சனி, 31 மார்ச், 2012

மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி?


"பாஸ் மனைவியிடம் நடந்து கொள்வது எப்படின்னு ஒன்னு போடுங்க பாஸ்! நிறைய பேருக்கு உதவியா இருக்கும்!"

நிலவன்பன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இந்தப் பதிவு போடுகிறேன். தெரிந்த விஷயங்களை தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது ஒரு முக்கிய மனித நேயப் பண்பாடு. ஆகவே எனக்குத் தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்தப் பதிவினால் வரும் பாவ புண்ணியங்கள் அனைத்தும் நிலவன்பனையே சேரும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் ஒரு கதை சொல்லுகிறேன்.


ஒரு ஊரில் ஒரு பெரிய ஜகஜ்ஜாலக் கில்லாடி இருந்தார்.(என்னை மாதிரி இல்லாவிட்டாலும் என்னில் பாதி அளவுக்கு தேறுவார்). அவருக்கு பெரிய பேச்சாளர் ஆகவேண்டும் என்ற ஆசை. ஒரு பேச்சாளரிடம் போய் ட்யூஷன் எடுத்துக்கொண்டார். பிறகு அடுத்த ஊருக்குச் சென்று ஒரு விளம்பரம் செய்தார். உங்களுக்கு பணக்காரர் ஆக விருப்பமா? இன்று அதைப் பற்றிய பேச்சு இந்த ஊர் பார்க்கில் நடக்கிறது. விருப்பமானவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம். அனுமதிக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. இவ்வாறு விளம்பரம் செய்தார். 


யாருக்குத்தான் பணத்தின் மேல் ஆசை இல்லை?


அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்தப் பார்க்கில் ஏகப்பட்ட கூட்டம். நம்ம பேச்சாளர் மேடை ஏறினார். கூட்டத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். இங்கு பணக்காரர்கள் யாரோ, அவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள். பாதிபேர் கையைத் தூக்கினார்கள். அடுத்து இன்னொரு கேள்வி கேட்டார். யார் யாரிடம் பணம் இல்லையோ அவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள் என்றார். மீதிப் பாதிப் பேர் கையைத்தூக்கினார்கள்.

பிறகு பேச்சாளர் சொன்னார். யார் யாரிடம் பணம் இல்லையோ அவர்கள் எல்லாம் மீதிப் பேர்களிடம் பணக்காரர் ஆகும் வழியைக் கேட்டுக்கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கிப் போயவிட்டார். கூடியிருந்த ஜனங்களுக்கு வெகு நேரம் கழித்துத்தான் தாங்கள் முட்டாளாக்கப்பட்டது விளங்கியது.

அந்த மாதிரி இந்தப் பதிவைப் படிப்பவர்களில் பாதிப்பேராவது மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது என்று அனுபவத்தில் கற்றுக்கொண்டிருப்பார்கள். இந்த வித்தை தெரியாதவர்களை அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம்தான் மனதில் உறைத்தது. மனைவியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்தவர்கள் ஒருவரும் அடுத்தவர்களுக்கு அந்த வித்தையைக் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு வெளியில் மிகுந்த தன்மானம் கொண்டவர்கள்.

பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். முக்தியடைவதற்கு சுலபமான வழி பூரண சரணாகதிதான். கடவுளே, நீயேதான் எல்லாம், உன்னையே சரணடைந்தேன், எனக்கு முக்திக்கு வழிகாட்டுவது உன் பொறுப்பு என்று பகவான் பாதத்தில் விழுந்து விடுவதுதான் அந்த வழி.

இந்த தத்துவத்தை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

இப்போது நமது சப்ஜெக்ட்டுக்கு வருவோம். மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி? தலைப்பில் ஒரு தவறு. மனைவியிடம் காலம் தள்ளுவது எப்படி என்று இருந்திருக்க வேண்டும். அதுதான் சரியான தலைப்பு. அப்படி காலம் தள்ளுவது என்றால் என்னென்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

1. பரிபூர்ண சரணாகதித் தத்துவத்தை பூரணமாக கடைப்பிடிக்கவேண்டும். இதில் கொஞ்சம் கூட தயக்கம் இருக்கக்கூடாது.

2. எது நடந்தாலும் அதை பகவத் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

3. எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் ரொம்ப பேஷ், பிரமாதம் என்று சொல்ல வேண்டும்.

4. நீங்கள் மனவி போட்ட கோட்டைத் தாண்டுவது இல்லை என்கிற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பாக உங்கள் அலுவலக நண்பர்களுக்கு.

5. எக்காரணம் கொண்டும் நண்பர்களையோ அல்லது உங்கள் வழி சொந்தக் காரர்களையோ வீட்டுக்கு வரவழைக்கக் கூடாது. அவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் ரயில்வே ஸ்டேஷனிலோ அல்லது பஸ் ஸ்டேண்டிலோ பார்த்துவிட்டு அனுப்பி விடவும்.

6. உங்கள் மனைவி வழி சொந்தக்காரர்கள் வந்தால் முகத்தை உம்மென்று இஞ்சி தின்ற குரங்கு மாதிரி வைத்துக்கொள்ளக் கூடாது. சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கவேண்டும்.

7. சம்பளம் வாங்கி வந்ததும் நயாபைசா குறையாமல் மனைவியிடம் கொடுத்து விடவேண்டும். தினமும் என்னென்ன செலவு என்று சொல்லி தேவையான பணம் மட்டும் வாங்கிக் கொள்ளவேண்டும்.

8. வீட்டில் எல்லா முடிவுகளையும் மனைவி எடுத்தாலும் நீங்கள் எடுத்ததாகத்தான் கணக்கு. யார் கேட்டாலும் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

9. கேட்கும் கேள்விக்குத்தான் பதில் பேச வேண்டும். நீங்களாக எதுவும் பேசக்கூடாது.

10. உங்களுக்கு பையன்கள் இருந்தால் அவர்களுக்கு இந்தப்பாடங்களை ஒழுங்காக சொல்லிக் கொடுக்கவும்.


வேறு சந்தேகங்கள் இருந்தால் எழுதி அனுப்பவும்.

வியாழன், 29 மார்ச், 2012

அக்கிரமம், அநியாயம்!


இன்றைய செய்தித்தாள்களில் நமது இந்தய ராணுவ முதன்மை தளபதி வி.கே.சிங் பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதம் பத்திரிக்கைகளுக்கு கசிந்து வெளியாகி உள்ளது. கடிதத்தின் சாராம்சம், இந்திய ராணுவத்திலிருக்கும் குறைபாடுகள்.

முதலில் இந்தக் கடிதம் எப்படி கசிந்தது? தலைமை ராணுவ அதிகாரி ராணுவ ரகசியங்களை காப்பாற்றுவது இந்த லட்சணத்தில்தானா?

இரண்டாவது. இந்த ஆள்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி. இந்த ஆளை நம்பித்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஆளின் வேலையே ராணுவத்தை நல்ல முறையில் நிர்வகிப்பது. இந்த ஆளே ராணுவத்தின் நடைமுறைகள் சரியில்லை என்று சொன்னால் எனக்கு முதலில் தோன்றும் கேள்வி என்னவென்றால், இந்த ஆள் இத்தனை நாள் சம்பளம் வாங்கிக்கொண்டு என்ன பிடுங்கிக்கொண்டு இருந்தான்? என்பதுதான்.

அடுத்த கேள்வி. இவனை கண்காணிக்கும் மந்திரி என்ன ***** கொண்டு இருந்தார்?

புதன், 28 மார்ச், 2012

வயதானவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை

இந்திய நாட்டில் எல்லா மதத்தினரும், வயதில் மூத்தவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். பல பொது இடங்களில், முக்கியமாக, வட இந்தியாவில் இதை வெளிப்படையாக நடைமுறையில் பார்க்கிறோம். இராமாயணம், மகாபாரதம் போன்ற சீரியல்களில் இந்த வழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள்.

இந்த வழக்கம் பாலிவுட் உலகில் அறிமுகமாகி, கோலிவுட்டிற்கும் இறக்குமதியாகி, சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், பைனான்சியர்கள் எங்கு போனாலும் அவர்கள் காலைத் தொட்டு வணங்க சினிமாக்காரர்கள் தயங்குவதில்லை. நான் ஒரு முறை ஒரு பிரபல நடிகர் வீட்டிற்குப் போயிருந்தேன். நான் எப்போதும் போல் நின்றுகொண்டே ஒரு வணக்கம் போட்டேன். ஆனால் அங்கு வந்திருந்த வேறு ரசிகர்கள் அவர் காலைத் தொடுவது போல் பாவனை செய்து வணங்கினார்கள். அந்த நடிகர் என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது.

யார் எந்தப் பெரியவர்களை காலைத்தொட்டு அல்லது நின்றுகொண்டு வணங்கினாலும் அவர்களை ஆசி கூறி வாழ்த்த வேண்டும் என்பது மரபு. ஆனால் அதற்கெல்லாம் இன்று நேரமில்லை. ஆனானப்பட்ட கடவுளுக்கே போகிற போக்கில் ஒரு டாட்டா காட்டிக்கொண்டு போகிற அவசர உலகம் இது. ஆனால் கடவுள் வஞ்சகமில்லாமல் எல்லோருக்கும் சலிப்பில்லாமல் அபயஹஸ்தம் காட்டிக்கொண்டு இருக்கிறார்.

அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பெரியவர்கள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் நடந்து கொள்ளும் முறைகள் பல சமயங்களில் எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றன. இது அவர்கள் உணராமல் செய்யக்கூடும். உணர்ந்து செய்தாலும் உணராமல் செய்தாலும் விளைவுகள் ஒன்றே. அவற்றில் சிவற்றை பட்டியலிட்டுள்ளேன்.

1. தொணதொணத்தல் அல்லது புலம்புதல்:
2. துருவுதல்
3. அருவருப்பான செயல்கள்
4. உணவுக்கட்டுப்பாடு இன்மை
5. இலவச அறிவுரைகள்
6. இடம், பொருள் தெரியாமல் பேசுதல்
7. மறத்தல்

இந்த சமாசாரங்களை விரித்து எழுதினால் பலருடைய மனம் நோகும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

திங்கள், 26 மார்ச், 2012

விருந்தினராக உறவினர் வீட்டில் தங்கலாமா?

காலங்கள் மாறிவிட்டன. உள்ளன்போடு ஒருவரை நேசிக்கும் பண்பு மறைந்துவிட்டது. உறவினர்களை, கல்யாணம் போன்ற விசேஷங்களில் பார்த்து நலம் விசாரிப்பதுடன் இன்றைய உறவுகள் முடிந்து விடுகின்றன.

லீவு வந்தால் சிறுவர் சிறுமியர் உறவினர் வீடுகளுக்குச் செல்வது என்ற வழக்கம் ஏறக்குறைய மறைந்துவிட்டது.

காரணங்கள் ஆயிரம் சொல்லமுடியும். ஆனால் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். அது மனிதர்களின் மனம் பணம் சம்பாதிப்பதிலும், தங்கள் வசதிகளை உயர்த்திக்கொள்வதிலும் ஈடுபடுகிறதே தவிர, மனித உறவுகளைத் தேடுவதில் இல்லை.

 ஆகவே இன்று நாம் ஒரு ஊருக்கு ஏதாவது வேலையாகச் செல்லுகிறோம் என்றால் அந்த ஊரில் நம் உறவினரோ, நண்பரோ இருந்தால் அவர் வீட்டில் தங்கலாம் என்று எண்ணக்கூடாது.  அவர்களுக்கு ஆயிரத்தெட்டு கஷ்டங்கள். போகிறவர்களுக்கும் பல எதிர்பார்ப்புகள். இதனால் நடைமுறையில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன.

எனக்குத் தெரிந்த இரண்டு பேர் தங்கள் மகளைப் பார்க்கச்சென்றாலும் கூட, அங்குள்ள ஓட்டலில் தங்கித்தான் மகளைப் பார்க்கப் போவார்கள். நான் கூட இதைத் தவறாகப் புரிந்ததுண்டு. ஆனால் வயதான பிறகு, இன்று சிந்தித்தால் அதுதான் சௌகரியம் என்று தோன்றுகிறது.

காலத்தின் மாறுதல்களுக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வெள்ளி, 23 மார்ச், 2012

நம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது எப்படி?

நம் குழந்தைகள்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்த காலம் போய்விட்டது. இடுப்பில் கயறு கட்டி கிணற்றுக்குள் இறக்கி பயங்காட்டின நாட்கள் இப்போது இல்லை.

இன்றைய பெற்றோர்களின் பொறுப்பு மிக சிக்கலாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எது நல்லது, எதை எப்படி சொல்லிக்கொடுப்பது என்பது கஷ்டமான சமாசாரமாக இருக்கிறது. குழந்தை வளர்ப்புக்கென்று ஸ்பெஷல் கிளாஸ்கள் நடக்கின்றன என்று கேள்விப்படுகிறேன். உண்மையில் அவை அவசியம் என்றே தோன்றுகிறது.

இதோ இந்தப் பதிவைப் பாருங்கள். குழந்தைகளின் ஆதங்கத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குழந்தைகளிடம் அன்பு காட்டவேண்டியது அவசியம். ஆனால் அதீத அன்பு கெடுதல் விளைவிக்கும் என்பதையும் உணரவேண்டியது அவசியம். கண்டிப்பு தேவைப்படும் சமயங்களில் கண்டிப்பாக இருப்பது குழந்தைகளுக்கு நல்லது. ஆனால் எப்பொழுது அன்பு காட்டவேண்டும், எப்பொழுது கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் கற்றுக்கொள்ள முடியும்.

குடும்பத்தின் பொருளாதார நிலையைக் குழந்தைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் குடும்ப நிலைக்கு மீறி ஆசைப்படாமல் இருப்பார்கள். இளம் வயதில் கல்வி கற்பதுதான் ஒருவனின் நோக்கமாக இருக்கவேண்டும். உபரியாக ஏதாவது விளையாட்டு அல்லது நுண்கலையில் பரிச்சயம் இருந்தால் போதும். அதற்காக குழந்தைகளை பல்கலை நிபுணனாக வளர்க்கிறேன் என்று விரட்டுவது கூடாது.

தொலைக்காட்சிப் பெட்டியும் கணிணியும் இல்லாத வீடே இல்லை என்று ஆகிப்போனது. இந்த இரண்டும் பொது அறிவை வளர்க்கக் கூடியவைதான். ஆனால் அதற்கும் ஒரு நியதி இருக்கவேண்டும். வீட்டிலுள்ள பெரியவர்கள் எப்போதும் டி.வி. பார்த்துக்கொண்டு குழந்தைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சாத்தியமில்லை.

குழந்தைகளின் நடவடிக்கைகளின் மேல் பெற்றோர்களின் கண்காணிப்பு எப்போதும் அவசியம். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பெற்றோர்கள்தான் கொடுக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறோமே என்று திருப்திப் பட்டுக்கொண்டு அவர்களை மனம் போல் நடந்து கொள்ள அனுமதிப்பது தவறு.

நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொடுப்பது நம் பொறுப்பு. அதே சமயம் நம் அனைத்து செல்வங்களையும் அவர்களுக்காகவே தியாகம் செய்து விட்டு நம்முடைய வயதான காலத்தில் அவர்களை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.

வியாழன், 22 மார்ச், 2012

மிருத்யுஞ்ஜய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம்
உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம்

இந்த ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை பலர் படித்திருப்பீர்கள். இது ஒரு வேத மந்திரம்.

(நியாயமாக வேதம் படித்தவர்கள்தான் இந்த மந்திரத்தை ஜபிக்கவேண்டும். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல் நானும் என் பொல்லாச்சிறகை விரித்துள்ளேன். வேத பண்டிதர்கள் மன்னிப்பார்களாக.)

இதன் பொருள் :

நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்பவரும், முக்கண்ணனுமாகிய சிவபெருமானைப் போற்றி வழிபடுகிறோம். வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுவோமாக. ஆன்ம நிலையிலிருந்து விலகாமல் இருப்போமாக.

இந்த மந்திரத்தின் முக்கிய சாராம்சம் என்னவென்றால் நம்முடைய மரணம் துன்பமில்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான். அதற்கு உதாரணமாக சொல்லப்பட்ட விஷயம் - வெள்ளரிச் செடியிலிருந்து நன்கு பழுத்த வெள்ளரிப்பழம் எவ்வாறு சிரமமில்லாமல் விடுபடுகிறதோ அப்படி என் ஆத்மாவும் இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும்.

இன்று காலை நடைப்பயிற்சி போய்விட்டு வரும்போது வழியில் இரண்டுபேர் பேசிக்கொண்டு இருந்தார்கள். எதைப்பற்றி என்றால் மரணத்தைப் பற்றித்தான். அவர்களில் ஒருவர் சொன்னது. "நோய் நொடியில்லாமல் படுக்கையில் படுக்காமல் போய்ச்சேர்ந்து விட வேண்டும்."

என்ன ஒரு ஆசை பாருங்கள்! எனக்கு பணம் வேண்டும், பங்களா வேண்டும், கார் வேண்டும் என்றெல்லாம் அந்த மனுஷன் ஆசைப்படவில்லை. என்னுடைய மரணம் துன்பமில்லாமல் அமையவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறான்.

எனக்கு அதைக்கேட்டவுடன் இந்த மிருத்யுஞ்ஜய மந்திர ஞாபகம்தான் வந்தது.  வேதகாலத்திலேயை வேத விற்பன்னர்கள் தங்களுடைய மரணம் துன்பமில்லாமல் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார்கள். கலிகாலத்தில் ஆசைப்படுவது அதிசயமல்ல.

செவ்வாய், 20 மார்ச், 2012

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை


இந்தியாவில் இன்று அநேகரிடம் பணப்புழக்கம் தாராளமாக இருக்கிறது. அது எதனால், எப்படி ஏற்பட்டது என்பது பெரிய பொருளாதார நிபுணர்கள் விளக்கவேண்டிய ஒரு பொருள். நான் எழுத வந்ததற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில், பெரும்பாலானவர்கள் நல்ல வசதியுள்ளவர்களாகவும் தங்கள் வாரிசுகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கக்கூடிய நிலையிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பள்ளிகளில் அதிக வசதியுள்ளவர்களின் வாரிசுகளே படிக்கிறார்கள். அவர்களின் பேச்சுகளும் பழக்க வழக்கங்களும் பணக்கார தோரணையில் அமைகின்றன. அவர்களுக்கு கொடுக்கப்படும் பாக்கெட் மணியில் ஒரு ஏழைக்குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்.


இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போவார்கள். நல்ல சம்பளம் வாங்குவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கே நேரம் இருப்பதில்லை. தங்கள் குழந்தைகளின் விருப்பு-வெறுப்பு என்ன, யாருடன் பழகுகிறார்கள், அவர்களின் படிப்பு எப்படியிருக்கிறது, என்ன மார்க் வாங்குகிறார்கள், என்ற விஷயங்களெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாது. காரணம், நேரமில்லை. அதனால் இந்தக் குறைபாட்டை ஈடு கட்ட தங்கள் வாரிசுகளுக்கு அவர்கள் கேட்கும் எதையும் வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள்.


இந்த வாரிசுகள் இரு பாலரும் (ஆண்-பெண்) கல்லூரிக்குச் செல்லும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன. அது ஒரு இரண்டும் கெட்டான் வயது. நல்லது கெட்டதுகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத பருவம். அந்த வயதில் அவர்களை சரியான வழியில் செலுத்தக்கூடிய ஆலோசனைகள் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. அவர்களின் நண்பர்களிடமிருந்தே இந்த ஆலோசனைகள் கிடைக்கின்றன. நணபர்கள் நல்லவர்களாக இருந்தால் நல்ல ஆலோசனை கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் திசை மாறிப்போக வாய்ப்புகள் அதிகம்.


அடிப்படையில், நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு கூட, அந்த வயதிற்குண்டான, எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுவது இயற்கை. இந்த ஆர்வத்தை பெற்றோர்கள் செம்மைப்படுத்தி சரியான வழி காட்டவேண்டும். அதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாததால் வாரிசுகள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள்.  செல்போன், கம்ப்யூட்டர், இரு சக்கர வாகனம், பாக்கெட் மணி, இவையெல்லாம் தங்கு தடையில்லாமல் கிடைக்கின்றனகட்டுப்பாடு இல்லாததால் வாரிசுகள் தங்கள் இஷ்டம்போல் நடக்க ஆரம்பிக்கிறார்கள்உலகம் என்பது உல்லாசம் அனுபவிக்கத்தான் என்ற எண்ணம் இந்த வயதில் இந்த வாரிசுகளுக்கு மேலோங்கி விடுகிறது.


வாகனவசதிகள் இருப்பதால் நண்பர்களுடன் முதலில் ஊர் சுற்றுகிறார்கள். பெரிய ஓட்டல்களில் சாப்பிடுகிறார்கள். பெண்களின் நட்பும் சகவாசமும் கிடைக்கிறது. ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள். இந்த வயதில் இருக்கும் பாலுணர்வு காரணமாகவும், எதையும் அனுபவிக்கவேண்டும் என்ற தூண்டுதலாலும் பல மோசமான விளைவுகள் ஏற்பட்டுகின்றன.


இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். இந்தக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாய் பிரண்ட் தேவைப்படுகிறார்கள். அப்படி பாய் பிரண்ட் இல்லையென்றால் அவர்கள் கல்லூரி மாணவ சமுதாயம் அவர்களை இளக்காரமாகப் பார்க்கிறது. அது மட்டும் இல்லாமல் அந்த பாய் பிரண்டுடன் எவ்வளவு நெருக்கமாக பழகுகிறாளோ அந்த அளவிற்கு அவளுக்கு கிரேடு கூடுகிறது.

இப்போது படித்தவுடன் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் துறையில் பல ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. கல்லூரிப் பழக்க வழக்கங்களே அங்கும் தொடர்கின்றன. இந்த நிலையில் பெற்றோர் தேவைப்படாதவர்களாக ஆகிவிடுகின்றனர். பெற்றோர்களும் இது நாள் வரை இருந்த வளர்ப்பு முறையை மாற்ற முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கலாசாரத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் தினமும் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருக்கிறோம். முளையில் கிள்ளி எறிய வேண்டிய செடியை பெரிய மரமானபின் பிடுங்க முயல்கிறோம். ஆனால் முடிவதில்லை.


காலத்தின் கோலத்தைக் கண்டு மனம் வெதும்பத்தான் முடியும்.


ஞாயிறு, 18 மார்ச், 2012

இன்கம்டாக்ஸ் கட்டவேண்டுமா?

உங்களுக்கு வருட வருமானம் 2 லட்சத்திற்கு மேல் வருகிறதா? அப்படியானால் நீங்கள் வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.

வருமான வரியா? நான் சம்பாதிக்கிறேன், அதுக்கு எதுக்கு வரி என்று வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி நினைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சில பேர் அரசு போடும் சட்டங்களை வேத வாக்காக எடுத்துக்கொண்டு நடப்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு.

நீங்கள் சாதாரண சீனியர் சிடிசன் ஆக இருந்தால் 2 1/2 லட்சம் வரை வரி இல்லை. அதே நீங்கள் ஸ்பெஷல் சீனியர் சிடிசன் ஆக இருந்தால் 5 லட்சம் வரை வரி இல்லை. அதென்ன ஸ்பெஷல் சீனியர் சிடிசன் என்கிறீர்களா? நியாயமாகப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியவர்கள். இன்னும் இருந்துகொண்டு பல பேர் உயிரை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள். அதாவது 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

சில சேமிப்புகள் செய்திருந்தால் 1.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். அதாவது 2 லட்சம் +1.2 லட்சம் = 3.2 லட்சம் வரைக்கும் வரி கட்டவேண்டாம்.
சீனியர் சிடிசன்களுக்கும் இவ்வாறே. இதற்கு மேல் வருமானம் வந்து நீங்கள் வருமான வரி கட்டவேண்டுமென்று நினைத்தால் ஒரு வருமான வரி ஆலோசகரை நாடவும். இதற்கு முன்னால் வரி கட்டி அனுபவம் இருந்தால் நீங்களே அதற்குண்டான நடவடிக்கைகளைத் தெரிந்திருப்பீர்கள்.

மாத சம்பளம் வாங்கும் (அரசு அல்லது அரசு சாரா) பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அந்தந்த அலுவலகம் மூலமாகவே வரி பிடித்தம் செய்து விடுவார்கள். சிறு வியாபாரம் அல்லது சிறிய தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் வரி கட்டவேண்டிய அளவிற்கு வருமானம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அப்படியே வரி கட்டவேண்டிய அளவு வருமானம் இருந்தாலும் இந்த விஷயத்தை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை.

பெரிய வியாபார நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிச்சயம் வரி கட்டவேண்டி வரும். இதற்காக அவர்கள் நல்ல திறமைசாலிகளான ஆடிட்டர்களை வைத்திருப்பார்கள். இந்த ஆடிட்டர்களுடைய வேலையே என்னவென்றால் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் வரிப் பளுவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பதுதான். இதில் நியாய-அநியாயம் பார்க்கமாட்டார்கள். எப்படியோ வரி கட்டுவது குறைந்தால் சரி என்று ஆடிட்டரும் வாடிக்கையாளரும் இருந்து கொள்வார்கள்.

இப்படி வரி கட்டாமல் சேர்க்கும் வருமானம்தான் பிளாக் மணி என்று சொல்லப்படும் கறுப்புப் பணம். இப்படி சேர்ப்பவர்களைப் பற்றி தகவல் சேர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் இப்படிப்பட்ட விவரங்களை வருமான வரி இலாக்காவிற்குச் சொல்வதால்தான் பலர் வீடுகளில் வருமான வரிச்சோதனைகள் நடைபெறுகின்றன. இதில் கறுப்புப் பணம் எவ்வளவு கண்டுபிடிக்கப்படுகிறதோ அதில் 10 % கமிஷன் இந்த விபரம் கொடுத்த நபருக்குப் போய்ச்சேரும்.

வரி கட்டும் அளவிற்கு வருமானம் வந்தும், வரி கட்டாதவர்களை சட்டம் என்ன செய்யும்? இது ஒரு பெரிய கேள்வி. எனக்கு இதில் நேரடியான அனுபவம் இல்லை. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட வரையில் அப்படிப்பட்டவர்களில் இளிச்சவாயர்கள் சிலரைப் பிடித்து ஃபைன் போட்டு உபத்திரவம் செய்வார்கள். கெட்டிக்காரர்கள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். நான் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதுவரை மாட்டவில்லை.

இன்கம்டாக்ஸ் அதாவது வருமானவரி குறித்து மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் கன்சல்டேசன் பீஸ் வாங்கிக்கொண்டு அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறேன்.

வருமான வரி கட்டாமல் எல்லோரும் நீண்ட ஆயுளுடன் வாழ்க.



வியாழன், 15 மார்ச், 2012

சிறு வயதில் நான் செய்த ஜகஜ்ஜால புரட்டுகள்

பாக்கெட் மணி என்ற வழக்கம் தோன்றாத காலத்தில் நான் படித்தேன். வீட்டில் தினம் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் இனிப்பு பலகாரம் கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு செட் புது துணி கிடைக்கும்.

அவ்வப்போது நான் செய்யும் லீலைகள் வெளியானால் பூசை கிடைக்கும். அவ்வளவுதான். இதைத் தவிர வேறொன்றும் எதிர்பார்க்கக்கூடாது. எதிர் பார்த்தாலும் பிரயோஜனமில்லை.

நான் ஹைஸ்கூலில் நான்காவது பார்ம் படித்துக் கொண்டிருந்தபோது இந்த வாழ்க்கை போரடித்தது. முக்கியமாக சினிமாக்கள் பார்க்கவேண்டும். தேங்காய் பர்பி சாப்பிடவேண்டும். கேக் சாப்பிடவேண்டும். இப்படியெல்லாம் சிலபல விபரீத ஆசைகள் தோன்றலாயின.

என்ன செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்ததில் ஒரு வழி புலனாயிற்று.  என் நண்பன் ஒருவனின் அப்பா புஸ்தகம் பைண்டிங்க் செய்வார். அவன் வீட்டிற்குப் போயிருந்த சமயங்களில் அதை நான் கவனித்திருந்தேன். ஓரளவு அந்த வித்தையில் தேர்ச்சியும் பெற்றிருந்தேன்.

ஏன் நாம் கற்ற வித்தையை நம் வாழ்க்கைக்கு பயன்படுத்தக்கூடாது என்று ஒரு நாள் புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி எனக்கும் வந்தது. உடனே அதற்கான வழி முறைகளில் இறங்கினேன். புஸ்தகங்கள் பைண்ட் செய்து கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தேன். எல்லாம் வாய் வார்த்தைகள் மூலமாகத்தான். சில பையன்கள் புஸ்தகங்களை பைண்ட் செய்யக் கொடுத்தார்கள்.

நானும் அவைகளைப் பைண்ட் செய்து கொடுத்தேன். தொழில் சுத்தமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் பெருகினார்கள். ஒரு புத்தகம் பைண்ட் செய்ய நாலணா செலவு ஆகும். நான் வாடிக்கையாளர்களிடம் எட்டணா வாங்குவேன். சும்மா 100 பர்சென்ட் லாபம் மட்டுமே.

இப்படி நான் படிக்கும்போதே ஒரு தொழிலதிபர் ஆனேன். பர்பி, கேக் எல்லாம் சாப்பிட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து தொழில் நசித்து விட்டது. காரணம் ஞாபகமில்லை.

செவ்வாய், 13 மார்ச், 2012

இட்லி சாப்பிடுவது எப்படி?


என்னய்யா இது? தமிழ் நாட்டுல பொறந்தவனுக்கு இட்லி கூட சாப்பிடத் தெரியாதா? இதுக்கு ஒரு பதிவான்னு கேக்கறவங்கவெல்லாம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உண்மையில் இட்லியை முழுவதுமாக அனுபவித்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம் முன்னால வாங்க.

நான் சொல்றத கவனமாக் கேட்டுக்குங்க.

மொதல்ல மாலை நேரத்தில் இட்லி மாவை ஆட்டுக்கல்லில் ஊறவைத்த அரிசியையும், உளுந்துப்பருப்பையும், கையால் ஆட்டி மண் சட்டியில் எடுத்து வைக்கவும். மறுநாள் காலையில் அதை இட்லியாக சுடவும். இட்லி சுடுவதற்கு மண் பானைதான் பயன்படுத்தவேண்டும். இந்த டெக்னிக் தெரியாதவர்கள் 80 வயதுக்கு மேல் உயிருடன் இருக்கும் பாட்டிமார்களை அணுகித் தெரிந்து கொள்ளவும்.

நல்ல முற்றின தேங்காயாக எடுத்துக்கொண்டு அதைச் சிதறி, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு, புளி, இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து ஆட்டுக்கல்லில் நன்றாக அரைக்கவும். இப்போது தேங்காய்ச் சட்னி தயார். அதில் கடுகு, உளுத்தம்பருப்பை நல்லெண்ணையில் தாளித்துக்கொட்டவும்.

ஒரு அரை லிட்டர் துவரம்பருப்பு வேகவைத்து சின்னவெங்காயம் நிறைய சேர்த்து சாம்பார் வைத்துக்கொள்ளவும்.

வீட்டில் பக்குவமாகத் தயார் செய்த இட்லிப்பொடி ஒரு 200 கிராம் எடுத்து தேவையான செக்கில் ஆட்டிய நல்லெண்ணை விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே (செக்கில் ஆட்டிய)  நல்லெண்ணை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அப்போதுதான் சுட்ட சூடான இட்லி நான்கை ஒரு தட்டில் போட்டுக்கொள்ளவும். இரண்டு இட்லியின் மேல் இரண்டிரண்டு ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றவும். அந்த இட்லிகளை பிய்த்து சட்னியில் முக்கி வாயில் போட்டு மென்று சாப்பிடவும். ருசியை அனுபவிக்கவும்.

மீதி இருக்கும் இரண்டு இட்லிகள் முங்கும் அளவிற்கு சாம்பார் ஊற்றவும். குழி பிளேட்டாயிருந்தால் உத்தமம். ஒரு ஸ்பூன் உபயோகப்படுத்தி அந்த இரண்டு இட்லியையும் சாம்பாருடன் கலக்கி சாப்பிடவும்.

இப்போது ஒரு இட்லி மிச்சம் இருக்கும். அது இட்லிப்பானையின் அடித்தட்டில் வெந்த இட்லி. அதற்கு இட்லிப்பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடவும்.

இதுதான் முதல் ரவுண்டு. குறைந்தது மூன்று ரவுண்டாவது சாப்பிட்டால்தான் இட்லி சாப்பிட்டதன் பலன் தெரியும்.


திங்கள், 12 மார்ச், 2012

கல்யாண வீட்டில் நான் செய்த திருட்டு


ஒரு கப் காபியோ அல்லது ஒரு கப் பாயசத்துடன் வந்துவிடலாமே. " மெடிக்கல் ட்ரீட் மென்டில் இருக்கிறேன் கட்டாயபடுத்தாதீர்கள்" என்று சொல்லிவிடுங்கள். 


மேற்படி பின்னூட்டம் நான் கல்யாண விருந்துகளில் நடக்கும் சமையலைப் பற்றி எழுதிய பதிவுக்கு வந்திருந்தது.


கக்கு-மாணிக்கம் சொன்ன யோசனை நல்ல யோசனையாகவும் நடைமுறைக்கு ஒத்து வருவதாகவும் தோன்றியது. இதை உடனே பரிசோதித்துப் பார்க்க ஆவலுற்றேன்.


பழங்காலத்தில் கல்யாண மண்டபங்களின் அமைப்பு எப்படியென்றால் மண்டபத்தின் முகப்பில் வாசல் இருக்கும். அதன் வழியாகத்தான் வுருந்தினர்கள் எல்லோரும் உள்ளே போக முடியும். வெளியே வருவதென்றாலும் அதே வாசல் வழியாகத்தான் வரவேண்டும். ஆகவே கல்யாணக்காரர்களுக்குத் தெரியாமல் கல்யாணத்திலிருந்து வர முடியாது. அப்போது சாப்பிடாமல் வந்தால் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இப்போது கல்யாண மண்டபங்கள் மிகவும் முன்னேறியுள்ளன. உள்ளே போகும் வழியில் சென்று கல்யாணக்காரர்களிடம் ஆஜர் கொடுத்துவிட்டு உள்ளே போனால் ஜனங்கள் அமரும் ஹால். அங்கு இரண்டொருவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு உள்ளே போனால் டைனிங்க் ஹால். முன்பெல்லாம் விருந்தினர்களை சாப்பிட வாருங்கள் என்று யாராவது அழைப்பார்கள். இப்போதெல்லாம் அப்படி யாரும் அழைப்பதில்லை. சாப்பிடவேண்டுமென்றால் சாப்பிடலாம். இல்லையென்றால் அப்படியே வெளியில் வந்தால் கார் பார்க்கிங்க் வந்துவிடும். வண்டியை எடுத்துக்கொண்டு அப்படியே எஸ் ஆகிவிடலாம்.

நான் இந்த டெக்னிக்கைக் கடைப்பிடித்து அரை கப் டீ மட்டும் குடித்து விட்டு வந்தேன். மொத்தமாக அரை மணி நேரம்தான் ஆகியது. வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு விட்டுப் படுத்து விட்டேன். ஆரோக்யமாக இருந்தது.

இந்த யோசனை சொன்ன கக்கு-மாணிக்கத்திற்கு மிக்க நன்றி.


சனி, 10 மார்ச், 2012

களை எடுப்பது மகா குற்றம்.


தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது என்று மனேகா காந்தி என்று ஒருவர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இப்போது நெரு நாய்களைக் கொல்வதில்லை என்று சொல்கிறார்கள். தெருநாய்கள் பொது ஜனங்களுக்குத் தொந்திரவாக இருந்தால் சாத்வீக முறையில் அவைகளைப் பிடித்து அவைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து விட்டால் அப்புறம் தெரு நாய்கள் இல்லாமல் போய்விடும். இப்படி ஒரு திட்டம் இருக்கிறது

அதாவது கொக்கை எப்படி பிடிக்கிறது என்று ஒருத்தன் கேட்டானாம். அதற்கு மற்றொருவன் சொன்னானாம், நல்ல வெயில் அடிக்கும்போது கொக்கு தலையில் ஒரு கை வெண்ணெயை வைத்து விட்டால், அந்த வெண்ணை உருகி, கொக்கின் கண்ணை மூடிவிடும். அப்போது போய் கொக்கை லபக்கென்று பிடித்துக் கொள்ளலாம் என்றானாம். அது மாதிரிதான் இந்தத் திட்டமும்.

ஆனாலும் தெரு நாய்கள் வருடாவருடம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே தவிர குறைந்த மாதிரி காணோம். நாம்தான் சிந்தனையாளராயிற்றே? இந்தப் பிரச்சினை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது சில பல கருத்துக்கள் தோன்றின. உலக நன்மையை முன்னிட்டு அந்தக் கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

ஜீவகாருண்யம் என்பது உயிர்களைக் கொல்லாமல் இருப்பது. சரிதானே? அதனால்தானே தெரு நாய்களுக்காக மனேகா காந்தி போராட்டம் நடத்தினார்கள். எனக்குத் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பல மனிதர்கள் இந்த ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் மாமிசங்களை உண்கிறார்களே, அவர்களுக்கு அந்த மாமிசம் எங்கிருந்து கிடைக்கிறது? அந்த ஆடு மாடு கோழிகளையெல்லாம் கொல்லாமலே அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா அல்லது அவைகளைக் கொன்றுதான் அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா? அப்படி அவைகளைக் கொல்கிறார்கள் என்றால் அது ஜீவகாருண்ய அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா?

இந்த எண்ணம் தோன்றிய நாளிலிருந்து என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. இப்படியே தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது வேறொரு எண்ணம் தோன்றியது.

நான் ஒரு விவசாயப் பட்டதாரி. செடி கொடிகளுக்கும் உயிர் இருக்கிறது என்று நான் படிக்கும்போது சொல்லிக் கொடுத்தார்கள். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியானால் அந்த செடிகொடிகளைக் கொன்றுதானே நாம் சாப்பிடுகிற அரிசி, பருப்பெல்லாம் கிடைக்கிறது? எந்த உயிரானாலும் கொல்லாமலிருப்பதுதானே ஜீவகாருண்யம்? இதை ஏன் ஒருவரும் அந்த மனேக்காவுக்குச் சொல்லவில்லை?

சரி, இப்படி வைத்துக்கொள்வோம். அந்த செடிகளெல்லாம் இறந்த பிறகுதான் அதிலிருந்து அரிசி பருப்பெல்லாம் எடுக்கிறோம் என்று வைத்துக் கொளவோம். அப்போது வேறொரு எண்ணம் உதித்தது. உதாரணத்திற்கு நெல் பயிரை எடுத்துக் கொள்வோம். நெல் பயிர் வளரும்போது கூடவே வேறு செடிகளும் வளருகின்றன. விவசாயிகள் அவைகளை களைகள் என்று கூறி அவைகளைப் பிடுங்கி விடுகிறார்கள். அந்தக் களைச் செடிகள் உயிருள்ளவைதானே. அவைகளைப் பிடுங்கி எறிவது ஜீவகாருண்யத்திற்கு எதிரான செயல்தானே?

இதை ஏன் இதுவரை ஒருவரும் எதிர்த்து பிரசாரம் பண்ணவில்லை? இனிமேல் யாரும் களை எடுக்கக்கூடாது என்று ஏன் மனேக்கா காந்தி சொல்லவில்லை? இந்த எண்ணம் என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது. அதனால் நான் உடனடியாககளை பிடுங்க எதிர்ப்புகட்சி ஆரம்பித்து கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறேன். வெளிநாட்டுப் பணங்கள் அதிக அளவில் பெறும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மகத்தான ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

மேலும் நமது உயிருக்கும் மேலான பதிவுலகக் கண்மணிகளும் ஆதரவு கொடுத்தால், இந்தக் களை பிடுங்கா போராட்டம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி, உறுதி, உறுதி.