கர வாகன விபத்துகள்தான். இரண்டு அல்லது மூன்று விபத்துகள் தவறாமல் நடக்கின்றன.

நான் ரோட்டில் போகும்போது இந்த இருசக்கர வாகன ஓட்டிகள் எவ்வாறு ஓட்டுகிறார்கள், விபத்துகள் ஏன் நடக்கின்றன என்று கவனிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அப்படிக் கவனித்ததில் எனக்குப்பட்ட சில குறிப்புகளை இங்கு கொடுக்கிறேன்.

கல்லூரி செல்லும் 21 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் இரவு 9 மணிக்கு மேல்தான் ரோட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு அப்போது ரோடு "ரேஸ் டிராக்" மாதிரி தெரியும் போல. அவர்கள் வைத்திருக்கும் வாகனம் அதிக பட்சமாக  என்ன வேகத்தில் போகும் என்று டெஸ்ட் செய்வார்கள். கூடவே போட்டிக்கு இன்னும் இரண்டு வண்டிகள் இருக்கும். ஒவ்வொரு வண்டியிலும் மூன்று மூன்று பேர் இருப்பார்கள். பாம்புகள் நெளிந்து ஓடுகிற மாதிரிதான் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். இவர்கள் வண்டிகளெல்லாம் நேர்க்கோட்டில் போகாது என்று நினைக்கிறேன்.

போதாததிற்கு எல்லோரும் சோமபானம் அருந்தியிருப்பார்கள். ஹெல்மட் போடமாட்டார்கள். விபத்திற்கு வேறு காரணங்கள் வேண்டுமா?

அடுத்த ஜாதி, இருசக்கர வண்டி எவ்வளவு பேர்களைத் தாங்கும் என்று டெஸ்ட் செய்பவர்கள். இவர்கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்யாணம் ஆகி  இரண்டு குழந்தைகள் இருக்கும். நான்கு பேரும் வண்டியில் போகும்போது வண்டியின் சக்தி குறையும். பேலன்ஸ் கிடைக்காது. ஆனால் அதைக் கவனிக்காமல் இவர்கள் வண்டி ஓட்டுவார்கள். பெரிய வண்டிகளில் மோதி விபத்து ஏற்படுத்துவார்கள்.

இன்னொரு ஜாதி. ரோட்டின் ஓரத்தில் போய்க் கொண்டிருப்பார்கள். சைடு மிர்ரரைக் கவனிக்க மாட்டார்கள். பின்னால் ஏதாவது பெரிய வண்டி வந்து கொண்டிருக்கும். அதைப் போக விடமாட்டார்கள். அந்த வண்டி மகவும் பக்கத்தில் வந்த பிறகு பயந்து போய் வேகத்தைக் குறைப்பார்கள். பெரிய வண்டியின் இடது மூலை இரு சக்கர வாகனத்தை லேசாகத் தொடும். வாகனம் கவிழ்ந்து வாகனத்தில் செல்பவர்கள் தலை குப்பர விழுவார்கள். தலையில் அடிபட்டு பரலோகம் போவார்கள்.

அப்புறம் இந்த செல்போன்கள் இருக்கிறதே, அதை யமதர்மன்தான் கண்டுபிடித்து இந்த உலகிற்கு அனுப்பியிருப்பான் என்று நம்புகிறேன். செல்போன் பேசும்போது புற உலகில் என்ன நடக்கிறது என்று இவர்களுக்குத் தெரியுமா?

இந்த மாதிரி விபத்துகள் நடந்த பிறகு அவர்களின் தாய் தகப்பனின் நிலை எப்படியிருக்கும் என்று இவர்கள் ஒரு நொடியாவது சிந்தித்தால் இப்படி விபத்துகள் நடக்குமா?

இவர்களெல்லாம் எப்போது திருந்துவார்களோ?

(படங்கள் கூகுள் உதவி)

திங்கள், 19 நவம்பர், 2012

பின்னூட்டம் போட இடைஞ்சல்கள்

ஒரு பதிவப் படிச்சா நல்லா இருந்தா, பின்னூட்டம் போடலாமுன்னு விரும்புகிறோம்.

முக்கால்வாசி பதிவுகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. பின்னூட்டம் போட்டமா, பப்ளிஷ் பட்டனை அமுக்கினமா, வெளியில வந்தமான்னு இருக்குது. இந்த மாதிரி பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது ஒரு சுகமான அனுபவம். அந்தப் பதிவர் கமென்ட் மாடரேஷன் வச்சிருந்தா வச்சுக்கட்டும். பின்னூட்டம் போடுவதில் அது ஒரு பிரச்சினை இல்லை.

சில பதிவுகளில் IAS  பரீட்சை மாதிரி இந்தப் படத்திலுள்ள எழுத்துகளை இந்தக் கட்டத்தினுள் எழுது என்று வைத்திருக்கிறார்கள். இது ஏன் என்று என்னுடைய களிமண் மூளைக்குப் புரியவில்லை. தங்களுடைய பதிவிற்குப் பின்னூட்டம் வேண்டாமென்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

அப்புறம் இந்த வேர்டுபிரஸ் பதிவுகளுக்குள் போனால் பின்னூட்டம் போடுவதற்கு உங்கள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கிறது. அந்த அளவு பொறுமை எனக்கு இல்லை. என்னால் முடியவில்லை.

ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். விடிகிற அப்போ விடியட்டும்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

கணினி மென்பொருட்கள் - தரவிறக்கப்போகிறீர்களா?

கணினி மென்பொருட்கள் - தரவிறக்கப்போகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்கள். நான் சொல்லும் கருத்துகளை கேட்டுவிட்டு பின்பு தரவிறக்கத்தைத் தொடருங்கள்.

1. நீங்கள் தரவிறக்கப்போகும் மென்பொருள் உங்களுக்கு மிகமிக அவசியமா?

2. அந்த மென்பொருள் வேலையை உங்கள் கணினியில் ஏற்கனவே இருக்கும் மென்பொருட்கள் செய்யாதா?

3. அதை விலை கொடுத்து வாங்க்ப்போகிறீர்களா அல்லது இலவசமாக வேண்டுமா?

4. இலவசமாக கிடைக்கிறதென்றால் அது 30 நாள் டிரையல் வெர்ஷனா அல்லது நிரந்தர வெர்ஷனா?

5. அதைத் தரவிறக்கும்போது கொசுறாக வேறு வேண்டாத மென்பொருட்களை உங்கள் தலையில் கட்டுகிறார்களா?

6. உங்களிடம் நல்ல ஆன்டிவைரஸ் இருக்கிறதா? அதன் மூலம் நீங்கள் தரவிறக்கும் மென்பொருளை சோதித்தீர்களா?

7. யாரோ சொன்னார்களென்று சும்மா டெஸ்ட்டுக்காக அந்த மெனபொருளைத் தரவிறக்குகிறீர்களா?

இந்த கேள்விகளை மனதில் நன்றாக சிந்தித்து, பிறகும் அந்த மென்பொருள் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், பிறகு தரவிறக்கம் செய்யுங்கள்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

கோவையில் நீங்கள் கார் ஓட்டுகிறீர்களா? ஜாக்கிரதை


கோவைவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்கள் கார் ஓட்டுபவராக இருந்தால் என் நண்பரின் இந்த அனுபவத்தைப் படியுங்கள்.

கோவையில் பல முக்கியமான சாலைச் சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது கூடவே ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரியும் நிற்பார்.

நம் தமிழ்நாட்டு மக்கள் சட்டத்திற்கு மிகவும் மரியாதை கொடுப்பவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். போலீஸ்காரர் இருக்கிறார் என்றால் கரெக்ட்டாக பச்சை லைட் வரும்போதுதான் வண்டியை ஓட்டுவார்கள். சிகப்பு லைட் எரிந்தால் வெள்ளைக்கோட்டுக்கு முன்பே வண்டியை நிறுத்து விடுவார்கள். போலீஸ்காரர் இல்லையென்றால் அவர்கள் நடந்துகொள்வது வேறு விதம். சிவப்பு லைட் பச்சையாக மாறுவதற்கு சில நொடிகள் முன்பே வண்டியை எடுத்து விடுவார்கள். அடுத்த பக்கம் இருந்து வருபவர்கள் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஒரு விபத்து நிச்சயம்.

இதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சிக்னல் இருக்குமிடத்திலும் தானியங்கி காமிராவைப் பொறுத்தியிருக்கிறார்கள். சிவப்பு விளக்கு எரியும்போது வண்டியை எடுப்பவர்களை அது தானாகவே போட்டோ எடுத்து போலீஸ் கன்ட்ரோல் அறைக்கு அனுப்பி வைக்கும்.

இந்த விபரங்கள் கோவையில் வண்டி ஓட்டுபவர்கள் அனைவருக்கும் தெரியும். என் நண்பர் ஒருவர் இந்த மாதிரி ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. அங்கே நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர், என் நண்பரைப் போகுமாறு சைகை காட்டியிருக்கிறார். அப்போது சிவப்பு லைட் எரிந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் போலீஸ்காரர் போகச்சொல்கிறாரே என்று என் நணபர் சிக்னலைத்தாண்டிப் போய்விட்டார்.

இரண்டு நாள் கழித்து ஒரு போலீஸ்காரர் வீட்டுக்கு வந்து ஒரு போட்டோவைக் காட்டி, இது நீங்கள் ஓட்டும் வண்டிதானே என்று கேட்டிருக்கிறார். நண்பரும் ஆமாம் என்று சொல்லியிருக்கிறார். அந்தப் போலீஸ்காரர் நீங்கள் இரண்டு நாள் முன்பு இந்த இடத்தில் சிவப்பு லைட் எரிந்து கொண்டிருக்கும்போது சிக்னலைக்கடந்து போயிருக்கிறீர்கள். அதற்கு இந்த போட்டோ ஆதாரம். அபராதத்தை இங்கேயே கட்டுகிறீர்களா அல்லது கோர்ட்டில் கட்டுகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

நண்பர் அங்கிருந்த போலீஸ்காரர் போகச்சொன்னதால்தானே போனேன், இப்போது அபராதம் கட்டச்சொல்கிறீர்களே, இது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் போலீஸ்காரர், அதெல்லாம் நீங்கள் கோர்ட்டில் வந்து சொல்லிக்கொள்ளுங்கள், சார்ஜ் ஷீட் போடட்டுமா இல்லை அபராதம் கட்டிவிடுகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்.

நண்பர் பார்த்தார். கோர்ட், கேஸ், வக்கீல், அலைச்சல் இந்த தொந்திரவுகளெல்லாம் வேண்டாம், பணத்தோடு இந்த தொல்லை ஒழியட்டும் என்று அந்தப் போலீஸ்காரர் கேட்ட அபராதத்தைக் கொடுத்து அவரை அனுப்பி விட்டார்.

இந்தப் பிரச்சினையை வேறு எந்த விதமாகத் தீர்க்க முடியும்? எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. அந்த சிக்னலில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர், இந்த கேமரா போட்டோ பிடிக்கும் சமாசாரத்தைத் தெரிந்துகொண்டேதான் நண்பரைப் போகச்சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் கேமிரா வைத்த பிறகு எவ்வளவு கேஸ் பிடித்திருக்கிறீர்கள் என்ற கணக்கை ஆய்வுக் கூட்டங்களில் சொல்லவேண்டியிருக்கும். ஒரு கணிசமான கணக்கு காட்டாவிட்டால் போலீஸ்காரர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்ற கமென்ட் வரும். அதற்காக இப்படி செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இனி மேல் வண்டி ஓட்டும்போது இப்படிப்பட்ட நிலை வந்தால் போலீஸ்காரரை கண்டு கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் அப்போதும் அந்த போலீஸ்காரர் வேறு ஏதாவது நாம் செய்யாத கற்பனைக் குற்றத்திற்காக நம் மேல் கேஸ் புக் பண்ணலாம்!

வியாழன், 15 நவம்பர், 2012

தொழில் நுட்ப பதிவு - ரேஷன் கடை


ரேஷன் கடை நடத்துவது பற்றி நான் எழுதுவது எல்லோரும் அறிவீர்கள். இந்த அனுபவங்கள் அனைத்தும் 1976ல் ஏற்பட்டவை. அந்த அனுபவங்களுக்கும் இன்றைய காலகட்ட நடைமுறைகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று முழு மனதுடன் நம்புகிறேன். அதற்குப்பின் வந்த அரசுகள் மக்களின் நல்வாழ்வுக்காக  பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதனால் இந்த தில்லு முல்லுகள் இப்போது இல்லை என்று உண்மையாக நம்புகிறேன். படிப்பவர்களும் இந்த கால வித்தியாசத்தை நன்கு உணர்ந்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரேஷன் அரிசி தயாராகும் முறையை விவரமாகப் பார்த்தோம். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. தஞ்சாவூர் மாவட்டம் தவிர இதர மாவட்டங்களில் கொள்முதல் செய்யும் நெல் இந்த மாதிரி ஈரத்துடன் இருக்காது. அங்குள்ள சில "வெள்ளைச்சோள" மில்காரர்கள் அந்த நெல்லை எப்போதும்போல் வேகவைத்து, காயவைத்து, அரைத்து அனுப்புவார்கள். இந்த அரிசி நன்றாகவே இருக்கும். இந்த மாதிரி லோடு வந்தவுடன் சிவில் சப்ளை கோடவுனில் இருக்கும் கலாஸ்காரர்கள் அதை மோப்பம் பிடித்து அந்த மூட்டைகளை தனியாக அடுக்கிவைத்து விடுவார்கள்.

ரேஷன் அரிசியை சாப்பிடும் முறைபற்றி தோழர் வலிப்போக்கன் எழுதியுள்ளதை இந்தப் பதிவில் பார்க்கவும்.

தனியார் ரேஷன் கடைக்காரர்களுக்கு இந்த விஷயம் தெரியும். அவர்கள் கலாஸ்காரர்களுக்கு "சம்திங்க்" கொடுத்து இந்த மூட்டைகளில் நான்கைந்தை வாங்கிக்கொள்வார்கள். அவர்களின் ரேஷன் கடைக்குப்போகும் வழியில் ஏதாவது ஒரு ஓட்டல்காரரிடம் அக்ரீமென்ட் இருக்கும். இந்த மூட்டைகளை அங்கு இறக்கிவிட்டுப் போய்விடுவார்கள். அப்படியே ஓரிரு சர்க்கரை மூட்டைகளும் "தானாகவே" அங்கே இறங்கிக்கொள்ளும்.

இப்படி சரக்குகள் குறைந்தால் ரேஷன் கடை கணக்குகளை எப்படி சரி செய்வது? அந்தக் காலத்தில் நிறைய கணக்குப்புலிகள் இருந்தார்கள். அவர்களுக்கு ஆடிட்டர்கள் என்று பெயர். ஆனைக்கு அல்வா வாங்கின கணக்கையும் கூட சரி செய்யக்கூடிய சாமர்த்தியசாலிகள் அந்தக் காலத்தில் உண்டு. இதற்கு மேல் இந்த விஷயத்தின் உள் வயணத்தைச் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஏனென்றால் நானும் அப்படி செய்திருக்கிறேன்.

ரேஷன் கடைகளில் எடை குறைவாகப் போடுவது என்பது காலம் காலமாக வந்த ஒரு நடைமுறை. ஒரு 200 கிராம் எடைக்கல்லை சாமான் போடும் தட்டின் கீழ் புளியை வைத்து ஒட்டி விட்டால் அது பாட்டுக்கு தன் வேலையை செய்து கொண்டிருக்கும். ஒரு கிலோ போடும்போது 200 கிராம் குறைந்தால் அப்பட்டமாகத் தெரிந்து விடும். அதனால் ஒரு கிலோ போடும்போது தாராளமாகப்போடுவது போல் அதிகமாகப்போடுவார்கள். நாலு கிலோ போடும்போது 200 கிராம் குறைந்தால் தெரியாது. யாராவது அதிகாரிகள் வந்தால் அதை நைசாக எடுத்து விடலாம். இந்த விஷயத்தில் ஒரு தார்மீக நியாயமும் இருக்கிறது.

சர்க்கரை மூட்டை ஒன்று 100 கிலோ. இந்த எடை சாக்கையும் சேர்த்து உண்டான எடை. சாக்கு ஒன்றரை கிலோ. ஆக சர்க்கரை 98.5 கிலோதான் இருக்கும். இதை எப்படி நூறு கிலோவாக பில் போடமுடியும்? தவிர இந்த சில்லரை வியாபாரத்தின் இன்னொரு நுணுக்கம்- நூறு கிலோ சரக்கை ஒவ்வொரு கிலோவாக நிறுத்து விற்றால் 97 அல்லது 98 கிலோதான் வரும். அதற்குக் காரணம்- ஒரு கிலோவை தங்கம் எடை போடுகிறமாதிரி அவ்வளவு துல்லியமாகப் போட முடியாது. அப்படிப் போட்டால் வாங்குகிறவர்கள் சண்டைக்கு வருவார்கள். ஒரு பத்துப் பதினைந்து கிராம் கூடப் போய்விடும். இப்படி நூறு கிலோவிற்கு ஒன்றிரண்டு கிலோ குறைபாடு வந்துவிடும்.

ஆக மொத்தம் 100 கிலோ சர்க்கரை மூட்டையைப் பிரித்தால் 97 கிலோதான் விற்க முடியும். இதை சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. நூறு கிலோவிற்கும் பில் போடவேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? மறுபடியும் கணக்குப்புலிகளின் கிருபைதான்.

மண்ணெண்ணை விற்பனை இன்னும் மோசம். கொஞ்சம் ஏமாந்தால் எண்ணை வழிந்துவிடும். அந்த எண்ணையை ஒன்றும் செய்யமுடியாது. தவிர எண்ணை ஆவியாகிக்கொண்டே இருக்கும். எவ்வளவு ஜாக்கிரதையாக அளந்து விற்பனை செய்தாலும் 200 லிட்டர் பேரலுக்கு 5 லிட்டர் எண்ணை கணக்கில் வராது. இந்த 5 லிட்டருக்கு யார் பணம் கட்டுவது? மறுபடியும் புலிகள்தான்.

இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். மேல் விபரங்கள் தேவைப்படின் நேரில் வரவும். 

புதன், 14 நவம்பர், 2012

நான் நடத்திய ரேஷன் கடை - பாகம் 2


//இங்குதான் ரேஷன் கடை தில்லு முல்லுகள் ஆரம்பிக்கின்றன. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போமா. //

என்னுடைய போன பதிவில் இப்படி முடித்திருந்தேன். இந்தப் பதிவு எழுது முன் பல சந்தேகங்கள் என்னுடைய மனதில் தோன்றின. அதாவது உண்மை எப்போதுமே கசக்கும். பலருக்கு சங்கடங்களை உண்டு பண்ணும். அதில் ஒரு சிலருக்கு போலீஸ் கமிஷனரைத் தெரிந்து இருக்கலாம்.  இந்தப் பதிவைப் பற்றி அவரிடம் சொன்னால், என் கைகளுக்கு காப்பு வருவது நிச்சயம். 

இது வரை நான் கையில் கடிகாரத்தைத் தவிர வேறு எதுவும் போட்டதில்லை.  கடைசி காலத்தில் இந்த பரிசோதனைகளெல்லாம் வேண்டுமா என்று இரவு முழுவதும் சிந்தித்தேன். ஆகவே நான் சொன்ன பதிவுக்குப் பதிலாக ஒரு கதை சொல்லலாம் என்று முடிவு செய்து இந்தப் பதிவை எழுதுகின்றேன்.

இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் கரிகால் சோழன் காலத்தில் நடந்ததாக கற்பனை செய்திருக்கிறேன். அவை முற்றிலும் கற்பனையே. 

 இதில் கூறப்பட்ட செய்திகள் மாதிரி இந்தக்காலத்திலும் நடக்கலாம். சரித்திரம் திரும்பவும் வரும் என்று ஒரு பிரபல ஆங்கிலப் பழமொழி உண்டு. அப்படி ஏதாவது சம்பவங்களில் ஒற்றுமை தெரிந்தால் அது படிப்பவர்களின் கண் கோளாறுதானே தவிர அதில் அணுவளவும் உண்மை இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கரிகால் சோழன் பெரிய படை வைத்திருந்தான். அதில் காலாட்படைதான் மிகவும் பெரிது. அவர்களுக்கு சாப்பாட்டுக்காக வாரம் ஒரு முறை அரிசி கொடுப்பான். இப்படி அரிசி கொடுப்பதற்காக ஒரு மந்திரியும் அவருக்கு உதவியாக பல சிப்பந்திகளும் இருந்தார்கள். அரிசியை மொத்தமாக வாங்கி ஒரு கிட்டங்கியில் சேமித்து வைப்பார்கள். அங்கிருந்து படைவீரர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு அரிசி வாங்கிக்கொள்வார்கள்.

இந்த அரிசி தயார் செய்வதற்கு ஒரு பெரிய வியாபாரி இருந்தான். அவன் நெல் கொள்முதல் செய்து அதை வேகவைத்து அரைத்து அரிசியாக்கி இந்த கிட்ங்கிகளுக்கு அனுப்பிவிடுவான். அரிசியை நன்றாக காயவிடமாட்டான். ஈரத்துடனேயே அனுப்பிவிடுவான். கிட்டங்கியில் படைவீரர்களுக்கு ஒரு வருடத்திற்கு வேண்டிய அரிசியை இருப்பு வைத்திருப்பார்கள். புதிதாக வரும் அரிசி மூட்டைகளையும் இதனுடன் வரிசையாக அடுக்கி வைத்து விடுவார்க்ள.

வீரர்களுக்கு எப்போதும் பழைய அரிசியையே தருவார்கள். ஏனென்றால் அந்த அரிசியை அதற்கு மேல் வைத்திருந்தால் தாங்காது. புதிதாக வந்த அரிசியை வீரர்களுக்குக் கொடுக்க ஒரு வருடம் ஆகும். இதுதான் நடைமுறை.

அதில் ஒரு சில வீரர்கள் மட்டும் சாப்பிடும் சாப்பாடு வித்தியாசமாக இருந்தது. அது எப்படி என்று மற்ற வீரர்கள் ஆராய்ந்தார்கள். கிட்டங்கியிலேயே சில அரிசி மூட்டைகளில் நல்ல தரமான அரிசி இருக்கும். அந்த வியாபாரி கவனிக்காதபோது சில நல்ல அரிசி மூட்டைகளும் இவ்வாறு இந்த கிட்டங்கிகளுக்கு வய்துவிடும். கிட்டங்கி சிப்பந்திகளுக்கு இந்த விவரம் தெரியும். அவர்கள் தங்களுக்கு வேண்டிய வீரர்களுக்கு தகுந்த கையூட்டு வாங்கிக்கொண்டு அந்த நல்ல அரிசியைக் கொடுப்பார்கள். இது பரம ரகசியமாக நடக்கும்.

ஆனால் யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கையூட்டு அனைவருக்கும் பங்கிடுதலால் ஒருவரும் வாயைத்திறக்க மாட்டார்கள்.

அவ்வளவுதான் கதை. எல்லோரும் தூங்கப்போங்க.

செவ்வாய், 13 நவம்பர், 2012

ரேஷன் அரிசி தயாராகும் விதம்.


எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னுதான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலர் நெல் காய்க்கும்  "மரத்தை" பார்த்தே இருக்கமாட்டார்கள்.

அப்படி ரேஷன் அரிசிக்கு தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்துகொள்கிறது. குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லை சாக்கில் பிடித்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக்கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டுவந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய்விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்திசெய்து கொடுக்கவேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும்போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேகவைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படி தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊறவைத்த அரிசி மாதிரி ஈரமாகத்தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டி போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டி பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போதுதான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும். அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும்போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும்போது "கடுக்" என்று சத்தம் வரவேண்டும். அப்போதுதான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆறவைத்து பிறகுதான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊறவைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டி போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை.  

திங்கள், 12 நவம்பர், 2012

நான் நடத்திய ரேஷன் கடை - பாகம் 1


சமீபத்தில் வந்த ஜெயதேவ் அவர்களின்

 "பூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்." என்ற  பதிவில்  அவர் எழுதியிருந்த ஒரு வாசகம்.

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது [கம்பியூட்டர் எல்லாம் பார்க்கிறீங்க, நீங்க எங்கே வாங்கியிருக்கப் போறீங்க..........!!] 

இதற்கு என்னுடைய பின்னூட்டம்
என்னங்க இப்படிச் சொல்லிப்புட்டீங்க? நான் ரேஷன் கடையே நடத்தீருக்கேன். அது பற்றி ஒரு தனிப் பதிவு போடுகிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வீராப்பா பின்னூட்டம் போட்டுட்டேன். பதிவு எழுதித்தானே ஆகணும்.


என்னுடைய உத்தியோகத்திற்கும் ரேஷன் கடைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சம்பந்தம் உண்டாகி விட்டது. எப்படியென்றால் எனக்கு 1976 ல் மதுரை விவசாயக் கல்லூரிக்கு உத்தியோக உயர்வுடன் மாற்றல் வந்தது. மிகுந்த மனக் கஷ்டத்துடன் போய் வேலையில் சேர்ந்தேன். மனக்கஷ்டத்திற்கு காரணம் சில குடும்ப சூழ்நிலைகள். பிற்பாடு அவைகள் சரியாகிவிட்டன. மதுரையில் வேலை செய்த காலம் பொற்காலம் என்று நினைக்குமளவிற்கு சூழ்நிலைகள் மாறிவிட்டன.

மதுரை விவசாயக்கல்லூரி மதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் யானைமலை அடிவாரத்தில் இருக்கிறது.இங்கு பணி புரியும் அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உண்டு. தவிர சுமார் ஆயிரம் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டிய அன்றாடத்தேவைக்கான பொருள்களை வாங்க வேண்டுமென்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒத்தக்கடை என்னும் கிராமத்திற்குத்தான் போகவேண்டும்.

இவர்களுக்கு உதவுவதற்காக கல்லூரி வளாகத்திலேயே ஒரு கூட்டுறவு பண்டகசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சிறிய பொட்டிக்கடை மாதிரிதான் இருக்கும். இங்கு சோப்பு, பேஸ்ட், பிரஷ், பேனா, பென்சில், பலசரக்கு சாமான்கள் இத்தியாதி பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். இங்கேயே ரேஷன் பொருட்களும் விற்பதற்கு அனுமதி வாங்கி, அந்த விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. ஆகவே அந்த ஸ்டோர் ஒரு பலசரக்கு மற்றும் ரேஷன் கடையாக பயன்பட்டுக் கொண்டிருந்தது. இதை நடத்துபவர் அங்கு குடியிருப்பில் வசிக்கும் ஏதாவது ஒரு பேராசிரியர். அவருக்கு அந்த ஸ்டோருக்கு செக்ரடரி என்று பதவிப்பெயர். ஊதியம் இல்லா கௌரவப் பதவி.

நான் அங்கு போய் வேலைக்கு சேருவதற்கு முன்பே,, அங்குள்ள கல்லூரித் தலைவர் எனக்கு அந்த வேலையைக் கொடுப்பதென்று முடிவு செய்திருக்கிறார். இந்த விஷயம் பிற்பாடுதான் எனக்குத் தெரிந்தது. அவர் எனக்கு ஆசிரியரும் கூட. அதனால் அவருடைய விருப்பத்தை என்னால் மறுக்கமுடியவில்லை. அங்கு போய் சில நாட்களிலேயே இந்தப் பதவி எனக்கு கொடுக்கப்பட்டது.

மாலை 6 மணி முதல் 8 மணி வரை கடையின் விற்பனை நேரம். ஆபீசிலிருந்து வீட்டுக்குப் போய் காப்பி குடித்து விட்டு கடைக்குப் போவேன் எனக்கு உதவிக்காக இன்னொரு பேராசிரியரையும் கல்லூரித்தலைவர் போட்டிருந்தார். எடுபிடி வேலைக்காக இரண்டு உதவியாளர்களை நாங்கள் நியமித்துக்கொண்டோம். எல்லாம் கல்லூரியில் வேலை செய்யும் நபர்கள்தான். 

ஸ்டோர் பதவி எடுத்துக்கொண்டவுடன் வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சரக்கு கொள்முதல் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தில்தான் வாங்கவேண்டும். அதுதான் சிறு கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு உண்டான சட்டம். அங்கு இல்லாத பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணை இவைகளை சிவில் சப்ளை டிபார்ட்மென்டிலிருந்து வாங்கிக்கொள்ளவேண்டும்.

இதில் இந்த ரேஷன் வியாபார நுணுக்கங்களை மட்டும் பார்க்கலாம். ரேஷன் அரிசி என்பது ஒரு தனி ரகம். அதை எவ்வளவு பேர் சாப்பிட்டுப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அதை சாப்பிடுவதற்கு தனி தைரியம் வேண்டும். உடல் உழைப்புத் தொழிலாளிகள் இந்த சாப்பாட்டைத்தான் சாப்பிடுவார்கள்.  அதுதான் அவர்களுக்குக் கட்டுப்படியாகும்.

இந்த அரிசி ஏன் இப்படிப்பட்ட மகத்துவம் பெற்றது என்பது ஒரு தனிக்கதை. அதையும் எழுத ஆசைதான். ஆனால் தேசத்துரோகி என்று பிடித்து உள்ளே போட்டு விடுவார்களோ என்ற பயத்தினால் எழுதவில்லை.

இந்த ரேஷன் பொருட்களை வாங்க முதலில் சிவில் சப்ளை ஆபீசில் பணம் கட்டிவிட்டு கோடவுனுக்குப் போகவேண்டும். பணம் கட்டின ரசீதைக் காட்டினால் அங்குள்ள சிப்பந்திகள் அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவைகளை நாம் கொண்டு போயிருக்கும் வாகனத்தில் ஏற்றி விடுவார்கள். ஏற்றுக்கூலி தனியாகக் கொடுத்து விடவேண்டும். இதை இந்தப் பொருள்களின் விற்பனை விலையில் சேர்த்தக்கூடாது. சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் நிர்ணயித்துள்ள விலையில்தான் ரேஷன் பொருட்களை விற்கவேண்டும்.

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் தங்கள் மற்ற வியாபாரத்திலிருந்து வரும் லாபத்திலிருந்துதான் இந்தச் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டும்.  கூட்டுறவு விற்பனை நிலையங்கள் இந்தச் செலவை இவ்வாறு சரிக்கட்ட முடியும். ஆனால் தனியார் நடத்தும் ரேஷன் கடைகளில் எப்படி இந்த செலவை சமாளிக்க முடியும்?

இங்குதான் ரேஷன் கடை தில்லு முல்லுகள் ஆரம்பிக்கின்றன. எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போமா. 

வியாழன், 8 நவம்பர், 2012

நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது?


தமிழ் நாட்டில் நாம் சாப்பிடுவது பெரும்பாலும் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் காய்கறிகள் கலந்த உணவுகள்தான். இவைகளைப் பலவிதங்களில் சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நம் இரைப்பையில் ஜீரணமாகி நம் உடலில் எவ்வாறு சேர்கின்றன, அவைகளின் வேலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வது சில தவறான கருத்துகளை மாற்ற உதவும்.

அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் காய்கறிகள்

இவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அரிசி: இதில் தானியவகை உணவுகள் அனைத்தும் அடங்கும். கோதுமை, அரிசி, ராகி, சோளம், கம்பு, மற்றும் இவைகளிலிருந்து தயார் செய்யப்படும் அனைத்து உணவு வகைகளையும் இந்த குரூப்பில் சேர்த்துக் கொள்ளவும்

இந்த வகை உணவுகளில் உள்ள பொருள் ஸ்டார்ச்சு என்று சொல்லப்படும் கார்போஹைட்ரேட். கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்ற மூன்று கனிமங்கள்தான் இவைகளில் இருப்பதால் “கார்போஹைட்ரேட்ஸ்” என்ற பெயர் வந்தது. இந்த வகை உணவுகள்தான் நாம் உயிர் வாழவும், வேலை செய்யவும் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.

இந்த ஸ்டார்ச்சு சத்தானது மனிதர்களில் இரைப்பையில் ஜீரணமாகி குளுகோஸ் ஆக மாறுகிறது. இந்த குளுகோஸ் குடல்வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக குளுகோஸ் உடலின் எல்லா பாகங்களுக்கும் போகிறது. இந்த குளுகோஸ் உடலிலுள்ள செல்களின் உள்ளே சென்று ரசாயன மாற்றங்கள் அடைந்து சக்தியாக மாறுகிறது. உடல் அவயவங்கள் ஓய்வில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த இயக்கத்திற்கு சக்தி அவசியம். அந்த சக்தி இவ்வாறுதான் கிடைக்கிறது.

இது தவிர, மனிதர்கள் வேலை செய்யும்போது அந்த உழைப்பிற்கும் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியும் இவ்வாறு செல்களில் குளுகோஸ் மாற்றம் அடைவதால்தான் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவு முழுவதும் ஜீரணமாகி இவ்வாறு சக்தியாக மாறி செலவான பிறகு உடலுக்கு சோர்வு உண்டாகிறது. அப்போது உடலுக்கு சற்று ஓய்வும் உணவும் தேவைப்படுகின்றது. உணவு உண்டவுடன் மறுபடியும் இந்த சுழற்சி மூலம் சக்தி கிடைக்கிறது.

இதுதான் அரிசி, மற்றும் அதுபோன்ற தானிய உணவுகளின் பயன். இந்த தானியங்களில் சிறிதளவு புரதச்சத்தும், எண்ணைச் சத்தும் இருக்கும். ஆனால் அவை உடலின் தேவைக்குப் போதாது. அந்தத் தேவையை ஈடுகட்ட பருப்பு வகை உணவுகளும் எண்ணை வகை உணவுகளும் தேவை.

பருப்பு: எல்லாவிதமான பருப்புகளும் இதில் அடங்கும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பீன்ஸ் கொட்டைகள், கொள்ளு, பாசிப்பயறு முதலான பருப்புகளை நாம் சாப்பிடுகிறோம். இந்த பருப்புகளில் 
உள்ள முக்கிய பொருள் புரதச்சத்து ஆகும். புரதத்தில் நைட்ரஜன் தனிமம் ஒன்று 
அதிகப்படியாக இருக்கும். இந்த நைட்ரஜன் எல்லா உயிர்களுக்கும் 
இன்றியமையாத ஒரு தனிமம் (Element). அனைத்து ஜீவராசிகளின் செல்களின் கருக்களும் புரொட்டீனால் (புரதம்) ஆனவை. புரொட்டீன் இல்லையென்றால் உயிர் இல்லை. அந்த அளவிற்கு இது முக்கியமானது. எல்லா பருப்புகளிலும் சுமார் 25 சதம் புரொட்டீன் இருக்கும்.

ஜீவராசிகளின் செல்களுக்கு ஒரு குணம் என்னவென்றால், அவை 14 முதல் 24 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். மனிதனும் இந்த தத்துவத்திற்கு விலக்கல்ல. ஆகவே நாம் ஒவ்வொருவரும் 24 நாட்களுக்கு ஒரு முறை புது அவதாரம் எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி செல்கள் புதுப்பித்துக்கொள்ள புரொட்டீன் அவசியம் தேவைப்படுகின்றது. செல்களில் உள்ள பழைய புரொட்டீன் அழிக்கப்பட்டு யூரியாவாக மாறி சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.

இப்படி புது செல்கள் உருவாகத் தேவைப்படும் புரொட்டீன்கள், பருப்பு வகை உணவுகளிலிருந்து கிடைக்கிறது. உடம்பின் ஒரு கிலோ எடைக்கு அரை கிராம் புரொட்டீன் வேண்டும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அப்படியானால் 60 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 30 கிராம் புரொட்டீன் வேண்டும். பருப்பு மற்றும் மற்ற உணவுகளில் உள்ள புரொட்டீன் 40 முதல் 50 சதம்தான் உடலில் சேரும். ஆகவே இவ்வொரு மனிதனும் ஏறக்குறைய 60 கிராம் புரொட்டீன் இருக்கும் உணவுகளை ஒவ்வொரு நாளும் சாப்பிடவேண்டும்.

எண்ணை வகைகள்:   எண்ணை என்றாலே கொழுப்பு என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். அது ஓரளவிற்குத்தான் சரி. அதிக கொழுப்பு சாப்பிடுபவர்கள் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேரும் என்பது உண்மைதான். ஆனால் தினமும் உணவில் கொழுப்பு சத்து அளவாகச் சேரவேண்டும்.

இது இரண்டு விதத்தில் உடலுக்கு உதவுகிறது. ஒன்று நம் உடலிலுள்ள கொழுப்பை புதுப்பிக்கத் தேவைப்படுகிறது. இரண்டாவது உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கிறது.

மாமிச உணவுகளில் (மீன் தவிர) பொதுவாக கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. அசைவம் அதிகமாக சாப்பிடுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தாவர எண்ணை வகைகளில் எல்லா வகை எண்ணைகளையும் நம் முன்னோர்கள் உபயாகித்து வந்திருக்கிறார்கள். அவைகளை நாமும் உபயோகிக்கலாம். தவறு எதுவுமில்லை. ஆனால் அளவாக உபயோகிக்கவேண்டும். விளம்பரங்களில் பயங்காட்டுவது போல பயப்பட வேண்டியது அவசியம் இல்லை.

காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள்.
இவைகள் மனித உடலுக்கு வேண்டிய தாதுக்களையும், நார்ச்சத்தையும் கொடுக்கின்றன. தாதுக்கள் மனித உடம்பிற்கு வேண்டிய வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகியவைகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமாகிறது. நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும்.

எந்த வகை உணவையும் தனியாக சாப்பிட்டு வந்தால் நாளடைவில் உடல் க்ஷீணிக்கும். ஆகவே எல்லா வகை உணவுகளையும் கலந்து சரியான விகிதத்தில் சாப்பிட்டு வரவேண்டும். இதைத் தான் சரி விகித உணவு என்று சொல்கிறார்கள். மனிதன் ஆரோக்கியமான வாழ்வு வாழ சரி விகித உணவு அவசியம். 

புதன், 7 நவம்பர், 2012

TNAU இன்னொரு படம் - டெஸ்ட்டுக்காக

மக்கள் மன்னிக்கவும். இது இன்னொரு தளத்தில் உண்டாக்கியது. என்னுடைய நினைவுக்காக பதிந்திருக்கிறேன். தளத்தின் பெயர்: http://www.dermandar.com/


வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியைச் சொடுக்கினால் போட்டோ முழு ஸ்கிரீனிலும் தெரியும்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

தனி மனித சுதந்திரம்




 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


*