ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பத்ரிநாத்தில் இரண்டாவது நாள்.


மறுநாள் விடிந்தது. ஆனால் ரஜாயை விட்டு வெளியே வர ஒருவருக்கும் மனதில்லை. எப்படியோ ஒரு மாதிரி மனதைத் திடப்படுத்திக்கொண்டு எழுந்து, ஒரு காப்பி போட்டுக் குடித்தோம். அப்பறம்தான் உடம்பு சரியாக வேலை செய்ய ஆரம்பித்தது. எவ்வளவு சீக்கிரம் இந்த ஊரை விட்டுப் போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு விடலாம் என்று எல்லோருமாக ஏகோபித்த முடிவு எடுத்தோம். டிரைவர் ஒரு இடத்தில் மரவட்டை மாதிரி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி விவரம் சொன்னேன். அவருக்கும் அது சௌகரியமாகவே இருந்தது. ஏனெனில் பத்ரிநாத்திலிருந்து ஒரே நாளில் ஹரித்துவார் போக முடியாது. நடுவில் எங்காவது தங்கித்தான் போக வேண்டும். அதனால் சீக்கிரம் புறப்பட்டால் தங்கவேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போய் சேர்ந்து ரெஸ்ட் எடுக்கலாம். ஆகவே அவர் சந்தோஷமாக இந்த மாறுதலுக்கு ஒத்துக்கொண்டார்.

லாட்ஜ் நிர்வாகம் ஆளுக்கு ஒரு பக்கெட் வெந்நீர் கொடுத்தார்கள். எல்லோரும் குளித்து விட்டு, எதிரில் இருந்த ஒரு ஹோட்டலில் அபூர்வமாகக் கிடைத்த இட்லியையும் தோசையையும் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம். ரொம்ப வயசான, நடக்க முடியாதவர்களை ஒரு கூடையில் உக்கார வைத்து ஒரே ஆள் முதுகில் சுமந்து கொண்டுபோய் கோவிலில் இறக்குகிறான். இதற்கு போகவர முந்நூறு ரூபாய் சார்ஜ். படத்தைப்பார்க்க.


நாங்கள் நடந்தே சென்றோம். கோவிலில் காலை நேரம் என்பதால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. கோவிலுக்கு வெளியில் பூஜைக்காகத் தட்டு விற்கிறார்கள். கொஞ்சம் பூ, பட்டாணிக்கடலை, வெள்ளை கற்கண்டு மிட்டாய், இவ்வளவுதான் பூஜை சாமான்கள். இதை தலை மேல் வைத்துக்கொண்டு சாமிக்கு முன்னால் போய் பூஜாரியிடம் கொடுத்தால், பூஜாரி அதை வாங்கி சாமியின் மேல் வீசுகிறார். பிறகு அந்தத் தட்டில் அவர் முன்னால் இருக்கும் தட்டிலிருந்து கொஞ்சம் மிட்டாயும் கடலையையும் நம் தட்டில் போட்டுத் திருப்புத் தருகிறார். அதுதான் பத்ரிநாதரின் பிரசாதம்.

தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது என் சகோதரிக்கு முன் தினம் போலவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. டாக்சி டிரைவருக்கு போன் போட்டு காரை வரவழைத்து காரில் ரூம் திரும்பினோம்.

{ஒரு முக்கிய குறிப்பு: இப்போது பரவலாக செல்போன் உபயோகிப்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக டாக்சி டிரைவர்கள் அனைவரும் செல்போன் வைத்திருப்பார்கள். நீங்கள் எங்காவது டாக்சியில் சென்றால் முதல் வேலையாக டாக்சி டிரைவரின் செல்போன் நெம்பரை வாங்கி உங்கள் செல்போனில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் உபயோகமாக இருக்கும். }

ரூமைக்காலி செய்துவிட்டு பத்ரிநாத்துக்கு குட்பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம். ஆனால் கொஞ்சதூரம் வந்ததும் எல்லா வண்டிகளும் நின்றுகொண்டிருந்தன. என்னவென்றால்கேட்திறக்கவில்லை என்றார்கள். இந்த கேட் முறை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். பத்ரிநாத்திலிருந்து ஜோஷிமட் வரை ஒரு வழிப்பாதைதான். மாற்றி மாற்றிதான் வண்டிகளை விடுவார்கள். நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.





சுமார் 11½ மணிக்கு கேட் திறந்தார்கள். நாங்கள் புறப்பட்டு ஜோஷிமட் வழியாக கர்ணப்பிரயாக் வந்து சேர்ந்தோம். வழியெங்கிலும் பாதையை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. பாதையோரத்தில் இருக்கும் பாறைகளை வெடிவைத்து உடைக்கிறார்கள். உடனேயே அந்த பாறை துகள்களை இயந்திரங்கள் மூலமாக அப்புறப்படுத்துகிறார்கள். இதற்கு ஓரிரண்டு மணி நேரம் பிடிக்கிறது. அது வரை எல்லா வண்டிகளும் நிற்க வேண்டியதுதான். அப்பொழுதும் வண்டிகள் ரோட்டின் ஓரமாகவே, அதாவது கீழே விழுந்தால் அதலபாதாளம் என்ற நிலையிலேயேதான் செல்ல வேண்டியிருக்கிறது.

கர்ணப்பிரயாக் - ருத்ரப்பிரயாக் ஹைவே பாகீரதி நதி ஓரமாகவே வருகிறது. இந்த ரோட்டிலும் பாதை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. அந்தப்பாதையில் வந்த ஒரு வழக்கமாக வரும் ரூட் பஸ் பாதை ஓரத்தில் வரும்போது ஸ்லிப் ஆகி நாற்பது பயணிகளுடன் ஆற்றில் விழுந்து விட்டது. அங்கெல்லாம் ஆற்றில் இருபது ஆடி தண்ணீர் சாதாரணமாக ஓடும். பஸ்ஸையும் காணவில்லை. பஸ்ஸில் இருந்தவர்களையும் காணவில்லை. நாங்கள் கர்ணப்பிரயாக் வரும்போது இந்த காரணத்தினால் பொது ஜனங்கள் ரோடு பந்த் செய்துகொண்டிருந்தார்கள். எங்கள் வண்டியை வேறொரு மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டார்கள். இந்தப்பாதை ஆற்றுக்கு மறு பக்கம் இருக்கிறது. சாதாரண ரோடு என்பதால் அகலம் குறைவு. எப்பொழுது வேண்டுமானாலும் பஸ்ஸைத் தொடர்ந்து நாங்களும் பாகீரதியின் மடிக்குப் போய்ச் சேரலாம் என்கிற பயம் ஹரித்துவார் வந்து சேருமட்டும் இருந்தது.

எப்படியோ ஒரு வழியாக ருத்ரப்பிரயாக் வந்து சேர்ந்தோம். ஊரிலிருந்து ஒருக்குப்புறமாக ஒரு நல்ல லாட்ஜ்ஜுக்கு டிரைவர் எங்களைக் கூட்டிக் கொண்டுபோய் தங்க வைத்தார். ரூம்கள் சுத்தமாக இருந்தன. சாப்பிட்டுவிட்டு படுத்தோம். தூக்கத்தில் நாங்கள் எல்லோரும் ஆற்றில் விழுவதாகவே கனவு வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலையில் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு (டிபன் என்ன, மாத்திரைகள்தான்) புறப்பட்டு மாலை ஐந்து மணி சுமாருக்கு ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். ஒரு லாட்ஜ் பிடித்து தங்கினோம்.

தொடரும்

சனி, 16 அக்டோபர், 2010

பல்மொனெரி எம்பாலிசம் (Pulmonary Embolism)



டாக்டர்களைத்தவிர
மற்றவர்கள் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பது சந்தேகம். இது ஒரு அபூர்வமாக வரும் ஒரு நோய். நோய் என்று சொல்வது கூடத் தவறு. ஒரு மருத்துவச்சிக்கல் என்றுதான் கூறவேண்டும்.

கெண்டைக்காலில் ஏதாவது அடிபட்டு இருந்தால் ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உண்டு. அபூர்வமானது என்றாலும் இதைப்பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் தேவை. கருவுற்று இருக்கும் பெண்மணிகளுக்கும் பிரசவத்திற்கு முன்போ, பின்போ இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

என் நண்பர் ஒருவரின் மாப்பிள்ளை போன வாரம் ஒரு நாள் தன் மனைவியுடன் ஸ்கூட்டரில் போகும்போது குறுக்கே ஒரு கார் எதிர்பாராமல் வந்ததால் சடன்பிரேக் போட்டு சறுக்கி விழுந்து விட்டார். சாதாரணமாக ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி விபத்து ஏற்பட்டிருக்கும். நண்பரின் மாப்பிள்ளை பக்கத்திலுள்ள ஒரு பெரிய தனியார் ஆஸபத்திரிக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கெண்டைக்காலின் எலும்பில் சின்னதாக இருக்கும் பிஃபியாஎன்ற எலும்பில் ஒரு லேசான கீறல். அதற்கு கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவருடைய மனைவிக்கு சாதாரண, லேசான காயங்கள் மட்டும்தான். அதற்கும் மருந்து போட்டு அனுப்பி விட்டார்கள்.

அடுத்த நாள் நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். மனுஷன் நன்றாக உற்சாகமாக இருந்தார். ஒரு மாதம் என்னைப் படுக்க வைத்து விட்டார்கள் என்று தமாசு பண்ணினார். மூன்றாவது நாள் காலையில் திடீரென்று மயக்கம் போட்டுவிட்டார் பேச்சுமூச்சு இல்லை. நாடித்துடிப்பு நின்று விட்டது. கைகால்கள் சில்லென்று ஆகிவிட்டன. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆஸப்த்திரிக்குப் போனார்கள். இதற்கு ஏறக்குறைய அரை மணி நேரம் ஆகி விட்டது.

எமர்ஜென்சி வார்டுக்குப் போனவுடன் ட்ரீட்மென்ட் கொடுத்து இருதயத்தை துடிக்க வைத்து விட்டார்கள். அதுவே பெரிய சாதனை. அரை மணிநேரம் இயங்காமல் இருந்த இருதயம் இயங்க ஆரம்பித்தவுடன் நுரையீரலுக்கும் வென்டிலேட்டர் என்ற ஒரு மிஷினைப் பொருத்தி நுரையீரலையும் ஒழுங்குபடுத்தினார்கள். இருதயம் தொடர்ந்து வேலை செய்ய பலவிதமான ஊசிகள். நுரையீரல் வேலை செய்ய மிஷின். மூளையை இயங்கச்செய்ய பலவித ஊசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால் மூளை தனியாக இயங்கவில்லை. ஏனென்றால் மூளை இயங்கினால் நுரையீரல் தானே இயங்கவேண்டும். அது நடக்காததால் மூளை இயக்கம் இன்னும் வரவில்லை என்று டாக்டர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள்.

இது ஒரு சிக்கலான சூழ்நிலை. பணம் தண்ணீராக செலவாகிறது. மனுஷன் எப்போது சுய நினைவுக்கு வருவார் என்று சொல்லமுடியாத நிலை. என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.

கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!