வியாழன், 28 ஜூன், 2012

நாட்டிய அரங்கேற்றங்கள்.

சமீபத்தில் இரண்டு நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தேன். நாட்டியம் ஒரு நுண்கலை. நுண்கலைகளுக்கென்றே சிலர் இருக்கிறார்கள். மற்றும் சிலர் இதில் ஆர்வம் மிகுந்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சங்கீதம்  (அரங்கேற்றம்) மாதிரி இது சாதாரண விஷயமில்லை.

மிகுந்த வசதி படைத்தவர்களுக்கே சாத்தியமாகக்கூடிய ஒரு விஷயம். ஏறக்குறைய ஒரு ஐந்து வருடம் ஒரு நல்ல குருவிடம் பயிற்சி பெறவேண்டும். அந்தக் குருவிற்கு கலை ஞானத்துடன் நல்ல லோகாதய அனுபவமும் வேண்டும். இல்லாவிட்டால் கற்றுக்கொண்ட கலை குடத்தினுள் விளக்காகப் போய்விடும்.

ஓரளவு நாட்டியம் கற்றுத் தேர்ந்தவுடன் அரங்கேற்றம் செய்யவேண்டும். அரங்கேற்றம் நடத்துவது என்பது ஒரு கல்யாணம் நடத்துவது போலத்தான். அந்த அளவு சிரமங்களும் செலவுகளும் பிடிக்கும். ஒரு சில லட்சங்கள் ஆகும்.


முதலில் ஒரு குளிரூட்ட வசதி உள்ள ஹால் வேண்டும். ஒளி, ஒலிக்கருவிகள், போட்டோ, விடியோ எடுக்க ஸ்பெஷலிஸ்ட்டுகள், அரங்கு அலங்காரம், விளம்பரம், இன்விடேஷன், நடன மணிகளைப் பற்றி ஒரு விளக்க அட்டை, நடன மணிக்கு உடைகள், அலங்காரம் செய்பவர், குரு, பக்க வாத்தியம், அவர்களுக்கு சம்பாவனை, தலைமை தாங்க ஒரு பெரிய மனிதர், அரங்கேற்றம் முடிந்த பிறகு விருந்து, இப்படி ஏகப்பட்ட வேலைகள்.

தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று வருபவர்களை வரவேற்று அரங்கேற்றத்தை நடத்தி முடித்தால் பெரிய விடுதலையாக இருக்கும். ஆனாலும் அந்தப் பெண்ணின் கல்யாணம் முடியும் வரையிலும் இதைப்பற்றியே பெருமை பேசிக்கொண்டிருக்கலாம்.

அரங்கேற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் அதற்கப்புறம் நிகழ்ச்சிகள் செய்வது அபூர்வம். அதை முழுநேர தொழிலாக ஏற்றுக்கொள்பவர்கள் பெரும்பாலும் இல்லை.

ஆனாலும் இதற்காக அந்தப்பெண்ணும் அவர்கள் குடும்பத்தாரும் படும் பாடு இருக்கிறதே அது ஒரு சரித்திரக் காவியம்!



புதன், 27 ஜூன், 2012

இந்திப் பாட்டு போடாதே

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முதல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் 1968 ல் நடந்தது. நான் அப்போது கோவை விவசாயக் கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக இருந்தேன். மாணவர்களின் கேன்டீன் என் பொறுப்பில் இருந்தது. கேன்டீனில் பாட்டுப் போடுவதற்கு உண்டான வசதிகள் இருந்தன. அக்காலத்தில் சினிமாப் பாட்டுகள் இசைத்தட்டு வடிவில்தான் இருந்தன. மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த இசைத்தட்டுகளை வாங்கி வந்து போடுவார்கள். (பொது செலவுதான்). அதில் பல இந்தி சினிமா பாட்டுகளும் உண்டு.

1968 இந்திப் போராட்டத்தில் எங்கள் கல்லூரி மாணவர் தலைவன் ஒரு முக்கியப் பங்கு வகித்தான். அதாவது கோவையைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களுக்கு அவர்தான் போராட்ட இணைப்பாளர். அது என்ன என்றால் மேலிருந்து இவருக்கு ஆர்டர்கள் வரும். அதை இவர் மற்ற கல்லூரிகளுக்கு அனுப்பவேண்டும். இந்தப் பொறுப்பு வகித்ததினால் அவருக்கு ஒரு மவுசு ஏற்பட்டுவிட்டது. தான் ஒரு குறுநில மன்னர் என்ற நினைப்பு ஏற்பட்டுவிட்டது.

ஒரு நாள் அவர் என்னிடம் வந்தார். சார், கேன்டீனில் இந்திப்பாட்டு போடுகிறார்கள். அது கூடாது என்றார். நானும் சூழ்நிலையை அனுசரித்து கேன்டீன் மேனேஜரிடம் இனிமேல் இந்திப்பாட்டு போடாதீர்கள் என்று சொல்லிவிட்டேன்.

இந்தி எதிர்ப்பு களேபரங்கள் எல்லாம் ஒரு மாதிரி முடிந்து பரீட்சைகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தன. அந்த சமயத்தில் கேன்டீன் மேனேஜர் என்னிடம் வந்து, "சார், பசங்க (மாணவர்களை வாத்தியார்கள் இப்டித்தான் குறிப்பிடுவார்கள்) எல்லாம் இந்திப் பாட்டு வேணும்னு கேட்கறாங்க, சார், என்ன செய்யட்டும்?" என்றார். நான் பசங்க கேட்டாப் போடுங்க என்றேன். இந்திப்பாட்டு அமர்க்களமாக பாடிக்கொண்டிருந்தது.

நமது கதாநாயக்கருக்குப் பொறுக்குமா? என் ரூமுக்கு வந்து, என்ன சார், இந்திப்பாட்டு போடக்கூடாதுன்னு சொல்லியிருந்தோமே, இப்போது போடுகிறீர்களே" என்றார். ஆமாம், மாணவர்கள் கேட்கிறார்கள் என்று கேன்டீன் மேனேஜர் சொன்னார். அதனால்தான் போடுங்கள் என்று சொன்னேன், என்று பதில் சொன்னேன்.

அதற்கு அவர், மாணவர்கள் கேட்டால்கூட இந்திப் பாட்டுக்களைப் போடக்கூடாது சார் என்றார்.

நான் சொன்னேன். அப்படியானால் எல்லா மாணவர்களிடமும் இந்திப்பாட்டு போடக்கூடாது என்று கையெழுத்து வாங்கி வா. பாதி பேருக்கு மேல் அப்படி கையெழுத்து போட்டால் கேன்டீனில் இருக்கும் இந்தி பாட்டு ரெக்கார்டுகளையெல்லாம் உடைத்துப் போடச் சொல்லி விடுகிறேன், என்றேன்.

அதற்கு அவர் அது எப்படி முடியும் சார் என்றார். அப்போது நான் ஒன்றும் செய்வதற்கில்லை என்றேன். அவர் கொஞ்சம் குரலை உயர்த்தி எப்படியும் நீங்கள் இந்திப் பாட்டு போடக்கூடாது என்றார்.

அப்போது எனக்கு வயது 35. இளமை முறுக்கு. என் மூளையில் திடீரென்று ஒரு பொறி தட்டியது. அதற்கு முந்தின தினம் அவருடைய பரீட்சைகள் அனைத்தும் முடிந்து விட்டன. அவர் படிப்பது இறுதி ஆண்டு.

நான் சொன்னேன். இத பாரு மிஸ்டர். நேற்றோடு உன் பரீட்சைகள் எல்லாம் முடிந்து விட்டன. இன்று நீ இந்தக் கல்லூரியின் மாணவன் இல்லை. "கெட் அவுட் ஆப் மை ரூம்" என்று ஓங்கிய குரலில் சொன்னேன்.

அவர் கல்லூரித் தலைவரிடம் போய் முறையிட்டிருக்கிறார். அவர், வார்டன் சொன்னது சரிதான், உன்னுடைய மூட்டை முடிச்செல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னுடைய ஊருக்குப் போய்ச்சேர் என்று சொல்லிவிட்டார்.

அதற்கப்புறம் பல ஆண்டுகள் கழித்து அவரைப் பார்த்தேன். ஒரு தனியார் எருக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பழைய வீராப்பு எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை.


போட்டோக்கள் நன்றி கூகுள்

திங்கள், 25 ஜூன், 2012

ஆபீசர்ஸ் கிளப் ஆண்டுவிழா

கோவை விவசாயக்கல்லூரி வளாகத்தில் வெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்த ஆபீசர்ஸ் கிளப் ஒன்று இருந்தது. சமீபத்தில் அதை மூடி விட்டதாகக் கேள்விப்பட்டு வருந்தினேன். இங்கிலாந்தில் இந்த மாதிரி கிளப்புகள் பிரபலம். ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி கிளப் வைத்திருப்பார்கள். மெசானிக் கிளப் என்று நம் ஊரில் இப்போது இயங்கும் (முகமூடிக் கொள்ளையர்கள் மாதிரி நடு ராத்திரியில் கூடுவார்கள்) அங்கிருந்து இறக்குமதியான சரக்குதான்.

எங்கள் ஆபீசர்ஸ் கிளப்புக்கு பெரிய பாரம்பரியம் உண்டு. அதில் ஒன்று ஆண்டு விழா கொண்டாடுவது. ஆண்டு விழாவிற்கென்று ஒரு மாத்திற்கு முன்பிருந்தே விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கேரம்போர்டு, செஸ் இத்தியாதிகள். ஆண்டு விழாவில் இந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்படும். இது ஒரு பெரிய செலவாகும். அடுத்ததாக ஒரு டிராமா போடுவார்கள். அதற்கும் செலவு பிடிக்கும். அப்புறம் ஒரு டின்னர்.

ஆண்டு விழாவிற்கென்று ஒரு கமிட்டி போடப்படும். மொத்தம் இவ்வளவு ரூபாய் பட்ஜெட் என்று ஒரு தொகை ஒதுக்கப்படும். அதற்குள் இந்த செலவுகளையெல்லாம் அடக்கிக்கொள்ள வேண்டும். கமிட்டி மீட்டிங்க் நடக்கும்போது இந்தப் பட்ஜெட்டைப் பிரித்துக்கொள்வதில் அடிதடி சண்டைகூட நடக்கும். பொதுவாக இந்த டிராமாக்கார ர்கள்தான் அதிகப் பணம் வேண்டுமென்று சண்டை அதிகமாகப் போடுவார்கள்.

இவர்களைக் கண்டால் மற்றவர்களுக்கெல்லாம் எரிச்சல். ஏனென்றால் ரிகர்சல் போடுகிறோம் என்று அடிக்கடி கிளப் செலவில் டிபன் காப்பி சாப்பிடுவார்கள். அந்த வருடம் இவர்களை எப்படியும் மட்டம் தட்டுவது என்று எல்லோரும் ஏகமனதாக முடிவு செய்திருந்தோம்.

முதல் மீட்டிங்கில் விவாதம் தொடங்கியது. ஒவ்வொரு குழுவிற்கும் தொகை பிரித்து வழங்கப்பட்டது. டிராமாக்காரர்களுக்கு வேண்டுமென்றே குறைவான தொகை கொடுக்கப்பட்டது. ஏகப்பட்ட சத்தம். அவர்களுக்கு மட்டும் எதற்கு அவ்வளவு, எங்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறீர்கள், இப்படி தலைக்குத்தலை குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தார்கள்.

இரு குறிப்பிட்ட ஐட்டத்திற்கு இவ்வளவு தொகை அதிகம், அதை நீக்கி விடலாம் என்று டிராமாக்காரர்கள் ஒரேயடியாய்க் குதித்தார்கள். எல்லோருக்கும் ஒரே எரிச்சல். எப்படியாவது மீட்டிங்கை முடித்துவிடவேண்டும் என்று எல்லோரும் ஆசைப்பட்டார்கள்.

அப்பாது நான் சொன்னேன். அந்த ஒரு ஐட்டத்தை நீக்கினால் இவ்வளவு பணம் மிச்சமாகிறது என்று சொன்னீர்களல்லவா? இந்த ஆண்டு விழாவையே நிறுத்தி விட்டால் எல்லாப் பணமும் மிச்சமாகுமல்லவா? என்று ஒரு போடு போட்டேன். எல்லோரும் இருந்த மன நிலையில் இந்த ஐடியாவை எல்லோரும் ஆமோதிக்க அந்த வருட ஆண்டு விழா வெற்றிகரமாக கேன்சல் செய்யப்பட்டது.

சனி, 23 ஜூன், 2012

ஆழ்குழாய் கிணற்றுக்குள் 4 வயது குழந்தை


டில்லிக்கு அருகில் ஒரு கிராமத்தில் நான்கு வயது குழந்தை, வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து, இரண்டு நாட்களாய் வெளியில் எடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நினைத்தால் மனது பதறுகிறது. சோகத்திலும் மகா சோகம். ஒரு குழந்தையை உயிருடன் பலி கொடுப்பதென்பது மகாக் கொடுமை.

இந்த வேதனை கோபமாக உருவெடுக்கிறது. வீட்டிற்குப் பக்கத்தில் இத்தகைய ஆபத்தை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

இரண்டாவது அந்த நாலு வயது குழந்தை ஆழ்குழாயில் இரவு 11 மணிக்கு விழுந்தது என்கிறார்கள். அப்போது அந்தக் குழந்தையின் அம்மா என்ன செய்து கொண்டிருந்தாள்? ஒரு 4 வயது குழந்தையை 11 மணிக்குள் தூங்க வைக்க மாட்டார்களா? பெற்றுப்போட்டு விட்டு எக்கேடோ கெட்டுப்போ என்று தண்ணி தெளித்து விட்டுவிட்டார்களா?

இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?

வெள்ளி, 22 ஜூன், 2012

நான் வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள்

அன்றாட குடும்ப வாழ்க்கையில் வீட்டில் பலவிதமான சில்லறை ரிப்பேர் வேலைகள் வரும். ஒவ்வொன்றிற்கும் அந்தந்த ஆளைத் தேடிப்போய் அந்த ரிப்பேரைச் செய்து முடிப்பதென்றால் மிகுந்த பொருட்செலவும் நேர விரயமும் ஆகும். இந்த சில்லறை வேலைகளைச் செய்வது ஒன்றும் பெரிய இந்திரஜால வேலை இல்லை. இருந்தாலும் நிறையப் பேர் இந்த வேலைகளுக்கு ஆட்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். அந்த வேலைகளும் நிரந்தரமாக பெண்டிங்க் ஆகவே இருக்கும்.

அத்தகைய வேலைகளின் சேம்பிள்கள் சில.

எலெக்ட்ரிக் ப்யூஸ் போடுதல்.

ட்யூப் லைட் மாற்றுதல்.

லீக்காகும் பைப்புக்கு வாஷர் மாற்றுதல்.

கதவு, ஜன்னல்களில் கழண்டு போன ஸ்க்ரூவை மாட்டுதல்.

இப்படியான பல சில்லறை வேலைகளை அவ்வப்போது செய்து விட்டால் வீட்டு வேலைகள் சுலபமாக நடக்கும். இதற்கு வீட்டில் சில பொதுவான கருவிகள் வேண்டும். தவிர நம் வாழ்வில் பல காகிதங்களைப் பேண வேண்டியிருக்கிறது. இதற்கும் சில சாதனங்கள் தேவைப்படுகின்றன.

நான் வீட்டில் வைத்திருப்பவை:

1. ஸ்குரூ டிரைவர் - பல சைஸ்களில்.

2. கட்டிங்க் பிளையர்.

3. கரன்ட் டெஸ்டர்

4. ப்யூஸ் வயர் - 5 ஆம்ப்ஸ்

5. ஸ்பேனர்கள் - சைஸ் 5 முதல் 22 வரை

6. பைப் ரெஞ்ச்

7. எலெக்ட்ரிக் வயர்கள்

8. சுத்தி - பெரியது 1, சிறியது 1

9. ஸ்டேப்ளர் + பின்கள்

10. செல்லோ டேப் + டிஸ்பென்சர்

11. கோந்து

12. டபுள் பஞ்சிங்க் மிஷின்

13. இங்க் பேனா + இங்க்

14. பால் பாயின்ட் பேனாக்கள் - 25

15. மெக்கானிகல் + ஆர்டினரி பென்சில்கள்

16. அழி ரப்பர்

17 ரப்பர் பேண்டுகள்

18. குண்டூசி

19. ஜெம் கிளிப்புகள்

20. துண்டு காகிதங்கள் (பேட்)

21. பைண்டிங்க் நூல் + ஊசிகள்

22. கத்தரிக்கோல்

23. கத்திகள்

24. பைல்கள்

இது தவிர சில ஐட்டங்கள் நீங்கள் சாதாரணமாக கேள்விப்படாதவை.

1. பஞ்ச் ஹோல் கார்டு - பேப்பர்களை பஞ்ச் செய்து பைலில் போட்டால் கொஞ்ச நாளில் அந்த ஹோல் கிழிந்து விடும். இவ்வாறு ஏற்படுவதைத் தடுக்க ஹோல் கார்டு கடைகளில் கிடைக்கிறது. இது ஒரு சிறிய பிளாஸ்டிக் வாஷர். இதை அந்த ஹோல்களில் ஒட்டி விட்டால் அப்புறம் அந்த பேப்பர் கிழியாது.

2. மெக்கானிகல் பென்சில் ஷார்ப்பனர். அமெரிக்கா போன அன்பர்கள் பார்த்திருப்பார்கள். பென்சில் விளம்பரங்களில் வரும் பென்சில்கள் எப்படி அவ்வளவு கூராக சீவப்பட்டிருக்கிறது தெரியுமா? இந்த மாதிரி ஷார்ப்பனர்களால்தான். பென்சில் வைத்திருந்தால் அதன் முனை கூராக இருக்கவேண்டும்.

இவை எல்லாம் இல்லாவிட்டால் காலம் ஓடாதா என்று கேட்பவர்களுக்கு - எப்படியும் வாழலாம், ஆனால் இப்படித்தான் வாழ்வேன் என்பது ஒரு சில பைத்தியக்காரர்களின் ஆசை.

ஞாயிறு, 17 ஜூன், 2012

திருமணத் தடையா? கவலை வேண்டாம்.

வாலிப வயோதிக நண்பர்களே

உங்கள் திருமணம் நாட்படத் தள்ளிப்போகிறதா? கவலை வேண்டாம். நாங்கள் ஆரம்பிக்கப்போகும் திருமணக்கல்லூரியில் சேருங்கள். வெற்றி நிச்சயம்.

50 கல்யாணங்கள் வெற்றிகரமாகச் செய்து கொண்ட சூபர் ஸ்பெஷலிஸ்ட் புரொபசர் உங்களுக்கு வகுப்புகள் நடத்துவார். தற்போது அவர் கம்பி எண்ணிக்கொண்டிருந்தாலும் வகுப்புகள் எடுப்பதற்கு பரோலில் வருவார்.

பின் குறிப்பு; இது ஒரு நகைச்சுவைப் பதிவு. சீரியஸாக எடுத்துக்கொண்டு என் மீது பாயவேண்டாம்.

வெள்ளி, 15 ஜூன், 2012

மாறுவது காலமா, மனிதனா?


காலம் மாறிவிட்டது என்று நாம் அடிக்கடி அலுத்துக் கொள்கிறோம். இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் பணத்தைத் தேடி பேயாய் அலைகிறார்கள். (பேயை நான் பார்த்ததில்லை. அது எப்படி அலையும் என்பதுவும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் உலக வாழ்க்கையில் இந்த வாசகத்தைப் பல முறை கேட்டிருக்கிறேன். அதனால் அதை உபயோகப்படுத்தினேன்.) அவர்களுக்கு மனித உறவுகளை பராமரிக்க நேரம் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கு மதிப்பு இருந்தது. உறவினர் வீட்டுக்குப் போனாலோ அல்லது நண்பர்கள் வீட்டுக்குப் போனாலோ, அவர்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். குசலம் விசாரித்தார்கள். இரு குடும்பத்தின் நல்லது கெட்டதுகளைப் பற்றி கலந்து பேசினார்கள். மன ஆறுதல் பெற்றார்கள். குடும்பத்தோடு போனால் இரட்டிப்புச் சந்தோஷம் அடைந்தார்கள்.

ஆனால் இன்றோ ஒருவர் வீட்டிற்குப் போவதென்றால், என்ன, எதற்கு, என்று கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சும்மா, இந்தப்பக்கம் வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன், என்று ஒருவர் வீட்டிற்குப் போக முடியாது. முன்னாலேயே சொல்லவேண்டும். அவர்கள் சரி என்று சொல்ல வேண்டும். ஏதாவது வாங்கிக்கொண்டு போகவேண்டும். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போவது குற்றம். அதே போல் அவர்கள் வீட்டுக் குழந்தைகளையும் கொஞ்சுவது மகாக் குற்றம். குழந்தைகள் கெட்டுப் போய் விடுவார்களாம்.

அப்புறம் பரஸ்பரம் நீங்க நலமா, நான் நலம், இதற்கு மேல் விசாரித்தால் அது அநாகரிகம். காப்பி அதுவாக வந்தால் குடிக்கலாம். காப்பி குடிக்கிறீர்களா என்று கேட்டால், இப்போதுதான் குடித்தேன் என்று சொல்லவேண்டும். சரி குடிக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் சரியான காட்டுமிராண்டி என்று எடை போடுவார்கள். நீங்கள் போன வீட்டுக்காரர்கள் உங்களை விட வசதியானவர்கள் என்றால் நீங்கள் வாங்கிப்போன ஸ்வீட் அல்லது பழங்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரிக்குப் போவது உறுதி.

பத்து நிமிடத்திற்கு மேல் தங்கினீர்கள் என்றால் வீட்டுக்காரர்கள் முள் மேல் உட்கார்ந்திருப்பது போல் தவிப்பார்கள். இந்தப் பத்து நிமிடத்திலேயே அவருக்கு நான்கு போன் கால்கள் வந்திருக்கும். பத்து நிமிடத்தில் நீங்கள் இடத்தைக் காலி செய்யவில்லையானால், கடைசி போன் கால் பேசி முடித்தவுடன், பாருங்கள், ஒரு அர்ஜென்ட் வேலை, போன் வந்து விட்டது, நான் போக வேண்டும், இன்னொரு நாளைக்கு சாவகாசமாக வாங்களேன் என்று உங்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைப்பார்கள். ஏண்டா இவர்கள் வீட்டுக்குப் போனோம் என்று ஆகிவிடும்.

ஸ்வீட், பழம் செலவு 200ரூ, போகவர பஸ்ஸோ, ஆட்டோவோ, அதற்கு ஒரு 200, இப்படி 400, 500 ரூபாய் செலவு செய்து மனச் சஞ்சலத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டுக்காரியின் அர்ச்சனையை வேறு சகித்துக்கொள்ளவேண்டும்.

ஆகக்கூடி, காலம் மாறியிருக்கிறதா? அல்லது மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? யோசியுங்கள்.

திங்கள், 11 ஜூன், 2012

பதிவர் சந்திப்பின் நோக்கம் என்ன?

11-6-2012:
பின் குறிப்பு - முன்னால் போடப்படுகிறது.
அன்புடைய சக பதிவர்களுக்கு,
யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. சங்கவி மிகுந்த ஆர்வத்துடன் கோவைப் பதிவர் குழுமம் ஆரம்பித்துள்ளார். அவருக்கு எல்லோரும் ஆதரவு அளிப்போம். நான் கடைசி வரை இல்லாமல் இருந்து விட்டு, சகட்டு மேனிக்கு குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பது நியாயமல்ல. குழுமம் வளரவேண்டும் என்பதே என் ஆசை. எல்லோருடைய ஆசையும் அதுவாகத்தான் இருக்கும்.

நடந்தவைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். இன்னும் சங்கவி, குழும சந்திப்பைப் பற்றி பதிவிடவில்லை என்று நினைக்கிறேன். அவர் பதிவிட்ட பின் மற்ற கருத்துகளையும் பரிசீலனை செய்யலாம். 

======================================================================


10-6-2012 அன்று கோவைப் பதிவர் குழுமத்தின் சந்திப்பு நடந்தது. எனக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை. எதிலாவது முதலாவதாக வரவேண்டும் என்பதுதான் அது. அந்த ஆசை நேற்று நிறைவேறியது. லால்குடி ரெஸ்டாரென்ட்டுக்கு நான் 1.35 க்குப் போனேன். நான்தான் முதல் ஆள். அதே மாதிரி எனக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் 4.45 க்கு முதல் ஆளாக வெளியேறினேன். இப்படி இரண்டு சாநனைகளை ஒரே நாளில் நடத்தினேன்.

என் ஆயுளில் அதிக விலையில் சினிமா பார்த்ததும் இந்த சந்திப்பில் நிறைவேறியது. நான் வெளியில் வரும்போது பதிவர் அறிமுகங்கள் ஏறக்குறைய முடிந்து விட்டன. பிறகு நடந்தவைகளை மற்றவர்கள் பதிவில் பார்த்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நான் எடுத்த சில புகைப்படங்கள்.






பதிவர் குழுமத்தலைவர் சங்கவி அரசியலில் குதிக்கத் தயாராகிறார். (வேஷ்டி சட்டையைக் கவனிக்கவும்) 





ஆங்காங்கே பதிவர் சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் என்ன பலன் என்று யோசித்தால் வெறுமையே மிஞ்சுகிறது.

எனக்கு சில கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் பல அழகான, ஆழமான கருத்துகள் கொண்ட பழமொழிகள் உள்ளன. அதில் ஒன்று "கிழவன் பேச்சு கின்னாரக்காரனுக்கு ஏறுமா" என்பது ஒன்று.

ஏறுகிறதோ இல்லையோ, ஊதுகிற சங்கை ஊதி வைத்தால் விடியறபோது விடியட்டும் என்றபடி என் கருத்துக்களை இங்கே பதிக்கின்றேன்.

1. எந்த ஒரு சங்கமும் தொடர்ந்தும், நீடித்தும் நடக்கவேண்டுமென்றால் பொருளாதார வசதி வேண்டும். பதிவர்கள் எந்த அளவிற்கு இதை வழங்க முடியுமோ அந்த அளவிற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.

2. பதிவர்கள் குழுமத்தின் நோக்கங்கள் தெளிவாகவும் அந்தக் கூட்டத்தினருக்கு பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும். இதை வரையறுக்காமல் எந்த செயலையும் மேற்கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு பதிவர் கூட்டத்தில் சினிமா காட்டுவது தேவையற்ற ஒன்று. நேரத்தை விரயம் செய்யும் செயல்.

3. அகலக்கால் வைத்து தடுமாறுவதை விட மெதுவாகச் செல்வது இலக்கை விரைவில் அடைய உதவும்.

வியாழன், 7 ஜூன், 2012

செவ்வாய், 5 ஜூன், 2012

இறைவன் எங்கே இருக்கிறான்?


காலம் காலமாக கேட்கப்பட்டு புளித்துப் போன கேள்வி. இருந்தாலும் அவ்வப்போது புளி போட்டுத்தேய்த்து புதிது பண்ணிக்கொள்ளவேண்டும்.

இறைவன் எங்கே இருக்கிறான் என்பதை ஆராய்வதற்கு முன் இறைவன் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது. சின்னவயதில் கடவுள் மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். நீ நல்லது செய்தால் உனக்கு சுகத்தைக் கொடுப்பார். தீமை செய்தால் கஷ்டத்தைக் கொடுப்பார் என்று பெரியவர்கள் சொல்லி சொல்லி, கடவுளைக் கணக்குப்பிள்ளை என்று நம்பி வந்தோம். பிற்காலத்தில் விவரம் தெரிந்த பிறகு, அவர் எல்லோருக்கும் கணக்கு வைப்பதில்லை, சாதாரண மனிதர்களுக்குத்தான் கணக்கு வைக்கிறார் என்று புரிந்தது.

அவர் கணக்கு வைத்துக்கொள்ள ஒரு பெரிய ஆபீசே நடத்துகிறார். சித்திரகுப்தன்தான் அதற்கு எக்சிக்யூடிவ் டைரக்டர். ஆனால் அவரும் வேலைப்பளு காரணமாக சிலரது கணக்குகளை விலக்கிவிட்டார். இந்த விஷயம் எனக்கு எப்படித் தெரிந்தது என்றால், சாதாரண மனிதர்களுக்கு விதித்துள்ள விதியான, நல்லது செய்தால் நல்லது விளையும், கெட்டது செய்தால் கெட்டது விளையும் என்ற விதி அநேகம் பேருக்கு விதிவிலக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் விஷயத்தில் அவர்கள் கெட்டதே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக மிக நன்றாக, சுகபோக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம் என்று யோசித்தபோதுதான் இந்த ஞானோதயம் ஏற்பட்டது. அதாவது அவர்களுக்கெல்லாம் சித்திர குப்தன் கணக்கு வைப்பதில்லை என்ற விஷயம். ஏனென்றால் அவர்களுக்கு கணக்கு வைக்க ஏகப்பட்ட குமாஸ்தாக்கள் தேவைப்பட்டன. ஏறக்குறைய ஒவ்வொருவருக்கும் ஒரு குமாஸ்தா தேவையாயிருந்தது. யமதர்மனிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொன்னபோது அவன் சிம்பிளாக இந்த வழியைச் சொன்னான். அதாவது அவர்களுக்கெல்லாம் கணக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

அப்படிப்பட்ட பாக்கியவான்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதல்லவா? சொல்லிவிடுகிறேன். அரசு சம்பத்தப்பட்ட அனைத்து நபர்களும் இந்த விதிவிலக்கின் கீழ் வருகிறார்கள். நம் நாட்டை எடுத்துக் கொண்டால், ஜனாதிபதியிலிருந்து ஊர் பேர் தெரியாத பஞ்சாயத்து கடைநிலை ஊழியர் வரை அரசு சம்பத்தப்பட்டவர்கள்தான். எம்.பி., எம்.எல்.ஏ., பஞ்சாயத்து மெம்பர், எல்லாரும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. வட்டம், மாவட்டம், எடுபிடிகள் இவர்களும் இவர்களுள் அடக்கம்.

இவர்களுக்கு இந்த விதி, அதாவது நல்லது, கெட்டது என்கிற விதி இல்லை. இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சித்திரகுப்தன் கணக்கு வைக்கமாட்டான். இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அவனுக்கு அவன் குடும்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கே நேரம் போதாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்போது இதையெல்லாம் கவனிக்க எப்படி முடியும்? 

திங்கள், 4 ஜூன், 2012

தலைமுறை இடைவெளி என்பது என்ன?


நேற்று என் பேரன்கள் - பேரர்கள் என்று மரியாதையாகச் சொன்னால் அர்த்தம் வேறு விதமாகப் போய்விடும்- KFC போய் விட்டு வந்தார்கள். அங்கு என்ன விசேஷம் என்று கேட்டால் "அதெல்லாம் உங்களுக்குப் புரியாது தாத்தா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

அப்புறம் வெளியில் விசாரித்ததில் தெரிய வந்தது. கோழிக்கறிக்கு முலாம் பூசி கொள்ளையடிக்கும் இடம் என்று சொன்னார்கள். கோரைப் பாயில் படுத்துத் தூங்குகிறவனுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் ரூமில் படுக்கவைத்தால் அவன் எப்படித் தூங்குவான்?

இந்தக் காலத்துப் பசங்களுக்கு அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க அவர்கள் பெற்றோர் தயங்குவதில்லை. நமக்குத்தான் அந்தக் காலத்துல அனுபவிக்க முடியலே. நம்ம பசங்களாவது அனுபவிக்கட்டுமே என்பது அவர்கள் எண்ணம். நமக்கு ஒவ்வொரு பைசாவையும் எண்ணி செலவு செய்துதான் பழக்கம். எதுவானாலும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க என்பதுதான் நம் காலத்தில் எழுதாத சட்டம்.

அப்புறம் இன்னொண்ணு. இந்தக் காலத்துப் பசங்க காசைத் தொடுவதே இல்லை. எதற்கும் அட்டைகள்தான். காசு எங்கிருந்து, எப்படி வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

அந்தக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு போவோம். "அரை டவுசர்" என்பது சிறு பையன்களைக் குறிக்கும் சொல். ஒருநாள் ஜவுளிக்கடையில் 70 வயசு கிழவர் முக்கால் பேன்ட் வாங்கிக்கொண்டிருந்தார். என்ன சார், பேரனுக்கா என்று கேட்டேன். இல்லைங்க, எனக்குத்தான் என்றார். அவர் அமெரிக்காவிலிருக்கும் கமனைப் பார்க்கப் போகிறார். அங்கே அதுதான் பேஷனாம்.

அந்தக் காலத்தில முடி வெட்ட காசு இல்லாமல் முடி காடாக வளர்ந்தாருக்கும். இப்ப என்னடா என்றால் அதுதான் பேஷன் என்கிறான் என் பேரன்.

இதுதாங்க தலைமுறை இடைவெளி. இன்னும் என்னென்ன கண்றாவிகளெல்லாம் வரப்போகுதோ, தெரியாது. அதுக்குள்ள போய்ச்சேர்ந்துட்டா பரவாயில்லை.

வெள்ளி, 1 ஜூன், 2012

விவாக ரத்து வாங்குவது எப்படி?


பத்து வழிகள் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு எது பொருந்துமோ அதை எடுத்துக்கொள்ளவும்.

1. விவாக ரத்து வாங்குவதற்கு முதல் தேவை நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். அதாவது முதல் கல்யாணம் முடிந்த பிறகு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். முதல் மனைவி தானாகவே விவாகரத்து வாங்கிக்கொண்டு போய்விடுவாள்.

2. நல்ல விவாக ரத்து வக்கீலைப் பிடித்து நண்பனாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் வரும் கேஸ்களிலிருந்து பல ஐடியாக்கள் கிடைக்கும்.

3. அவரும் ஏதாவது புது ஐடியா கொடுப்பார். அவரையே உங்கள் கேசுக்கும் வக்கீலாக வைத்துக் கொள்ளுங்கள்.

4. மனைவி ஷாப்பிங்க் போகவேண்டும் என்று சொல்லுகிறபோது தலைவலி தாங்க முடியவில்லை என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொள்ளவும். இப்படி நாலு தடவை செஞ்சா வக்கீல் நோட்டீஸ் தானாக வரும்.

5. ஆபீசிலிருந்து வீட்டுக்கு இரவு 10 மணிக்கு முன் வராதீர்கள். வந்தவுடன் ஒன்றும் பேசாமல் படுத்துக் கொள்ளவும்.

6. அம்மாவை அழைத்துக்கொண்டு வந்து வீட்டோடு வைத்துக் கொள்ளவும். ஒரு மாதத்தில் விவாக ரத்துக்கு நான் கேரன்டி.

7. ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு காலை 8 மணிக்கு வெளியில் சென்று விட்டு இரவு 10 மணிக்குத் திரும்பி வரவும். அன்று முழுவதும் வீட்டில் ஒன்றும் சாப்பிடக்கூடாது.

8. சாப்பிடும்போது ஏதாவது குறை சொல்லிக்கொண்டே சாப்பிடவும். குறிப்பாக எங்க அம்மா செய்யற மாதிரி இல்லை என்று அடிக்கடி சொல்லவும்.

9. மாமியார், மாமனாரைப் பற்றி அடிக்கடி மோசமாகப் பேசவும். செய்த சீர் வகைகளைப் பற்றி புகார் சொல்லவும். தலை தாபாவளிக்கு எடுத்த துணிகளைப் பற்றி மோசமாக கமென்ட் சொல்லவும்.

10. இவை ஒன்றும் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்றால் உங்கள் தலைவிதி அவ்வளவுதான் என்று திருப்திப் பட்டுக்கொள்ளவும்.

பி.கு. நான் 10 வது முறையைத்தான் கடைப்பிடிக்கிறேன்.