சனி, 31 ஜூலை, 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 2

ஆயத்தங்கள்.
இந்த தொடர் பதிவுகளில் எழுதும் விஷயங்கள் இந்த மாதிரி சுற்றுலா செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய சொந்த அனுபவங்களைப் பற்றித்தான் அதிகமாக எழுதியிருக்கிறேன். என் கருத்துப்படி அதுதான் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சில விவரங்கள் அதிகப்படியானதாகத் தோன்றலாம். முன்பின் எந்த அனுபவமும் இல்லாதவர்களும் தெரிந்து கொள்ளவே அந்த விவரங்கள்.
சுற்றுலா செல்வதில் முக்கியமானது முன்னேற்பாடுகள். போகும் இடத்தின் விவரங்கள், தங்கும் இடங்கள், வாகன வசதிகள், மொழி தெரிந்த ஒருவர். அங்கு கிடைக்கும் உணவுகள் ஆகியவை பற்றி நன்கு தெரிந்திருக்கவேண்டும். தங்குமிடங்களுக்கு கூடியமட்டும் முன்பதிவு செய்தல் நலம். குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் முன்பதிவு செய்யாவிடில் தங்கும் விடுதிகள் கிடைப்பது கடினமாகிவிடும்.
அடுத்தது: கொண்டு செல்லும் சாமான்கள். சிலவற்றை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.(சோப்பு, சீப்பு, முதலியன) சில, போகும் இடங்களில் கிடைக்காமல் போகலாம். (மருந்துகள், உடைகள், முதலியன). இவைகளைப் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது: மனநிலை. நம் வீட்டில் இருக்கும் எல்லா சௌகரியங்களும் போகும் இடத்திலும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இதில் ஏமாற்றம் ஏற்பட்டால் சுற்றுலா முழுவதும் வீணாகிவிடும். எதிர்பாராத பல அசௌகரியங்கள் ஏற்படலாம். அவைகளை அனுசரித்துப் போகவேண்டும். அப்படியில்லாமல் அந்த அசௌகரியங்களைப் பற்றியே குறைப்பட்டுக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் வேதனையாக இருக்கும்.
சுற்றுலா செல்லும்போது யாராவது ஒருவர்கொஞ்சம் அனுபவம் உள்ளவர் தலைமைப்பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கும் திறன் அவரிடம் இருக்கவேண்டும். அவர் எடுக்கும் முடிவுகளை எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி கலந்தாலோசித்து இந்த விஷயங்களில் முடிவு எடுத்தோம். நான்தான் லீடர். புறப்படும் நாளன்று எல்லா சாமான்களையும் மூட்டை கட்டி ரெடியாக வைத்தோம். ஒரு கால் டாக்சி ஏற்பாடு செய்து அதில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். (இவ்வளவு செலவு செய்கிறீர்கள், ஏன் கஞ்சத்தனமாக கால் டாக்சி பிடித்தீர்கள், முழு டாக்சியாகவே பிடித்திருக்கக் கூடாதா என்பவர்களுக்கு பதில் இல்லை)
விமானநிலைய நடைமுறைகள் புதிதாகப் போகிறவர்களுக்கு புரிவது கொஞ்சம் கடினம். என்னால் முடிந்தவரையில் எளிமையாக விளக்க முயலுகிறேன்.
1.   டிக்கெட்: இது பல வழிகளில் கிடைக்கிறது. இன்டர்நெட். டிராவல் ஏஜெண்டுகள், ஏர்லைன்ஸ் நிறுவன நேரடி விற்பனை கவுண்டர் என்று பல இடங்களில் வாங்கலாம். வாங்கும் நாள், ஏர்லைன்ஸ் கம்பெனி இவைகளைப்பொறுத்து டிக்கெட்டின் விலை வித்தியாசப்படும். ஒரே பயணத்தில் பக்கத்து சீட்காரருக்கு டிபன் கொடுப்பார்கள், ஆனால் உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் நீங்கள் வாங்கிய டிக்கெட் மலிவானது. எது எப்படியிருந்தாலும் டிக்கெட்டை வீட்டில் வைத்துவிட்டு விமான நிலையம் சென்றால் தலைகீழாக நின்றாலும் உங்களை பறக்க அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல் பணமும் முக்கியம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவைகளையும் கொண்டு செல்லலாம்


2.   லக்கேஜ்: விமானக் கம்பெனிகள் இவற்றை இரண்டாகப் பிரித்திருக்கின்றன. விமானத்தின் லக்கேஜ் கேபினில் போடும் மூட்டைமுடிச்சுகள் ஒருவகை. இவை ஒரு டிக்கெட்டுக்கு 20 கிலோ மட்டும் அனுமதிக்கப்படும். அதற்கு அதிகமானால் எடைக்குத்தகுந்த மாதிரி அதிகக் கட்டணம் கட்டவேண்டும். ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இதற்குசெக்இன் லக்கேஜ்என்று பெயர். இந்த மூட்டைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்காகவும் நல்ல பூட்டுக்களுடனும்  இருப்பது நலம். ஏனென்றால் விமான நிலைய ஊழியர்கள் இவைகளை கொஞ்சம் கரடுமுரடாக கையாளுவார்கள். இந்த லக்கேஜ்களில் டைம் பாம்ப், வெடிகுண்டுகள், ஜெலடின் குச்சிகள் போன்றவைகளையோ அல்லது அது மாதிரி தோற்றம் உள்ளவைகளையோ எடுத்துச்சென்றால் உங்கள் பயணம் அரோகராதான்.

அடுத்த வகைகேபின் லக்கேஜ்எனப்படும் பயணிகள் தங்களுடனேயே எடுத்துச்செல்லக் கூடியவை. இவை சுமார் 10 கிலோவிற்கு மேற்படாமல் சிறிய சூட் கேஸாகவோ அல்லது ரெக்ஸின் பேக்காகவோ இருக்கலாம். பயணிகளின் சீட்டுக்கு மேல் இருக்கும் லக்கேஜ் கேபினில் வைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்வது நல்லது. இந்த வகை பைகளில் எந்த விதமான ஆயுதங்களையும் கொண்டு செல்லக்கூடாது. கத்தரிக்கோல், ஸ்க்ரூ டிரைவர், நெயில் கட்டர். கத்திகள், பெரிய ஊசிகள், முதலானவைகளைக் கொண்டு செல்லக்கூடாது. ஊறுகாய், ஜாம், சமையல் பொடிகள், தின்பண்டங்கள் ஆகியவைகளும் இதில் அடங்கும். தெரியாமல் கொண்டு சென்று ஸகேனில் தெரிந்தால் அவைகள் பறிமுதல் செய்யப்படும். அய்யோ, அப்பா என்று கூக்குரல் போட்டால் ஒன்றும் நடக்காது.

இது தவிர பெண்கள் ஒரு சாதாரண லேடீஸ் பேக் கொண்டு செல்லலாம். ஆண்கள் ஒரு லேப்டாப் கொண்டு செல்லலாம்.
இந்த சாமான்கள் அனைத்தும் மெஷின் மூலம் ஸ்கேன் செய்யப்படும். ஆட்சேபணைக்குரிய எந்தப்பொருள் இருந்தாலும் வம்புதான். ஆகவே முதலிலேயே ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

தொடரும்….

வெள்ளி, 30 ஜூலை, 2010

பதிவு தாமதம்-மன்னிக்கவும்

உடல் நிலை சிறிது மோசமாக இருப்பதால் பதிவுகள் தாமதப்படுகின்றன. எல்லோரும் மன்னிக்கவும்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

ப.ரா. மன்னிப்பாராக


சும்மா தமாசுங்க, ப.ரா.

படம் நல்லா இல்லைன்னா சொல்லுங்க, ஒடனே தூக்கிடறனுங்க.


Posted by Picasa

ஒரு முக்கிய சந்திப்பு

என்னுடைய கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரையை முடித்துக்கொண்டு நேற்று இரவுதான் கோவை திரும்பினேன். யாத்திரை பற்றி விரிவாக எழுதுமுன் ஒரு முக்கிய செய்தி.

யாத்திரையின்போது இரண்டு பதிவர்களைச் சந்தித்தேன். திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் முன்னேயே ஏற்பாடு செய்திருந்தபடி டில்லி ரயில்வே ஸ்டேஷனில் பிளம்ஸ் பழங்களுடன்  அன்புடன் வந்து சந்தித்தார்.அவருடன் ஸ்டேஷனிலேயே பிளாட்பாரத்தில் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டோம். வேறு வழியில்லை. கூட்டமோ கூட்டம். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எதிர்பாராமல் இன்னொரு பதிவரை ஹரித்துவாரில் பார்த்தேன். ஆனால் அவர் என்னைப் பார்க்கவில்லை. அதனால் ஒரு போட்டோ மட்டும் எடுத்தேன். படத்தைப் பார்க்கவும். படத்தை இந்தப்பதிவில் போட இயலவில்லை. அவர் மேல் இருக்கும் மரியாதை காரணமாக தனிப்பதிவாகப் போட்டிருக்கிறேன்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

இந்தச் செய்தியைப் படிக்கவும்.

நன்றி: தினத்தந்தி

பிரபல நடிகை சத்யப்பிரியா சென்னை தியாகராயநகர் ராமானுஜர் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக தனது காரில் வந்தார்.


ஓட்டல் வாசலில் காரில் காத்திருந்தபோது அவரது கவனத்தை திசை திருப்பி காரில் வைத்திருந்த அவரது கைப்பையை மர்ம ஆசாமி ஒருவன் கொள்ளையடித்து சென்று விட்டான். ரோட்டில் பத்து ரூபாய் நோட்டுக்களை சிதற விட்டு, அந்த ரூபாய் நோட்டுகள் உங்களுடையதா என்று மர்ம ஆசாமி ஒருவன் கேட்டான். உடனே அந்த ரூபாய் நோட்டுகளை காரில் இருந்து இறங்கி நடிகை சத்யப்பிரியா பொறுக்கிக்கொண்டு இருந்தார். (இதைத்தான் "பொறுக்கி" என்று கூறுவது)


அப்போது அந்த மர்ம ஆசாமி சத்யப்பிரியாவின் காரில் இருந்த அவரது கைப்பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான். அந்த கைப்பைக்குள் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம், வங்கி கிரெடிட் கார்டுகள், வங்கி ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் டிரைவிங்க் லைசன்சும் இருந்த்தாக நடிகை சத்யப்பிரியா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

எனக்குத் தெரிந்து இந்த டெக்னிக் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் திருந்துவதாகக் காணவில்லை.

வாழ்த்துக்களுக்கு நன்றி

என்னுடைய கேதார்-பத்ரி யாத்திரைக்கு வாழ்த்துக்கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. முடிந்த வரையில் போட்டோக்கள் எடுத்துவர முயற்சிக்கிறேன்.

தனித்தனியாக பின்னூட்டங்களுக்கு பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 1

முன்னுரை
 
நான் நண்பர்களுடன் சார்தாம் யாத்திரை போயிருக்கிறேன். “சார்தாம் என்பது யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு க்ஷேத்திரங்களைக் குறிக்கும். இந்த யாத்திரைக்குப் போகிறவர்கள் முதலில் ஹரித்துவாருக்குப் போய் அங்கிருந்துதான் இந்தக் கோயில்களுக்குப் போகவேண்டும். கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இரண்டு கோயில்களுக்கு மட்டும் போகிறவர்களும் உண்டு. நான் என் மனைவியுடனும் தங்கையுடனும் இந்த இரண்டு கோயில்களுக்கு மட்டும் போய் வரலாம் என்று பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது என் சம்பந்திகள் இருவரும் எங்களையும் கூட்டிக்கொண்டு போய் இந்த கோயில்களைக் காட்டக்கூடாதா என்று கேட்டார்கள். சரி. ஐந்து பேருமாகப் போகலாம் என்று முடிவு செய்தோம்.
எப்படிப் போவது, எங்கெங்கு போவது என்று பேசும்பொழுது, ஹரித்துவார், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், டில்லி, ஆக்ரா என்ற இந்த ஊர்களுக்குப் போவது என்று முடிவாயிற்று. எப்படி போகலாம் என்று பேசினபோது, என் மாப்பிள்ளை, உங்களைத்தவிர இவர்கள் யாரும் ஏரோப்பிளேனைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. நீங்கள் எல்லோரும் டில்லி வரையில் ஏன் பிளேனில் போகக்கூடாது என்றார். நாங்கள் பொருளாதார ரீதியில் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆபீஸ் செலவில் நான் பிளேனில் போனதைத்தவிர, சொந்தச் செலவில் குடும்ப அங்கத்தினர்களை எங்கும் பிளேனில் கூட்டிக்கொண்டு போகமுடியும் என்று கனா கூட கண்டதில்லை. செலவு நிறைய ஆகுமே என்கிற என்னுடைய ஆட்சேபணைக்கு, மாப்பிள்ளை, அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள், நான் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறேன், தேதிகளை முடிவு செய்து விட்டு சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.
சரி. பிறகென்ன கவலை என்று டூர் புரொக்ராம் போட்டோம். கோவையிலிருந்து டில்லி, ஹரித்துவார், கேதார்நாத், பத்ரிநாத் பார்த்து வர பதினைந்து நாள் டூர். போகும்போது டில்லி வரை பிளேன், வரும்போது ரயில். டில்லியிலிருந்து ரிஷிகேஷ் போகவர ரயில். இந்த புரொக்ராம் ஜூலை 10ம் தேதி புறப்படுவதாகப் போட்டு தேதிகளை மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டேன். இது நடந்தது ஏப்ரல் மாதம். மாப்பிள்ளை டிக்கட் வாங்குவது, என் மாதிரி ரயில்வே ஸ்டேஷன் போய் க்யூவில் நின்று வாங்குவதெல்லாம் கிடையாது. இன்டர்நெட்டில்தான் எல்லா டிக்கட்டுகளும் வாங்குவார். நான் தேதிகளைக் கொடுத்த மறுநாள் மாமா, டிக்கெட் எல்லாம் புக் பண்ணிவிட்டேன். பிளேன் டிக்கட் சீப்பாக கிடைத்தது. அதனால் டில்லிக்கு போகவர இரண்டு வழிக்கும் சேர்த்தே பிளேன் டிக்கட் போட்டுவிட்டேன். அங்கிருந்து ஹரித்துவார் போகவர .ஸி. கிளாஸில் டிக்கட் போட்டாய் விட்டது. பிளேனில் சாப்பாட்டுக்கு சொல்லிவிட்டேன். டில்லியில் தங்குவதற்கும், ஆக்ரா போய் வருவதற்கும், டில்லி லோக்கல் சைட்சீயிங்க் ட்ரிப்புக்கும், ஸ்டேஷனிலிருந்து ஹோட்டலுக்கு வருவதற்கும், ஹோட்டலிலிருந்து ஏர்போர்ட் போவதற்கும் வேண்டிய எல்லா புக்கிங்கும் செய்தாய்விட்டதுஎன்று சொல்லி எல்லா புக்கிங்க் பிரின்ட்களையும் கொடுத்து விட்டார். ஆஹா, மாப்பிள்ளையினுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம் என்று மெச்சிக்கொண்டேன். ஆகக்கூடி 15 நாள் டூர் 13 நாட்களாகக் குறைந்து விட்டது.
என் பங்குக்கு நான் ஹரித்துவாரிலிருந்து கேதார்நாத், பத்ரிநாத் போகவர ஹரித்துவாரில் ஒரு ஏஜன்ட்டை இன்டர்நெட்டில் பிடித்து ரேட் பேசி, அட்வான்ஸும் அனுப்பி விட்டேன். ஹரித்துவாரில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு ஐயப்பன் கோவில் இருக்கிறது. இதற்குச்சேர்ந்து பயணிகள் தங்குவதற்கு ரூம்களும் உண்டு. அந்த விலாசம் இன்டர்நெட்டில் கிடைத்தது. அவர்களுக்கு நாங்கள் வரும் தேதியைக்குறிப்பிட்டு ஒரு தபால் எழுதிப்போட்டிருக்கிறேன். அங்கு போய்த்தான் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு நிறைய லாட்ஜுகள் இருப்பதால் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆக எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்தாகிவிட்டது.
இதற்கிடையில் இந்த யாத்திரைக்கு சமீபத்தில் போய் வந்த ஒரு பார்ட்டியைச் சந்தித்து அங்குள்ள நடைமுறைகளை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். அவர்களிடமிருந்து முதலாவதாகத் தெரிந்து கொண்டது, டில்லியில் வறுத்தெடுக்கும் வெயில், கேதார்-பத்ரியில் எலும்பை உறைய வைக்கும் குளிர், இந்த இரண்டிற்கும் தயாராகப் போகவேண்டும் என்பதுதான். இரண்டாவது நம்ம ஊர் சாப்பாடு அங்கே மருந்துக்கு கூடக் கிடைக்காது என்பதாகும். மூன்றாவது அங்கே அனைத்து உணவுகளும் கடுகு எண்ணையில் செய்கிறார்கள் என்பதாகும். கடுகு எண்ணையைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு டிப்ஸ். அந்த எண்ணை காயும்போது வரும் வாசனை, அதாவது நாற்றம் (நாத்தம்), நம்ம ஊர் குப்பைத்தொட்டியில் கூட வராது. கொஞ்ச நேரம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தால் வாந்தி வந்துவிடும்.
இந்த விபரங்களை வீட்டில் எல்லோருக்கும் எடுத்துச்சொல்லி அவர்களை ரொட்டிவாலாக்களாக மாற தயார் செய்தேன். குளிரைத்தாங்க ஸ்வெட்டர், மப்ளர், கிளவுஸ், குல்லாய், சாக்ஸ், சால்வை இத்தியாதிகள் ஆளுக்கு ஒரு செட் தயார் செய்தோம். வெயிலுக்காக ரீஹைட்ரேஷன் சால்ட் தயார்செய்தேன். இப்படியாக எல்லா முஸ்தீபுகளும் ரெடியாகின.
புறப்படும் நாளும் வந்தது.