சனி, 24 அக்டோபர், 2009

பதிவுலக நாற்றம்-2

கடந்த சில நாட்களாக வரும் சில பதிவுகளைப்படித்தால் இவர்கள் படித்த, அறிவு ஜீவிகள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் கொடுத்துக்கொண்டு இப்படி எழுத எப்படி முடிகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன் பதிவுலக நாற்றம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது வெறும் கூவம் நாற்றம் மட்டும்தான் இருந்தது. இப்போது ''பிண நாற்றம்'' வீசுகின்றது.

இந்த பதிவுகளைப் பார்க்கும்போது எனக்கு புரிந்தவை என்னவென்றால் பதிவர்கள் வழக்கமாக சந்திப்பது தாகசாந்தி வசதி இருக்கும் ஹோட்டல்களில் மட்டுமே. பிரபல பதிவராவது எப்படி என்ற என்னுடைய பதிவில் வேடிக்கையாக ''பதிவர் என்றால் 5 ரவுண்டிற்குப்பிறகும் ஸ்டெடியாக நிற்கவேண்டும்'' என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையிலேயே பதிவர்கள் இப்படி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

பதிவர்கள் பொது சமாசாரங்களைப்பற்றி எழுதுவார்கள் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். அது மிகத்தவறு என்று இப்போது புரிந்து விட்டது. அடுத்த பதிவரைப்பற்றி தனி மனித வசைகள், அதுவும் நாகரிகமற்ற வார்த்தைகளைப்பயன்படுத்தி எழுதுவது எந்த ரகத்தில் சேரும் என்று புரியவில்லை. ஒருகால் நான் ஒரு பைத்தியக்காரனாக இருக்கிறேனோ என்னமோ தெரியவில்லை. அதைத்தவிர அந்தப்பதிவரின் குடும்ப நபர்களைப்பற்றி எழுதுவது இன்னும் கேவலம். இன்னும் வேடிக்கை என்னவென்றால் அப்படி மோசமாக எழுதப்பட்ட பதிவரை நேரில் சந்திப்பது.

குழாயடிச்சண்டையை நான் நேரில் பார்த்ததில்லை. கேள்வி ஞானம்தான். அங்குதான் பெண்கள் ஒருவருக்கொருவர் வாயில் வரக்கூடாத வார்த்தைகளினால் ஏசிக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பதிவுலக வசைகள் அதையும் மிஞ்சி இருக்கின்றன. பதிவுலகம் எங்கு போய் நிற்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-8)




இப்படியாக உங்கள் பதிவை பிரபல பதிவாக அறிமுகப்படுத்தியாகி விட்டது. அடுத்த வேலை விளம்பரங்களை பிடிக்க வேண்டியதுதான். அவைகள் உங்களைத்தேடியும் வரும். அல்லது நீங்களே தேடிப்போகவேண்டி வரலாம். எப்படியோ கணிசமான விளம்பரங்களைப்படித்துப்போட்டு விட்டீர்களானால் உங்கள் பேங்க் பேலன்ஸும் அதிகரிக்கும்.
ஆனாலும் தொடர்ந்து உங்கள் பதிவை முன்னிலையிலேயே வைத்திருக்க நீங்கள் கொஞ்சம் உழைக்க வேண்டும். பிற பதிவுகளைப் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருங்கள். அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகளை கொஞ்சம் மாற்றி பதிவு போடவேண்டியதுதான்.
நீங்கள் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முற்றும்.


செவ்வாய், 20 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-7)




டிஸ்கி* - இந்த பகுதியில் கூறப்போகும் விஷயங்கள் மிகவும் sensitive ஆனவை. அவைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். முக்கியமாக இவைகளின் ரகசியம் கண்டிப்பாக காக்கப்படவேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.
• டிஸ்கி = Disclaimer
• இதை இன்னும் பொடி எழுத்தில் போடவேண்டும். என்னுடைய கம்ப்யூட்டரில் அதற்கு வசதி இல்லை.

அடுத்த்தாக கவனிக்க வேண்டியது ‘’வருகை எண்ணிக்கை’’. இந்த எண்ணிக்கை கூடினால்தான் உங்கள் தளத்தின் மதிப்பு கூடும்.

இதற்கு நீங்கள் முதலில் ஒரு வருகைப்பதிவு விட்ஜெட்டை உங்கள் தளத்தில் நிறுவ வேண்டும். இது மிகவும் சுலபம். ஏதாவது ஒரு தளத்தில் இதை நிறுவியிருப்பார்கள். அதை அப்படியே லிங்க் கண்டுபிடித்து உங்களுடைய தளத்தில் ஏற்றவேண்டியதுதான்.
பிறகு இந்த வருகைப்பதிவிற்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதத்தில் ஒரு லட்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளுங்கள். முடியுமா என்று மலைக்காதீர்கள்! முயன்றால் முடியாதது உலகில் ஒன்றும் இல்லை. உங்கள் திறமையின் பேரிலும் உங்கள் குருவின் மேலும் நம்பிக்கை வையுங்கள். நினைத்தது நடக்கும்.
உங்களுக்கு ஓரளவாவது கணக்குப் போட வரும் என்று நினைக்கிறேன். பின்வறும் கணக்கை உன்னிப்பாக கவனிக்கவும். உங்களிடம் கைவசம் 108 தளங்கள் இருக்கின்றன அல்லவா? ஒவ்வொரு தளத்திலிருந்தும் உங்கள் பிரபல தளத்தை தினம் 10 முறை ஹிட் செய்யவேண்டும். ஆக ஒரு நாளில் உங்கள் தளத்திற்கு 1080 ஹிட்கள் கணக்காகி விட்டது. இனி நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம். மாத்தஃதிற்கு ஏறக்குறைய 32400 வரும். மூன்று மாத்தஃதில் 97200 ஹிட்கள். இது போக வழியில் போகும் சிலரும் போகிறபோக்கில் வேடிக்கை பார்க்க வருவார்கள். எல்லாமாகச்சேர்ந்து சுலபமாக ஒரு லட்சம் இலக்கை அடைந்துவிடலாம்.
உடனே ஒரு பெரிய பதிவு போட்டு ‘’ஆஹா, மூன்று மாதத்தில் ஒரு லட்சம் வருகை. பாருங்கள், பாருங்கள், இந்த தளத்தின் சாதனை’’ என்று டாம் டாம் போடவேண்டியதுதான்.
மீதி அடுத்த பதிவில்.. (அடுத்ததே இந்த வரிசையில் கடைசி பதிவு.)

திங்கள், 19 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? தொடர்ச்சி


நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-6)



டிஸ்கி* - இந்த பகுதியில் கூறப்போகும் விஷயங்கள் மிகவும் sensitive ஆனவை. அவைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டும். முக்கியமாக இவைகளின் ரகசியம் கண்டிப்பாக காக்கப்படவேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.
·          டிஸ்கி = Disclaimer
·          இதை இன்னும் பொடி எழுத்தில் போடவேண்டும். என்னுடைய கம்ப்யூட்டரில் அதற்கு வசதி இல்லை.
ஆகவே உங்கள் தளத்தை 108 பேர் பின்பற்றுகிறார்கள். மேலும் பலர் சேர வாய்ப்பு உண்டு.
இனி தேவை பின்னூட்டங்கள்.
இதில் கொஞ்சம் கவனம் தேவை. இதற்காக ஒரு பதிவர் சந்திப்பு போட்டால் உத்தமம். ஒரு மூத்த பதிவரின் அறிவுரைகள் மிகவும் உதவியாயிருக்கும். என்னைக்கூப்பிட்டாலும் வருகிறேன். என்ன கொஞ்சம் செலவு அதிகமாகும். பரவாயில்லை. பின்னால் வசூல் ஆகிவிடும்.
இந்த சந்திப்பில் யார் யார் பின்னூ போடுவது, அதன் போக்கு எப்படியிருக்க வேண்டும் என்பதையெல்லாம் பேசி முடிவெடுக்க வேண்டும். பொதுவாக பதிவை விட பின்னூக்கள்தான் காரசாரமாக இருக்கவேண்டும். முதலில் நீங்களே பின்னூ போடலாம். அதுதான் உங்களுக்கு நவதளங்கள் இருக்கிறதல்லவா? அவைகளிலிருந்து போடவேண்டியதுதான். உங்கள் பதிவின் செய்திகளுக்கும பின்னூட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் தேவையில்லை. இங்கே எதைப்பற்றியும், யாரைப்பற்றியும், என்ன வேண்டுமென்றாலும் எழுதிக்கொள்ளலாம். யாரும் உங்களைக்கேட்க முடியாது. ஏனென்றால் பின்னூட்டங்களுக்கும் பதிவருக்கும் சட்ட ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே யாரும் உங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுக்க முடியாது.
யாரையாவது வசை பாடவேண்டுமென்றால் பின்னூட்டங்கள் பாதுகாப்பானது. அவ்வப்போது உங்களுடைய நண்பர்களையும் பின்னூ போடச்சொல்லுங்கள். அவ்வளவுதான். உங்கள் பதிவின் மதிப்பு மளமளவென்று ஏறிவிடும். 





நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா?
(பாகம்-5)



பகுதி 2 ல் கூறிய விஷயங்களை நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது உங்கள் பதிவு பிரபலமாக மூன்று விஷயங்கள் மிகமிக அவசியம். 1. பின்பற்றுவோர், 2. பின்னூட்டமிட்டவர்கள், 3. வருகை தந்தோர்.

இந்த மூன்று அளவுகோல்கள்தான் உங்கள் பதிவை பரபலப்படுத்தப் போகின்றன. இந்த அளவுகளை அதிகரிப்பது எப்படியென்று ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

1.பின்பற்றுவோர். நீங்கள் நல்ல சிஷ்யனாக இருந்தால் நான் முதல் பகுதியில் கூறியவற்றை ஞாபகம் வைத்திருப்பீர்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்னொரு முறை கூறுகிறேன். உங்களையும் உங்கள் நண்பர்கள் பத்து பேரையும் தலா பத்து பத்து தளங்கள் அதாவது பிளாக்குகள் ஆரம்பிக்கச் சொல்லியிருந்தேன். ஆக மொத்தம் 110 தளங்கள். அவைகளில் நீங்கள் பிரபலப்படுத்தபுபோகும் ஒரு தளம் (தளம் 1 என்று வைத்துக்கொள்வோம்) போக மீதி 109 தளங்கள். அவைகளில் ஒரு தளத்தை அழித்து விடுங்கள். மீதி 108 தள்ங்கள். நல்ல சாஸ்திரோக்தமான எண்ணிக்கை. நீங்கள் நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்கும் என்பதற்கு இந்த நம்பர் அடையாளமாக அமைந்து விட்டது. சரி, அவைகளுக்கு இப்போது வேலை வந்து விட்டது.

இந்த 108 தளங்களில் இருந்து தனித்தனியாக தளம் 1 க்கு சென்று தளம் 1 ஐ பின்பற்றுவதாக குறியிடுங்கள். ஆச்சா! இப்போது தளம் 1 ஐ follow செய்பவர்கள் 108 பேர் ஆகிவிட்டது. ஆனால் ஒன்று. இந்த வேலையை ஒரு நாளில் செய்யவேண்டாம். ஒரு 15 நாளில் கொஞ்சம் கொஞ்சமாக செய்யவேண்டும். யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாதல்லவா.

ஆகக்கூடி ஒரு 15 நாளில் 108 பின்பற்றுவோர் சேர்ந்து விட்டார்கள். இது போகவும் மேலும் பலர் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. ஆஹா!!! உங்கள் பதிவு பிரபலம் ஆகிவிட்டது!!!

அடுத்ததாக ''பின்னூ'' எனப்படும் பின்னூட்டங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

அதற்குள் சில அருஞ்சொற்களின் பொருள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பின்னூ/பின்னு/ எனப்படும் பின்னூட்டங்கள். ஆங்கிலத்தில் comments


மொக்கை – சுவாரஸ்யமில்லாத வெட்டிப்பதிவு

சல்லியடித்தல் – கூட்டத்தில் கோவிந்தா போடுதல்

கும்மியடித்தல் – ஜால்ரா போடுதல்

வினை – நீங்கள் போடும் பின்னூட்டங்கள்

எதிர்வினை – உங்கள் பின்னூட்டங்களுக்கு மற்றவர்கள் போடும் கருத்துக்கள்.

இந்த இரண்டும் நியூட்டனின் 3ம் விதியிலிருந்து கடன் வாங்கப்பட்டவை.

பதிவர் சந்திப்பு : இவை மற்ற பதிவர்களை சந்தித்து கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கு என்று சொல்லப்படுபவை. ஏமாறாதீர்கள். கடற்கரையில் காந்தி சிலைக்குப்பின்னால் கூட்டப்படும் கூட்டங்கள் தவிர மற்றவை அனைத்தும் பதிவர்களின் பழங்கணக்குகளை நேர் செய்வதற்காகவே. இவை யாவும் ஒரு நல்ல ஓட்டலிலேயே (நல்ல = நாலு பதிவர்கள் உட்கார்ந்து சாவகாசமாக நல்ல தண்ணீரை பருகும் ஸ்தலம்) நடக்கும்.

கஸ்மாலம், சோமாரி, பன்னாடை, பன்னி – நண்பர்களை செல்லமாக கூப்பிடும் பெயர்கள்.

ஆப்பு வைத்தல் – இதன் சரியான பொருள் எனக்கு இன்னும் புலப்படவில்லை. மொத்தமாக ஒருவனுக்கு கெடுதல் செய்வது என்று நினைக்கிறேன்.

மீதியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடர்வது பாகம் 6...

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? தொடர்ச்சி


நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-4)





பாகம் 3 ல் சும்மா ஒரு பெண்ணின் படத்தை மட்டும் போட்டிருக்கிறீர்களே, இது ஏன் என்ற எண்ணம் இதற்குள் வந்திருக்கவேண்டுமே? எல்லாம் காரணமாகத்தான்! சும்மா வளவளவென்று டிவி சீரியல்களில் வருகிற மாதிரி வசனமாகவே உங்கள் பதிவு இருந்தால் உங்கள் பதிவை ஒருவரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.
இன்றைய உலகில் எல்லாவற்றிலும் ஒரு கவர்ச்சி தேவைப்படுகிறது. பத்திரிக்கைகளைப்பாருங்கள். அல்லது டிவி விளம்பரங்களைப்பாருங்கள். தேவை இருக்கிறதோ இல்லையோ, ஒரு பெண்ணின் படம் வருகறது. இன்றைய நடப்பு அதுதான். ஆகவே, ‘உலகத்தோடொட்டு ஒழுகல்’’ என்கிற இலக்கணப்படி உங்கள் பதிவிலும் ஆங்காங்கே இந்த மாதிரி படங்களைப் போடவேண்டியது அவசியம். உங்கள் பதிவை பிரபலமாக்க வேண்டுமல்லவா?
முதல் பதிவு போட தயாராகிவிட்டீர்களா! பதிவில் எதைப்பற்றி எழுதலாம் என்று யோசிக்கிறார்களா? எழுதுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. அவைகளில் சில.
சினிமா, அரசியல் (ஆட்டோ வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்), சமூகப்பிரச்சினைகள், சிறுகதை, கேள்வி-பதில் (கேள்வியும் பதிலும் நீங்களே எழுதவேண்டும்), அடுத்த பதிவர்களை வம்புக்கு இழுத்தல் (மூக்கு உடைபட அல்லது போலீஸ் ஸடேஷன் போக தயாராக இருக்கவேண்டும்) - இப்படியாக ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு பதிவுக்கும் நல்லதாக, அதாவது வாசகர்களை சுண்டி இழுக்கும்படியான தலைப்பு வைக்கவேண்டும். தமிழ் பத்திரிக்கைகள் படிக்கும் வழக்கம் இருந்தால் கவலை இல்லை. உதாரணத்திற்கு – ‘பிரபல நடிகையின் படுக்கை அறையில் ??? – இது தலைப்பு.  ‘ஒரு கரப்பான் பூச்சி இருந்தது – இது செய்தி.
இன்னொறு விஷயம். ஐயோ, தலைப்பு இப்படி வைத்து விட்டோமே, அதற்கு ஏற்றாற்போல் என்ன எழுதுவது என்று வீணாய் கவலைப்படாதீர்கள். தலைப்பிற்கும் உள்ளே எழுதப்படும் விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் வேண்டியதில்லை. கவலை வேண்டாம்.
சரி, உங்கள் முதல் பதிவை எழுதி ப்ளாக்கில் ஏற்றியாகிவிட்டதா? இனிமேல்தான் உங்களுக்கு நிஜமான வேலை. அடுத்த பதிவில் சந்திப்போமா?
பாகம் 5 - தொடரும்



சனி, 17 அக்டோபர், 2009

உங்களுடைய பதிவு பிரபலமாக வேண்டுமா? (பாகம்-3)


Posted by Picasa

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-2)

பாகம் 1ல் கொடுத்த குறிப்புகளை நன்றாக மனதில் பதிய வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்த்தாக உங்கள் முதல் பதிவை எழுதலாமா? அதற்குள் உங்களைப்பற்றிய சில தகவல்கள் வேண்டும். அதற்காக ஒரு QUIZ தயார். இந்த QUIZ ல் 100க்கு 100 மார்க் வாங்கினால் மட்டுமே நீங்கள் பதிவு எழுத லாயக்கானவர். இல்லையென்றால் பார்வையாளர் பெஞ்சில் உட்காரத்தான் லாயக்கு.
1.       சரளமாக உண்மை கலவாத பொய் எழுத வருமா?
2.       மெட்ராஸ் பாஷை, குறிப்பாக அதில் உள்ள வசைச்சொற்கள், நன்றாக தெரியுமா?
3.       வீட்டிற்கு ஆட்டோ(?) வந்தால் சமாளிப்பீர்களா?
4.       டாஸ்மாக்கில் 5 ரவுண்டு போட்ட பிறகும் ஸ்டெடியாக நிற்பீர்களா?
5.       உங்கள் மூக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறதா? யாராவது உங்கள் மூக்கில் குத்தினால் தாங்குவீர்களா? ரத்தத்தை பயமில்லாமல் பார்ப்பீர்களா?
6.       அடுத்த பதிவர்களின் அந்தரங்கங்களை சேகரித்துக்கொடுக்க நம்பிக்கையான நண்பர்கள் உண்டா?
7.       அப்படி கிடைத்த தகவல்களை வைத்து அவர்களுடைய குடும்ப நபர்களைப்பற்றி அவதூறுகள் கூறி பதிவுகள் போடமுடியுமா?
8.       உங்களை ஒரு சமயம் காவல்துறையில் கூப்பிட்டால், இன்ஸ்பெக்டர் கூப்பிட்டபொழுதெல்லாம் சலிக்காமல் போக முடியுமா?
9.       உங்கள் மனச்சாட்சியை ஒதுக்கித்தள்ள முடியுமா?
10.   உங்களை அடுத்த பதிவர் போட்டுத்தாக்கும்போது அதைத்தாங்கிக்கொண்டு திருப்பித்தாக்க முடியுமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் அளித்தீர்கள் என்றால் நீங்கள் பதிவு எழுதலாம்.
கூடவே கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கும் அர்த்தம் கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
1.       உங்கள் தளத்தை பின்பற்றுவோர்; 2. உங்கள் தளத்திற்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 3. உங்கள் பதிவிற்கு போடப்படும் பின்னூட்டங்கள்.
இந்த மூன்றும்தான் உங்கள் தளத்தின் பிரபலத்தின் அளவுகோல். இவை அதிகமாக அதிகமாக உங்கள் தளத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகும். அதனால் எனக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம்.


யாரும் கூறாத ஒரு ரகசியத்தை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன். பதிவர்களில் இருவகை உண்டு. ஒன்று-வெட்டிப்பதிவர்கள். இவர்கள் சும்மா பொழுது போக்குவதற்காக பதிவு போடுபவர்கள் (என்னை மாதிரி). இரண்டாவது வகை-காரியப்பதிவர்கள். உலகிலே முக்கிய காரியம் என்ன? பணம் பண்ணுவதுதான். இந்த பதிவுகளிலே எப்படி பணம் பண்ணமுடியும் என்று நினைக்கலாம். பதிவுகளிலே பல விளம்பரங்கள் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவை பணம் காய்க்கும் மரங்கள். உங்கள் தளத்தை எவ்வளவு பேர் பார்க்கிறார்களோ அந்த அளவு உங்களுக்கு அந்த விளம்பர நிறுவனங்கள் பணம் கொடுப்பார்கள்.
சில தளங்களில் வருகை தந்தோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும். அந்த தளங்களில் வரும் விளம்பரங்களினால் அதிக வருமானம் வரும்.
உங்கள் தளத்தையும் அப்படி பணங்காய்ச்சி மரமாக மாற்ற விருப்பமா? தொடர்ந்து படியுங்கள்.


அடுத்தது பாகம்-3




நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-1)

எல்லோரும் தாங்கள் பிரபல பதிவராக ஆகவேண்டுமென்றுதான் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் (இருந்தால் மட்டுமே) மேலே படிக்கவும். அந்த ஆசை இல்லையென்றால் உடனே இந்த தளத்தை மூடிவிட்டு வேறு உபயோகமான வேலையைப்பார்க்கவும்.
ஆனால் இவை அனைத்தும் என் சொந்தக்கருத்துக்களே. யாருடைய மனதையும் எள்ளளவும் புண்படுத்துவதற்காக இந்த பதிவை எழுதவில்லை. அப்படி யாராவது தங்கள் மனது மிகவும் புண்பட்டு விட்டதாக எண்ணினால் அவர்களுக்கு என் அட்வான்ஸ் அபாலஜூஸ் (apologies). (சரியான தமிழ் வார்த்தைகளை யோசிக்க சோம்பல்). புதிதாக பதிவு எழுதப்போகும் உங்களுக்காக மிகவும் எளிய முறையில் படிப்படியாக கொடுத்திருக்கிறேன்.
முதல் படி :-
நீங்கள் முதலில் ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும். இந்த பதிவைத்தான் நீங்கள் பிரபலப்படுத்தப போகிறீர்கள். பதிவு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாதா? அப்படியென்றால் நீங்கள் இந்த விளையாட்டிற்கு லாயக்கில்லை. பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருங்கள்.
இரண்டாவது படி:-
இந்தப்பதிவிற்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் அல்லவா? இது ரொம்ப, ரொம்ப முக்கியம்! சுடுகாடு’’, பாழுங்கிணறு’’, ‘பன்னிக்குட்டி’’, ‘எங்க வீட்டு பொடக்காழி’’ இந்த மாதிரி ஒரு நல்ல பெயராக யோசித்து ஒரு பெயர் வைக்கவும். அடுத்த்தாக உங்களுக்கு (பதிவர்) ஒரு பெயரை தேர்ந்தெடுக்கவும். காட்டான், மொல்லமாரி, முடிச்சவிழ்க்கி, கொலைகாரன், இந்த மாதிரியான ஒரு பெயரை உங்களுக்கு சூட்டிக்கொள்ளவும்.
என்னய்யா இது அக்கிரமமாக இருக்கிறதே! படித்தவர்கள் எழுதும் வலைத்தளங்களை இப்படி கொச்சைப்படுத்தலாமா என்று நினைக்கிறீர்களா? இதற்கே இப்படி தயங்கினால் நீங்கள் வலையுலகத்தில் ஓரங்கட்டப்படுவீர்கள். தயக்கப்படாதீர்கள். இனி வருபவை இதைத்தூக்கி சாப்பிடும்படியாக இருக்கும். முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள். தைரியமாக மேலே படியுங்கள்.
மூன்றாவது படி:-
ஆகக்கூடி உங்கள் முதல் பதிவை ஆரம்பித்து விட்டீர்களா! வாழ்த்துக்கள். இதே மாதிரி மேலும் ஒன்பது பதிவுகள் வெவ்வேறு பெயர்களில் ஆரம்பியுங்கள். எதற்காக இன்னும் ஒன்பது பதிவுகள்? எனக்கு ஒரு பதிவை பிரபலமாக்கினால் போதுமே, எதற்காக இந்த வீண் வேலை என்று நினைக்கிறீர்களா? பதிவுலக நுணுக்கங்கள் புரியும் வரை குரு சொல்வதை ஒழுங்காகக்கேட்டுப்பழகுங்கள். எல்லாம் உங்கள் நன்மைக்கே!!!
நான்காவது படி;-
உங்கள் நண்பர்களில் கணினி வைத்திருப்பவர்கள் பத்து பேரைப்பிடியுங்கள். அவர்களைத் தாஜா செய்து, அவர்களை நன்றாக கவனித்து – அது எப்படி என்பது போகப்போக விளங்கும் – அவர்கள் ஒவ்வொருவரும் தலா பத்து பத்து வலைத்தளங்களை ஆரம்பிக்கச்சொல்லுங்கள். இது எதற்கு என்று பின்னால் விளக்குகிறேன்.
ஆச்சா! இப்போது நீங்கள் உங்கள் பதிவை பிரபலமாக்குவதற்கு வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்தாகிவிட்டது. இனி பதிவு எழுதவேண்டியதுதான் பாக்கி.
இதுவரை எழுதியவற்றையெல்லாம் பலமுறை படித்து மனதில் பதிநவைத்துக்கொள்ளுங்கள். மீதி அடுத்த பாகத்தில்....
பாகம் 2 – தொடரும்...